சனி, அக்டோபர் 29, 2011

'௭' வது அறிவு - என் பார்வையில்...




சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் படங்களில் ஒன்று 'எ'-வது அறிவு.

தமிழகத்தில் இருந்து சீன தேசம் சென்று அங்கே தனது மருத்துவ மற்றும் வீரதீரத் திறமைகளை வெளிக்காட்டியதால் இன்றளவும் தெய்வமாகப் போற்றப்படும் போதிதர்மாவைச் சுற்றியே கதை செல்கின்றது.

போதிதர்மா அங்கே யாராலும் குணப்படுத்த முடியாத வைரஸுக்கு மருந்தை எளிதில் கண்டுபிடித்துப் பலரைக் காப்பாற்றுகின்றார். அந்த ரகசியத்தையும் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார். மேலும் தற்காப்புக்கலையையும் கற்றுத் தருகின்றார்.

போதிதர்மாவைப் பல தேசங்கள் போற்றினாலும், அவரது தேசமான இந்தியாவிலும் தமிழகத்திலும் சுத்தமாக மறந்து போயினர். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போது சீனா அதே வைரஸைக் கொண்டு நோயைப் பரப்பி தங்களிடம் இருக்கும் மருந்து ரகசியத்தைக் கொண்டு இந்தியாவை அடிமைப்படுத்த நினைக்கின்றது.

போதிதர்மாவின் டி.என்.ஏ. மூலக்கூறும், அவரது சந்ததியில் வந்திருக்கும் சூரியாவின் மூலக்கூறும் ஒத்துப் போக, தனது ஜெனிடிக் ஆராய்ச்சியின் மூலம் ஸ்ருதிஹாசனால் மீண்டும் சூரியாவைக் கொண்டு போதிதர்மாவை உருவாக்க முடிந்ததா? நோய்க்கு மருந்து கண்டறிய முடிந்ததா என்பதே கதை.

ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றார் சூரியா. படம் முழுவதும் ஆங்காங்கே இயக்குனர், கேமராமேன், கிராபிக்ஸ் நிபுணர் மற்றும் இசையமைப்பாளரின் கைவண்ணம் தெரிகின்றது.

வெறும் அழகு பொம்மையாய் மட்டும் வலம் வராமல் கதையின் முக்கியக் கதாபாத்திரமாக உலா வருவதும் தமிழைத் தாங்கிப் பிடிக்கும் வசனங்களைப் பேசுவதும் (சுத்தத் தமிழில் பேசாவிட்டாலும் சொந்தக் குரலில் பேசியது வரவேற்கத்தக்கது) ஸ்ருதி ஹாசனுக்கு நல்ல அறிமுகமாகவும் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவதாகவும் இருக்கின்றது. இருந்தாலும் தந்தையின் இடத்தைப் பிடிக்கவேண்டுமானால் இன்னும் அவர் எவ்வளவோ உழைக்கவேண்டும்.

எல்லா அறிவியல் சார்ந்த தமிழ்ப் படங்களைப் போலவே இதிலும் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. பட்ஜெட், நம் வசம் இருக்கும் தொழில்நுட்பம், நமக்கிருக்கும் கால அவகாசம், சந்தை ஆகியவற்றை மனதில் கொண்டு அவற்றையெல்லாம் மறந்து விடலாம். தவறில்லை.

வித்தியாசமான கதை, சிறந்த கலைஞர்கள் என்று சேர்ந்து உருவாக்கியிருந்தாலும், படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். அது தான் 'எ' வது அறிவு. அது என்ன ஏழாவது அறிவு என்று கடைசி வரை நமது யூகத்திலேயே விட்டு விடுகின்றார்களா அல்லது எனது ஆறாவது அறிவு கொண்டு தான் கண்டறிய முடியவில்லையோ தெரியவில்லை.

+ பாயிண்ட்ஸ்

குத்தாட்டம், கவர்ச்சி நடனம், காமெடி என்றில்லாமல் கதையோடு சீரியஸாக ஒன்றியே படத்தை நகர்த்திச் சென்றிருப்பது.
சூரியா, ஸ்ருதிஹாசனின் ஆர்வமான நடிப்பு
ஸ்ட்ராங்கான கதை
இன்றைய அறிவியலோடு பழைய வரலாறையும் மறக்கக் கூடாது எனும் மெசேஜ்
வித்தியாசமான வில்லன்

- பாயிண்ட்ஸ்

பாடல்களும் சரி, பாடல்காட்சிகளும் சரி படத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை. இரண்டு பாடல்களைத் தவிர. ஒன்று சோகப்பாடல். இன்னொன்று உத்வேகப்பாடல். மற்ற பாடல்களைப் படமெடுத்த விதமும், சொற்களே புரியாமல் எழுதியிருப்பதும் தமிழைத் தாங்க நினைக்கும் படத்தின் மையக்கருத்துக்கு ஒத்துப் போகவே இல்லை! இதனாலேயே பாடல்களும் மனதில் ஒட்ட மறுக்கின்றன.
சண்டைக்காட்சிகளில் குறிப்பாக வில்லன் சூரியா மற்றும் ஸ்ருதிஹாசனைக் கொல்லப் பலரையும் ஏவும் போது வழக்கமான தமிழ்ப்படங்களின் சண்டைக்காட்சிகள் போலவே அமைத்திருப்பது.
சூரியா, ஸ்ருதிஹாசன் மற்றும் வில்லனைச் சுற்றியே கதை நகர்வதால் யார் வருகின்றார்கள் யார் போகின்றார்கள் என்றே அறிந்து கொள்ள முடியாத பல கதாபாத்திரங்கள்.

அதிக எதிர்பார்ப்பு ஏதுமின்றி இந்தப் படத்தைக் காணச் சென்றால் வித்தியாசமான தமிழ்த் திரைப்படத்தைக் கண்ட திருப்தியைப் பெறலாம்.

மற்றபடி ஏழாவது அறிவு அப்படியொன்றும் எட்டாத அறிவு அல்ல!

வெள்ளி, அக்டோபர் 28, 2011

குப்பை


யேசு புத்தனொடு லட்சுமியும்
சரஸ்வதியும் படமாய் இருந்தாலும்
கசக்கும் வரை காகிதம் அது
கசக்கிவிட்டால் குப்பை அதன்பெயர்.
தானே போட்டதைத்
தானே தொடக்கூட
அத்தனை அவமானம்!

எதைப் போட்டாலும்
பகாசுரனாய் வாங்க
வயிறு வீங்க
ஊரெங்கும் மூலையில் குப்பைத் தொட்டிகள்!
பாவம் எவளோ எவனோ பெற்றெடுத்த
தங்கத்தைக் காக்கும் கருவறைப் பெட்டிகள்!

நம்வீட்டுப் பக்கம் மட்டும்
வேண்டாம் இத்தொட்டி எனும்
தாராளம் கொண்டோர் உள்ளே!
கிரிக்கெட்டு வீரர்களாய் மாறி வீசும்
நெறிகெட்ட மாந்தர் தோற்றதால்
கசடுகள் கிடக்கும் வெளியே!

தீக்கொண்டு எரித்தாலோ காற்றுக்கும் கேடு
ஓரிடத்தில் குவித்தாலோ நீர்நிலைக்கும் கேடு
முழங்காலுக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போட்டு
வைக்கின்றோம் பூமியைச் சிதறடிக்குமோர் வேட்டு!

காந்திபடம் கொண்டு தாளிருந்தால்
சீந்தாது போட மனம்வருமோ?
எத்தாளும் செல்வமெனும் புத்தி
எப்போது வருமோ நமக்கெலாம்?

தாவரக் கழிவோ மண்ணுக்கு உரமாம்!
காகிதக் கழிவோ உலைகட்குத் தரமாம்!
பிளாஸ்டிக் கழிவோ சுழன்றிடும் வரமாம்!
மீதியுள்ள கழிவோ மிகமிகக் குறைவாம்!

சுமையென்று கருதாது சுகமென்று கருதித்
தரம்பிரித்துச் சேர்த்துத் தக்கவர்க்குத் தரவே
செல்வமாம் இதற்கு ஈடிணை உண்டோ?

சிந்தித்து உணர்ந்து உறுதியாய் முடிவெடுப்போம்!
ஒழிக்க வேண்டியது குப்பையை அல்ல!
குப்பைத் தொட்டியென்றே!

புதன், அக்டோபர் 26, 2011

என்றென்றும் தீபாவளி!


என்றென்றும் தீபாவளி!

என்றும் போல்...
இவள் தான் விடியலை வென்றாள்;
இவளுக்குத் தினமும் கங்கா ஸ்நானம்.

இன்று வந்த அறுவைத் திரைப்படத்தை
அறுவை சிகிச்சை செய்யும் நடிகர் பட்டாளம்;
வாயில் ஈயோட தேனோட யாவரும் பார்த்திருக்க
இவளுக்கோ அடுப்படியில் வியர்வை மழை!

மெத்தென்று சுட்டுவைத்த செம்பொன் உளுந்துவடையும்
தித்திக்கும் வாயில் போடுமுன் கரையும் பணியாரமும்
இவளுக்கே வழிவழியாய் வந்து வாய்த்த அணியாரம்!

புத்தாடை மினுமினுக்கக் குதூகலச் சிரிப்புக்கும்
மத்தாப்புத் தெறிக்கும் தீப்பொறிக்கும் போட்டி
ஆபத்தை நினைத்து இவளுக்கு மட்டும்
எண்ணெயிட்ட கடுகாய்ப் பதறும் மனம்.

என்றோ ஒழிந்த அரக்கனுக்காய்க் கொண்டாட்டம்
என்றென்றும் இவளின்பாடு இங்கே திண்டாட்டம்
தீமை ஒழிந்ததைக் கொண்டாடும் மாந்தரே
நன்மை வளர்வதைக் கொண்டாடுவது எப்போது?

நரகாசுரன் அழிவது ஓர்நாள் தீபாவளி!
இவள்போல் தாய்மையைக் கொண்டாடி
தியாகச் சுடர்களை ஒளிவிடச் செய்தால்
என்றென்றும் தீபாவளி.

வெள்ளி, அக்டோபர் 07, 2011

தசாவதாரம்

தாய்மண் தந்தைவே ரெனத்தவமாய் நின்றோர்
பாய்மரப் பயணவாழ்வில் நம்முடன் பிறந்தோர்
சேய்மழலை களிக்கச் சுகவரமாய் வந்தோர்
வேய்பந்தற் காலெனத் தாங்கிடுஞ் சுற்றோர்...பாசமாய்

நினைத்ததை நினைக்குமு னியல்பினில் நினைப்பவர்
பனைத்துணைப் பங்கம்வரி னும்பக்கமே நிலைப்பவர்
அனைத்தையும் பொறுக்கும் பூமியாய் நடப்பவர்
சுனைநீராய்த் தாகத்தில் தவிக்கையில் சுரப்பவர்...நேசமாய்

பயிருக்குக் கதிராய்ப் பரவிடு நினைவாய்
மயிலுக்குத் துணைநடம் பயின்றிடு மழகாய்
வெயிலுக்கு நிழலாய் கரம்பிடி யிணையாய்
உயிருக்கு உயிராய் உவந்திடு மினிப்பாய்க்... காதலாய்

நிறுத்திடும் முள்ளா யிருபுறந் தாங்கும்
உறுத்திடும் உறவும் பழித்திடும் பகையும்
பொறுத்திடும் சமமாய்ச் சகமாய் வைத்திடும்
அறுத்திடும் அவத்தை தவத்தால் வறுத்திடும்...நீதியாய்

அளவிடப் பெரிதோ அணுவிலுஞ் சிறிதோ
குளவியாய்க் கொட்டுமோ குலவிடத் தடவுமோ
குளம்வளர் மீன்களோ வனம்வளர் மான்களோ
வளம்பெற வரையிலா துயிர்தனைக் காத்திடும்...பரிவாய்

சான்றோர் சாகாக் கல்வியிற் சிறந்தோர்க்கும்
ஆன்றோர் அனுபவச் சாறதைப் பகிர்ந்தோர்க்கும்
வான்போ லுயரத் தேனீயா யுழைப்போர்க்கும்
கோன்முறை தவறாது ஆட்சி புரிவோர்க்கும்...பணிவாய்

கூர்கொண்ட பார்வை தெறித்திடும் வியர்வை
நேர்கொண்ட தூய்மை வாய்த்திடும் வாய்மை
சீர்கொண்ட கலையாய்த் தேர்ந்திடும் நுட்பமொடு
ஊர்கண்ட முதல்வராய் முனைப்பொ டுழைக்குந்...திறமாய்

முடியாதது முடித்து முடிந்ததைக் கொடுத்து
விடியலைக் காட்டும் பகலவராய்ப் பரிமளித்து
துடிப்புடன் தியாகத் தீபமெனத் தரணியில்
நடிப்பிலாது வாழ்ந்து நாடெலாஞ் செழிக்கும்...அறமாய்

கொடுக்கக் குறையாது எடுக்க நிறையாது
விடுக்க முடியாது தடுக்கவுந் தடையேது
தொடுக்கத் தொடரும் மரபாய்ப் பயனுற
மடுமலை ஒன்றாய்ச் சேர்க்குங் குருகுலக்...கல்வியாய்

ஆதியாய் அந்தமாய் ஆதியின்றி யந்தமின்றிச்
சோதியாய் வேதமாய் போதமாய் நாடியாய்
நாதியாய் நாதமாய் விநோதமாய் வாய்கொண்டு
ஓதிடத் தோதிலா முழுநிறை முதலிடம்...பக்தியாய்

பாசமாய் நேசமாய் காதலாய் நீதியாய்
பரிவாய் பணிவாய் திறமாய் அறமாய்
கல்வியாய் பக்தியாய் பத்தாப் பத்துமாய்
பல்வடி வெடுக்கும் பாரெங்கும் அன்பு.