திங்கள், பிப்ரவரி 20, 2012

கும்கி - 6

இயற்கைத் தூரிகை வரைந்த நவீனஓவியம்
முயற்சிப் புழுஎட்டிய வெற்றிச் சிகரம்
சிறகாலே பூவிரிக்கும் வண்ணத் தூதகம்
மதுவாலே திளைக்கும் வாழ்க்கைப் பயணம்

நூறாய்ப் பறக்கக் கண்கொளாக் காட்சியில்
எதைத் துரத்த எதை விடவெனச்
செல்வன் ஆருக்கும் பிடிபடாது பறந்தான்
தானுமொரு வண்ணத்துப் பூச்சியென எங்கும்

கிணற்று ஆழத்தைக் கண்ணால் வியந்தபடி
எல்லை எதுவரை தமதென அளந்தபடி
தம்பதியர் அமர்ந்தனர் எளிமைச் சுகமாம்
பின்னிப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில்

குற்றாலமாய்ப் பாய்ச்சிய நீரின் வேகத்தைக்
கைநீட்டித் தடுத்துப் பார்த்துத் தோற்றதில்
செல்விக்கு முகமெங்கும் முத்தாய் விழுப்புண்கள்!
வாய்க்கால் கால்நனைத்துச் செய்தனள் உடன்படிக்கை

வரப்பெங்கும் நீர்வழிப் பாட்டையில் நடந்தாள்
இருமருங்கும் நெற்கதிர் தலைவணங்க ராணியாய்
அறுவடைக்குத் தயாரென்று இராமையா விளக்க
புதிதான சொற்களைப் புரியாமல் சிரித்தாள்.

வரப்பினின்று இராமையா கைபற்றி ஏறினாள்
காற்பெருவிரல் சுற்றியபடி மெல்லிய கயிறு
கயிறென்று நினைத்துக் கையெடுத்து நீக்கினாள்
கயிறல்ல வளைந்து நெளிந்தது ஒருஜந்து.

பாம்பென்றே பயந்து அலறித் தவித்தாள்
உதறிய கையை நீங்காது பற்றியதது
பாம்பன்று மண்புழு என்றையம் நீக்கினார்
அவ்விடம் அனைத்தும் அறிந்த இராமையா.

புழுவாவென்றே பொசுக்கென்று நசுக்கப் போனாள்
வேண்டாமம்மா என்றே தடுத்தார் தாத்தா
நானுமுயிர் தானே என்றொரு குரலும்வர
ஆச்சரியமா யங்குமிங்கும் தலைதிருப்பிப் பார்த்தாள்

மண்புழு பேசுமா? அவளுடன் பேசிற்று!
உனக்குப் பேசவும் வருமோ என்றாள்
உயிர்போந் தருவாயில் எல்லாம் வருமென்றது!
வியந்ததன் பெயர்கேட்கச் சொன்னது 'கும்கி'யென! 

(தொடரும்)

கும்கி - 5

முதல்வந்து அமர்ந்த செல்வனின் முன்னிருக்கை
முகஞ்சுருங்கி அழுத செல்விக்கே கிடைத்தது!
மாசுநிறை நகரநரகம் பின்நகரச் சென்றனர்
பாசிநிறை கிராமச் சொர்க்கம் நோக்கி

கருப்புச் சாலைகள் நீண்டெங்கோ செல்ல‌
பசுமைச் சோலைகள் நோக்கித் திரும்பினர்!
அலையாடும் படகாய் வாகனமும் தலையாட்டிச்
செம்மண் சாலையில் ஓடியது புழுதிபறக்க‌!

கிராம எல்லையில் தாண்டி யார்போவாரென‌
அரிவாள் குத்தீட்டி வேற்கம்புப் படையோடு
உக்கிரமாய் நின்றிருந்தார் பரிமேல் அய்யனார் 
பயத்துடன் மழலைகள் பணிந்து வணங்கினர்!

வந்தது கிராமம் பெருவளக்கரைப் பெயர்கொண்டு
எண்ணி ஐம்பது இல்லங்கள் மட்டுங்கொண்டு
சாரைப் பாம்பாய் நெளிந்த பாதையில்
ஊரைத் தாண்டிச் சென்றது வாகனம்!

ஆழப் பதிந்த வாழை யோர்புறம்
வாழத் தந்திடும் செந்நெல் லோர்புறம்
சூழக் கரைவளர் தென்னை யோர்புறம்
நீழல் தருமினிய மாக்கூட்ட மோர்புறம்

எங்கெங்கு காணினும் பசுமை வெள்ளம்
எங்கிருந்தோ நாசியைத் தாக்கும் சுகமணம்
மேடையேறப் பயமிலாக் குயிலின் கானாமிருதம்
மெய்யைத் தீண்டிடும் தென்றல் மென்கரம்!

கண்டுமயங்கி நின்றோரைக் கண்டொருவர் ஓடிவந்தார்
தவமணியென‌க் கண்டதும் மெய்மலர்ந்து வரவேற்றார்!
உடல்வன் மையும் உள்ளமென் மையுங்கொண்டு
உடையில் மட்டும் அழுக்கிருக்கும் முருகையன்!

(தொடரும்)

கும்கி - 4

ஊர்வலக் காட்சி:

ப‌ள்ளி யெழுச்சி காலை எட்டு
பள்ளி சென்று மீள்தல் நான்கு
பாடச் சுமை இறக்கம் எட்டு
பள்ளி சோர்வது இரவு பத்து

முற்காலத்திற் பொழுதுண்டு போக்கில்லை
தற்காலத்திற் போக்குண்டு பொழுதில்லை
பொற்காலம் ஈதென்றே கருதுவார்
கற்காலம் நோக்கிப் போவதறியார்

நொடியேனும் அசராது ஓரிடத்தில் நில்லாது
கடிகாரம் விரட்டியே போவும் காலமும் 
விடுமுறைக் காலமோ முறைவிடுதல் இல்லாது
தொலைக்காட்சிப் பெட்டியே கதியென் றாகிடும்.

இன்று பள்ளிக்கு விடுமுறை யாதலால்
கன்றுகள் துள்ளிப் படங்காணத் துடித்தனர்
என்றும் போலவே மின்சாரம் போனது
என்றும் இல்லாமல் திரும்ப வராமல்!

ஓடி விளையாடப் பெற்றோர் விடுவதில்லை
ஆடி விளையாடப் பிள்ளைகள் விரும்பவில்லை
வேறு வழியின்றி உலகையே சலித்து
வேறு எங்கேனும் செல்ல நினைத்தனர்

நவமணியும் விளையும் நலமிகு நிலபுலனாய்த்
தவமணியின் தந்தை சேர்த்திட்ட சொத்து
தூரத்துக் கிராமத்தில் தனியாய்க் கிடந்தது
நேரத்தைக் கழித்திடக் கிளம்பினர் அங்கு.

(தொடரும்)

திங்கள், பிப்ரவரி 13, 2012

காதல் வந்து விட்டால்...




கண்கள் மூடிடக் காட்சிகள் விரியும்
பார்வைப் படையலில் பசிகள் திரியும்
ஏழையின் மனத்தில் கற்பகம் சொரியும்
செல்வன் மனத்தில் பஞ்சத்தீ எரியும்

உடலத‌ன் எடைநீங்கிப் புவிக்குள் புகுந்திடும்
உயிரதன் எடைவீங்கி எண்ணிலா மடங்கிடும்
தலைவன் வரும்வரை காலம் வெறுப்பாகும்
தலைவன் வந்ததும் காலமே வெறுப்பாகும்

மூளைக்கும் மனத்துக்கும் தொடர்பு அறுந்திடும்
கலங்கிய எதிலும் தலைவன்முகம் தெளிந்திடும்
தலைவனைக் கண்டதும் தெளிந்ததும் கலங்கிடும்
நோயே மருந்தாகும் மருந்தில்லா நோயுமாகும்

சொர்க்கமும் நரகமும் ஓரிடமாய்க் கண்டிட‌
ஆதவன் பகைவனாய் நிலவும் எதிரியாய்
வானம் எறிந்திடும் எரிகல்லாய்ச் சொல்விழும்
உலகம் துச்சமாகும் இன்பம் மிச்சமாகும்

காதலை முயன்று காதலைப் பயின்று
காதலைக் கரைத்துக் காதலைக் குடித்து
காதலைச் சமைத்துக் காதலைத் தின்று
சாதலும் மறையும் காதலே நிறையும்.