புதன், மே 22, 2013

கோடை






எப்போதோ ஈரங்கண்ட கரிசக்காட்டுப் படிவு
பாய்போல் சுருண்டு பிளந்த வெடிப்பில்
நொடுக் வெடுக் கென்று கேட்ட சப்தம்
நடக்கையில் சுட்டபடி கோடையிது என்றது.

கசிவில் ஈரம் சேர்த்து மணலாசனத்தில்
மண்பானை வீற்றிருக்க வெட்டிவேரின் வாசத்தோடு
சில்லென்ற ஓரமுதம் தொண்டைவழி உயிர்வார்த்து
ஈதுமிலை கோடையி லையேல் என்றது.

அவினியை விடவும் ஆதன் சுட்டெரிக்க‌
இருபந்து அடுப்பு அடுத்தது எதையெரிக்க?
பலகிளை நதிபோலும் நசநசப்பு வழிந்தோடி
சோர்தல் சேர்த்திது தான்கோடை என்றது.

நரகினில் சுவர்க்கம் தேடினும் உண்டோ?
சுடுகோள் அரசனின் ஆக்கிரமிப்பு ஆட்சியில்
பாரத்தை இறக்கிப் பதவிசாய் மகிழ்ந்திட்ட
தூரத்து வேம்பு நிழல்தீவு வேறென்னவாம்?

மேகமிலா விரிபரப்பில் ஓடியாடி விளையாடி
சும்மாடு தாண்டியும் சுட்டெரிக்கும் சூரியனே
மெதுவாய்க் கீழிருந்து மேலேகி மறைவதற்குள்
பேரறியாச் சங்கடங்கள் இத்தனையா தருவாய்நீ?

தத்தியிவள் கேள்விக்கோர் பதிலைச் சொல்லிவிடு!
காரணத்தைச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிடு
வன்கோடை நன்கொடையாம் இடிமழை சென்றதெங்கே?
சித்திரையில் மெய்த்துநீ ஐப்பசியில் பொய்ப்பதேன்?

1 கருத்து: