திங்கள், செப்டம்பர் 17, 2012

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 34 கலோரி


34. கலோரி - Calories (Units of Energy)

கண்டறிந்தவர்: ஜேம்ஸ் ஜூல் ( James Joule)



கண்டறிந்த ஆண்டு: 1843

சக்தி என்பது பலதரப்பட்டதாக, பல மூலங்களிலிருந்து, பலவடிவங்களில் நமக்குக் கிடைக்கின்றது. வெப்ப சக்தி, மின் சக்தி, காந்த சக்தி, இயங்கு சக்தி என்று பல சக்திகளும் இருக்கின்றன. அச்சக்திகளை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றிக் கொள்ள இயலும் என்பதை இப்போது நாம் உணர்ந்திருக்கின்றோம். இவ்வாறு மாற்றும் போது மொத்த சக்தியையும் நம்மால் மாற்ற இயலுவதில்லை. சிறிய பகுதியை மாற்றம் நிகழும் போது இழக்கின்றோம் என்றாலும் மாற்றமுடியும் என்பதும், அதை அறிந்திருக்கின்றோம் என்பதும் தொழில் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கின்றது. இருந்த போதிலும் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்விஷயத்தை யாரும் அறிந்திருக்கவில்லை.

ஜேம்ஸ் ஜூல் எந்த ஒரு சக்தியையும் அதற்குச் சமமான வெப்ப சக்தியாக மாற்ற இயலும் என்று கண்டறிந்தார். இதன் மூலம் சக்தியின் பொதுவான தன்மையை அனைவரும் உணரச் செய்தார். அனைத்து சக்திகளும் சமமானவையே என்றும் நிரூபணமானது. மேலும் 40 ஆண்டுகள் கழித்து சக்தியைச் சேமித்துப் பாதுகாக்கும் விதியைக் (Conservation of energy) கண்டுபிடிக்கவும் ஆதாரமாக இது இருக்கின்றது.

எவ்வாறு கண்டறிந்தார் என்று காண்போம்.

இங்கிலாந்தின் லான்சைசரில் மதுபானம் உற்பத்தி செய்து தொழில் செய்து வந்த ஒரு வசதியான குடும்பத்தில் 1818ன் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்தார் ஜேம்ஸ் ஜூல். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனி ஆசிரியர்களை வைத்துப் பாடங்களைக் கற்றார் ஜூல். தனது 20வது வயதில் குடும்பத்தொழிலான மதுபான உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்தார்.

உடனேயே தனது தொழிலில் நீராவி முறையிலிருந்து மின்சார முறைக்கு மாற்றி மதுபானம் உற்பத்தி செய்ய முடியுமா என்று ஆராய்வதைத் தனது பிரதான பணியாக ஆக்கிக் கொண்டார். இயந்திரங்களையும், அவை சக்தி வெளியிடுவதையும் பற்றி ஆர்வத்துடன் கற்றறிந்தார். மின்சக்தி சுற்றுகள் பற்றியும் அறிந்தார். மின்கம்பிகளின் வழியே மின்சாரம் பாயும் போது அவை சூடாவதைக் கண்டு அதிசயித்தார். வெகுவிரைவிலேயே செல்லும் மின்சாரத்தின் ஒரு பகுதி சூடாவதற்குச் செலவிடப்படுவதை உணர்ந்து கொண்டார்.

அவ்வாறு வெப்பமாவதற்குச் செலவிடப்படும் சக்தியின் அளவு எவ்வளவு என்று அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். மேலும் மின்சக்தியிலிருந்து வெப்பசக்தி எவ்வாறு உருமாறுகின்றது என்பதையும் கண்டறிய முனைந்தார். அவரது ஆய்வுச் சோதனைகளின் போது அவர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஒருசமயம் அவரது பணிப்பெண் மின்சாரத்தாக்குதலால் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது! இறுதியில் அவர் மதுபான உற்பத்தியை மின்சாரமுறைக்கு மாற்றாவிட்டாலும் சக்தியை ஒரு வடிவிலிருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றும் ஆராய்ச்சியில் அவரது கவனம் திரும்பியது.

ஜூல் ஒரு ஆத்திகவாதி. அடிப்படையிலேயே அனைத்து வகையான சக்திகளுக்கும் மூலாதாரம் ஒன்றாகத் தான் இருக்கவேண்டும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். வெப்ப சக்தியே அனைத்துக்கும் மூலசக்தி என்றும் அந்த இயல்பான சக்தியிலிருந்தே மற்ற சக்திகள் அனைத்தும் அவதாரம் எடுப்பதாகவும் சந்தேகித்தார்.

ஜூல் தனது கவனத்தை இயந்திர சக்தியை வெப்ப சக்தியாக மாற்றுவதில் செலுத்த ஆரம்பித்தார். உண்மையில் இயந்திரத்தால் உருவான எந்த ஒரு சக்தியின் மூலமும் நகரும் ஒரு பொருள் (அச்சக்தியைத் தொடர்ந்து கொடுக்காத போது) காலப்போக்கில் நின்று விடுகின்றது. அப்படியானால் கொடுத்த சக்தியெல்லாம் என்ன தான் ஆயிற்று? இயங்குசக்தியிலிருந்து வெப்பசக்தியை அளக்க நீரைப் பயன்படுத்தி பலவித சோதனைகளை ஜூல் மேற்கொண்டார்.

ஜூலின் இரண்டு பரிசோதனைகள் மிகவும் பிரபலமானது. முதலில் காற்றடைக்கப்பட்ட ஒரு செம்பு உருளையை நீருக்குள் அமிழ்த்தி நீரின் வெப்பத்தை அளந்து கொண்டார் ஜூல். பின்னர் அந்த உருளைக்குள் சுற்றுப்புறக் காற்றழுத்ததைக் காட்டிலும் 22 மடங்கு அதிக அழுத்தம் ஏற்படுமாறு காற்றைச் செலுத்தினார். வாயுவிதிகளின் படி, அதிகக் காற்றழுத்தம் அதிக வெப்பத்தை உருவாக்க வேண்டும். ஆம்! நீரின் வெப்பம் 0.285 டிகிரி பாரன்ஹீட் ஏறியிருந்தது. இயங்கு சக்தி அங்கு வெப்பசக்தியாக மாறியிருந்தது.



அடுத்த சோதனையாக, ஒரு செங்குத்தான தண்டில் இருபுறமும் துடுப்புகளை ( மிதிவண்டியின் பெடல் போல) அமைத்து நீருக்குள் அமிழ்த்தி, துடுப்புகளைத் துழாவிச் சுழலச் செய்தார். அப்போதும் நீரின் வெப்பம் அதிகரித்தது. அதன் மூலம் இயங்குசக்தியின் ஒருபகுதி வெப்பசக்தியாக மாற்றமடைவது நிரூபணமானது.



இருந்தாலும் ஜூல் தனது ஆராய்ச்சியைப் திரவ உலோகமான பாதரசத்தின் பக்கம் திருப்பும் வரை அவரால் ஒரு முடிவுக்கு வரமுடியாமலே இருந்தது. பாதரசத்தை வெறுமனே கலக்குவதன் மூலமே அதன் வெப்பநிலை சீரான அளவில் ஏறுவது சோதனையில் அறிய முடிந்தது.

முடிவாக, ஜூல் எந்த ஒரு சக்தியையும் அதற்குச் சமமான வெப்ப சக்தியாக மாற்றமுடியும் என்று கண்டறிந்தார். 1843ல் சக்தியின் பொதுவடிவான வெப்பசக்தியை அளப்பதற்கான அளவீடையும் அறிமுகம் செய்தார். இயற்பியலாளர்களும் வேதியியல் வல்லுநர்களும் அவரது அளவீடைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதற்கு ஜூல்ஸ் என்றும் பெயரிடப்பட்டது. உயிரியல் வல்லுநர்களோ 4.18 ஜூல்ஸை ஒரு கலோரி என்று பெயரிட்டு அப்பெயரில் அழைக்க ஆரம்பித்தனர். எந்த ஒரு சக்தியையும் வெப்ப சக்தியாக மாற்ற முடியும் என்று கண்டறிந்ததன் மூலம், சக்தி, இயக்கம் மற்றும் அது சார்நத நுட்பங்களில் பலமுன்னேற்றங்கள் ஏற்பட வழிவகுத்தார் ஜூல்.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

அலைகள் நிற்கட்டும்



என்னுலகம் சகலமும் ஒருநிமிடம் நிறுத்தினேன்.
முன்புறக் கண்களைக் கதவடைத்துப் பூட்டிக்கொஞ்சம்
காதுகளைக் கண்களாக்கி அகந்திறந்து பார்த்தேன்.
ஒலிகளே ஒளிகளாய் புலனெங்கும் ஓடக்கண்டேன்.
எம்மொழியாலும் சொல்லவியலா ஒலியெழுத்தில்
நாள்முழுதும் ஓயாது ஜெபித்தது கடிகாரம்.
எங்கோ தூரத்தின் ஓரத்தில் இடவலமாய்
இரைச்சலுடன் வாகனத்தின் தரைதேய்ப்பு
பாய்ந்து தோய்ந்து தேய்ந்து மாய்ந்தது.
கணினியும் அதன்காற்றாடியும் எனக்கே எனக்காய்
மாடாய் உழைக்கின்ற சப்தமும் நிறைந்தது.
மௌனத்தின் விளிம்பு வரை சென்றாலும்
பெருங்கடலைத் தீண்டவோ தாண்டவோ
திராணியற்று நின்றுவிட்டேன்.
அலைகள் நிற்கட்டும்!

முகமூடிகள்



சுயத்தை மறைக்க‌
ஆதாம் ஏவாளின்
அரையில் இருந்து
சிரம் வந்து சேர்ந்த
நவீனப் பயணிகள்

உள்ளே புழுக்கள் நெளிதலையும்
வெளியே பழுத்த தோலாய்
உள்ளே நமுட்டுச் சிரிப்பையும்
வெளியே அன்பு நீவுதலாய்
மாற்றிக் காட்டும் சௌகரியங்கள்

ஆட்டி வைப்பவன் ஒருவன்
ஆடித் தீர்ப்பவன் கருவி
பாரீரே பாரீர் என்றே
பகுத்தறிந்து பார்க்கச் சொல்லும்
நிதர்சன நாத்திக ஆத்திகங்கள்.

அண்ணனுக்குத் தம்பியாய்
மகனுக்கு அப்பனாய்
தோழனுக்குக் தோழனாய்
பகைவனுக்குப் பகைவனாய்
நடித்துத் தான் பாரென்றே
சொன்ன கண்ணனின்
கீதைக் கருவிகள்.

ஒருமித்த காதலின்றியே
காதல் கொண்டதாய்
நடிக்கையில் மட்டும்
கொஞ்சமும் பொருந்தாமல்
உறுத்தும் நெருடல்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 33 - பனி யுகம்


33. பனி யுகம் (Ice Ages)

கண்டறிந்தவர்: லூயி அகாசிஸ் (Louis Agassiz)




கண்டறிந்த ஆண்டு: 1837

புவியின் தட்பவெப்ப நிலை அதிகமான மாறுதல் ஏதுமின்றியே எப்போதும் இருக்கின்றது என்பதே அனைவரின் யூகமாக இருந்தது. லூயி அகாசிஸோ ஐரோப்பா முழுதும் ஒரு காலத்தில் பனிப்பாறைகளாய் இருந்தது என்று அத்தாட்சியுடன் கண்டுபிடித்துச் சொன்னதும் தான் உலகத்தின் மொத்த தட்பவெப்பநிலையும் எப்போதும் மாறுதலுக்கு உட்படுகின்றது என்று உணரமுடிந்தது.

அவரது இந்தக் கண்டுபிடிப்பினாலும் அயராது அவர் சேர்த்த தகவல்களாலும் புவியின் ஆரம்ப வரலாறு பலவித ஆராய்ச்சிகளின் மூலம் அறிய வந்தது எனலாம். எப்படிக் கண்டறிந்தார் லூயி?

லூயி அகாசிஸ் தன்னை ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்பதைக் காட்டிலும் புவியியல் வல்லுநராகவே கருதிவந்தார். அவரது சொந்த நாடான ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைகளில் பல வாரங்கள் மலையேறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 1820ன் இறுதியில் ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்குகளின் முகப்புகளில் இருந்த பனிப்பாறைகளில் பல ஆர்வமூட்டும் வடிவங்கள் இருப்பதைக் கண்டார். முதலில் பனிப்பாறைகளின் அடிப்பாகம் ஆங்கில எழுத்தான 'U' வடிவிலும், அதன் பள்ளத்தாக்கின் கீழ்ப்பாகம் தட்டையாகவும் இருப்பதைக் கண்டார். அதே சமயத்தில் நதியினால் உருவான பள்ளத்தாக்குகள் ஆங்கில எழுத்தான 'V' வடிவில் இருப்பதையும் கண்டார். முதலில் இப்பனிப்பாறைகள் இயற்கையாகவே இப்பள்ளத்தாக்குகளில் உருவாகி இருக்கும் என்று ஊகித்தார் லூயி. பின்னர், இந்தப் பனிப்பாறைகளே இப்பள்ளத்தாக்குகளை 'U' வடிவத்துக்குச் செதுக்கியிருக்கின்றன என்று உணர்ந்தார்.

அடுத்ததாக பனிப்பாறைப் பள்ளத்தாக்குகளின் பக்கவாட்டுப் பாறைகளில் குறுக்காகப் படுக்கை வசத்தில் பல கோடுகளும் கீறல்களும் உருவாகி இருப்பதையும் கண்டார். இக்கோடுகள் பனிப்பாறைகளின் தற்போதைய இருப்பிடத்துக்கு ஒரு மைலோ அல்லது அதற்கு மேலாகவோ தள்ளி இருக்கக் கண்டார். மேலும், இவ்வாறு உருவான பல பள்ளத்தாக்குகளிலும் அதிசயிக்கத் தக்கவகையில் உருண்டையான பெரிய பாறைகளும், கற்குவியல்களும் அவையாவும் எப்படி வந்தன அல்லது உருவாகின என்று கண்டறிய முடியாத வண்ணம் இருப்பதைக் கண்டார்.

விரைவிலேயே, இந்தப் பனிப்பாறைகள் யாவும் அளவில் மிகப் பெரியதாகவும் மிக நீளமானதாகவும் வெகு காலத்துக்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்றும், இப்பள்ளத்தாக்குகள் உருவாகவும், அவ்வாறு உருவாகும் போது பாறைகளை உருட்டி வந்து வழியில் கீறல்களையும், பள்ளத்தாக்கின் அடியில் விநோதமான கற்குவியல்களும் உருவாக இவையே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ஊகித்தார் லூயி.

பின்னர் 1830ன் ஆரம்பத்தில் அவர் இங்கிலாந்திற்கும் மற்றும் வடக்கு ஐரோப்பாவின் பள்ளத்தாக்குகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கும் இவர் 'U' வடிவப் பள்ளத்தாக்குகளையும், குறுக்குவாட்டுக் கோடுகளையும் விநோதமான கற்குவியல்களையும் கண்டு அதிசயத்தில் ஆழ்ந்தார்.

ஸ்விட்சர்லாந்தில் இவர் கண்ட அதே காட்சி இங்கேயும் இருக்கக் கண்டார். ஆனால் அப்பகுதியைச் சுற்றிலும் பல நூறு மைல்களுக்கு எவ்விதப் பனிப்பாறைகள் மட்டும் காண இயலவில்லை! 1835ல் தான் அவரால் மற்றும் யாராலும் ஊகிக்கமுடியாத உண்மை அவருக்குள் நங்கூரம் பாய்ச்சியது! பல ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா முழுதுமே பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்க வேண்டும். இப்போது போலவே முற்காலமும் இருந்திருக்க வேண்டியதில்லை. புவியின் வெப்பநிலை மாறிக் கொண்டே இருக்கும் என்று ஊகித்தார்.

அவரது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அத்தாட்சி தேவை அல்லவா? இதற்காக அவரும் அவரது உதவியாளர்களும் இரண்டு ஆண்டுகள் ஆல்ப்ஸ் மலைப்பகுதி முழுவதிலும் காணும் பாறைகளின் வடிவங்கள், அவற்றிலுக்கும் இயற்கைக் குறியீடுகள் போன்றவற்றைக் கவனத்துடன் சேகரித்தனர்.

1837ல் தனது கண்டுபிடிப்பை அவர் வெளியிட்ட போது புவியலாளர்கள் அனைவரும் வியப்பில் வாய் பிளந்தனர்! அது வரை எந்த ஒரு விஞ்ஞானியும் இவரைப் போல் தளத் தகவல்களைச் சேகரித்துத் தனது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியதில்லை என்று பாராட்டப்பட்டார் லூயி. அவரது கண்டுபிடிப்பு அதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புவியின் வரலாறுகளைத் தகர்த்தெறிவதாக இருந்தாலும், அவர் சேகரித்த தகவல்களின் தரத்தைக் கண்டு உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டது புவியியல்.



அகாசிஸ் பனியுகம் எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்று அழகான படங்களின் மூலம் விளக்க முனைந்தார். ஆனாலும், 1920 வாக்கில் யூகோஸ்லேவியாவின் Milutin Milankovich தான் இதன் காரணத்தைக் கண்டறிந்தார். அதாவது சூரியனைப் புவி சுற்றும் பாதை மிகச் சரியான வட்டமாகவோ, அல்லது ஒரே வடிவத்தினை உடையதாகவோ எப்போதுமே இருந்ததில்லை. அவரது ஆராய்ச்சியின் படி, புவியின் சுற்றுப் பாதை வட்ட வடிவத்திலிருந்து நீள வட்ட வடிவத்திற்கு 40000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊசலாடிச் சென்று வருகின்றது என்பது நிரூபணமானது. புவி நீள்வட்டப்பாதையின் போது சூரியனை விட்டுத் தொலைவில் செல்லும் சமயத்தில் பனியுகங்கள் உருவாகின்றன. புவியின் பல பகுதிகள் பனியால் மூடப்படுகின்றன. தட்பவெப்பநிலை மாற்றங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் நிகழ்கின்றன. 2003 முதல் 2005 வரை நாசாவின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ந்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

விதியின் விளையாட்டு



காகிதங்களின்
முதல்நிலைப் பயனாளிகளும்
கடைநிலைப் பயனாளிகளும்
சந்திக்கின்றனர்.

பலநூறு ஆண்டுகளாய்
மாறா நிலையிது
எழுவரில் இருவரே
பள்ளிக்குச் செல்வது.

சுமையென்னவோ ஒன்றுதான்
தோள்கள்தான் வேறு!
பயணம் என்னவோ ஒன்றுதான்
திசைதான் வேறு!

'குட்பை' சொல்லிச்
சிலர் செல்கின்றார்!
குப்பை நோக்கிப்
பலர் செல்கின்றார்!

காகிதங்களில் உள்ளவை
உங்களுக்கு!
காகிதங்களே போதும்
எங்களுக்கு!

உங்கள் விளையாட்டுகளில்
தானென்றும் விதியிருக்கும்!
எங்களுக்கோ வாழ்வே
விதியின் விளையாட்டுத்தான்!

புதன், செப்டம்பர் 05, 2012

ஆசிரியர்கள்




கறைநீக்கும் அக்கறையில்
இக்கரைக்கும் அக்கரைக்கும்
பலரையும் கரைசேர்த்துக்
கரையாடும் படகுகள்.

நிலவிலா இருட்டிலும்
பனையலைப் புயலிலும்
தொலைதூரப் புள்ளியாய்க்
கலங்கரை விளக்கங்கள்.

தான்நின்ற இடத்திலே
அசையாமல் தான்நின்று
வருவோரை மேலேற்றிக்
களிகொளும் மாடிப்படிகள்.

தகுந்த வழியைத்
தகுந்த தருணத்தில்
தகுந்த போக்கருக்குத்
தான்காட்டும் கைகாட்டிகள்.

முட்களாய்த் தோன்றினாலும்
ஒரேயிடத்தில் சுற்றினாலும்
மேன்மையைத் தவறாது
அறிவிக்கும் கடிகாரங்கள்

அறிவுப் பொக்கிஷத்தைக்
கதவெலாம் திறந்துகாட்டிக்
கதவோரம் காத்திருக்கும்
இருப்புச் சாவிகள்.

அறியாமை இருளகற்ற‌
தீபத்தால் தீபமேற்றி
அறிவொளி அணையாமல்
அடைகாக்கும் மணிவிளக்குகள்.

உண்டு நிறையா
உறுபசி விருந்தைக்
கொடுத்துக் குறையா
அட்சய பாத்திரங்கள்

வெம்மை தான்கொண்டு
தண்மை நமக்களித்து
நிலவாய் நாமொளிர‌
வழிகாட்டும் ஆதவர்கள்

பிழையெலாம் பொறுத்துக்
கண்காணாக் கடவுளைக்
மனங்காணச் செய்யும்
அடையாளத் தூதுவர்கள்