சனி, டிசம்பர் 31, 2011

(சு)தந்திரச் சுரண்டலும் சுந்தரக் காட்சியும்




எட்ட முடியாத் தூர வானம்
அட்டக் கரியாய்க் கவிழ்ந்து இருண்டு
செக்கச் சிவந்து நீலமாய் விரியும்

பார்த்திருக்கக் கிளைநுனியில் பசுமொட்டாய் இருந்து
வார்த்தெடுக்கக் காத்திருக்கும் அன்றலர் பனிமலரில்
கோர்த்திட்ட முத்தாய் மழைத்துளிகள் ஜொலிக்கும்

தாய்மையின் பெருமையாய் தவிக்கின்ற குஞ்சுக்கு
வாயொடு வாய்வைத்துச் சாம்பல் குருவியொன்று
காய்பழக் கொட்டையைப் பதமாக்கி ஊட்டும்

பலப்பலக் காட்சிகள் மலைத்திடும் மாட்சிகள்
காத்திருந்து கருத்தாய்க் கச்சிதமாய்ப் படமெடுத்து
வாங்கினேன் வாழ்வில் பரிசும் பொருளும்

காத்திடாது சட்டென்று சாலையைக் கடக்கையில்
நேர்ந்திட்ட‌ காட்சி யொன்றை அநிச்சையாய்க்
கரந்தட்டக் கிடைத்திட்ட‌ படமிது காண்பீர்!

படத்தின் விலையாய்ப் பொருளேதும் கிடைக்காது!
படத்தின் கேள்விக்கும் பொருளேதும் கிடைக்காது!
படத்தின் மாற்றெனப் பொருளேதும் கிடைக்காது!

அடிப்பொடி என்றால் இங்கேது அடிப்படை?
அடிப்போடி என்றே ஏழ்மை துரத்திடும்
அடிமேலடி பெற்றுக் கண்ணீரே கங்கையாகும்!

எனக்கென்ன? எப்போதும் கவலை இல்லை.

இதுபோல் படமெடுக்கக் காத்திட‌த் தேவையிலை!
பொன்விழாக் கண்டநற் (சு)தந்திரச் சுரண்டலில்
இச்சுந்தரக் காட்சி பாரதத்தில் எங்குமுண்டு!

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

இங்கேயே சுவர்க்கத்தைப் படைக்கலாம் வா!




எப்போது நோக்கினும் என்னையே நோக்கினால்
எப்படி நோக்குவேன் உன்னையே நானும்?
எப்பாதை போயினும் எனைத்தேடியே நீவந்தால்
எப்படித் தேடுவேன் உன்னையே நானும்?
உன்னைக் கண்டதும் மரித்த‌ என்னுடலில்
உன்னுயிர் தந்ததால் தந்தையு மானாய்
என்னுயிர் உனதாக்கி நானோ தாயுமானேன்
புதியதொரு வாழ்க்கைச் சுரங்கக் கதவின்
பாதிச்சாவியாய் நானும் மீதியாய் நீயும்!
நிலவுக்கு வயதுண்டு கிரணத்திற் குண்டோ?
உடலுக்கு வயதுண்டு உள்ளத்திற் குண்டோ?
நினைத்தாலே குளிர்வீசும் முழுநிலாப் பொழுதில்
சொல்லாத சொல்லெலாம் கண்களில் சொல்லி
நில்லாமல் நம்மிருவர் கரமிழைத்துக் கவிபாடி
இங்கேயே சுவர்க்கத்தைப் படைக்கலாம் வா!

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 26


26. அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள்:

கண்டறிந்தவர்கள்: பிரெடெரிக் ஹெர்ஷல் மற்றும் ஜோஹன் ரிட்டர் Frederick Herschel (IR) and Johann Ritter (UV)


ஆண்டு: 1800 & 1801

கண்ணுக்குத் தெரியாத இவ்விரு கதிர்களைப் பற்றியும் அறிந்து கொண்டபின் கடந்த 200 ஆண்டுகளில் விஞ்ஞானம் பல விஷயங்களைச் சாதித்துள்ளது. இக்கதிர்களின் கண்டுபிடிப்பே பின்னாளில் வானொலிக் கதிர்கள், காமாக் கதிர்கள் போன்றவற்றைக் கண்டறிய அடித்தளமாக விளங்கியது எனலாம். அகச்சிவப்புக் கதிர்கள் தொலைக்காட்சிப் பெட்டி ரிமோட், திருட்டுக் கண்டுபிடிக்கும் கருவி என்று பல கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது. புற ஊதாக் கதிர்களோ சூரியக் கதிர்கள் பற்றித் தெளிவான ஆராய்ச்சி நடத்த ஏதுவாக இருக்கின்றது. சில பறவைகளும் மிருகங்களும் அகச்சிவப்புக் கதிர்களை உணர்ந்து இருட்டிலும் எளிதாக நகர முடிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமை மிக்க கண்டுபிடிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?

பிரெடெரிக் ஜெர்மன் ஹானோவரில் 1738ம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதில் இயல்பாகவே இசை மற்றும் வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இவரே 1781ல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் கண்டறியப்பட்ட கோளான யுரேனஸைக் கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது! 

1799 இறுதியில் சூரிய ஒளி பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் பிரெடெரிக். அவர் பல வண்ண வடிகட்டிகள் மூலம் சூரிய ஒளி நிறமாலையைப் பிரித்து ஆராய்ச்சி செய்வதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது சில வண்ண வடிகட்டிகளில் மட்டும் வெப்பநிலை அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய ஒளியின் சில வண்ணங்கள் மட்டும் மற்ற வண்ணங்களை விட‌ அதிக வெப்பத்தைக் கொணர்வதாகச் சந்தேகித்தார். 

இந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு பிரம்மாண்டமான ஒளிப்பிரிகையை உருவாக்கினார் பிரெடெரிக். ஒரு இருண்ட அறைக்குள் இந்த ஒளிப்பிரிகையின் மூலம் சூரிய ஒளியைப் பாய்ச்சினார். நிறப்பிரிகையின் மூலம் வரும் ஒவ்வொரு நிறத்தின் மீதும் வெப்பநிலைமானியை வைத்து வெப்பத்தை அளந்தார். பிரெடெரிக்கிற்கு ஆச்சரியம் தரும் விதமாக சூரிய ஒளி நிறமாலையின் ஊதா நிற‌ப் பகுதி மிகக் குறைந்த வெப்பத்தைக் கொண்டதாகவும், சிவப்பு நிறப் பகுதி மிக அதிக வெப்பத்தைக் கொண்டதாகவும் இருந்தது. 

பிரெடெரிக் திடீரென்று ஒரு எண்ண உந்துதலில், சிவப்பு நிறத்தையும் தாண்டி இருண்ட இடத்தில் வெப்பநிலைமானியை வைத்துப் பார்த்தார். எந்த ஒளியும் வராததால் வெப்பநிலைமானியில் வெப்பநிலை உயர்ந்திருக்கக் கூடாது. ஆனால், இருப்பதிலேயே அதிக வெப்பத்தைக் காட்டியதைக் கண்டதும் ஆச்சரியத்தின் உச்சத்தில் நின்றார்! 

சூரிய ஒளியில் ஒளியுடன் வெப்ப அலையும் கலந்து வருவதாகவும், ஒளிப்பிரிகையின் போது அதிக விலகலைக் கொண்டு சிவப்பு நிறத்தையும் தாண்டி வெப்ப அலை பரவுவதாகவும் முதலில் சந்தேகப்பட்டார். அடுத்த சில வாரங்களில் நிகழ்த்திய பல ஆராய்ச்சிகளின் மூலம் ஒளியைப் போலவே அந்த வெப்ப அலையும் விலகல், குறுகல், ஒடிதல் ஆகிய விளைவுகளைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. 

இக்கதிர் சிவப்பையும் தாண்டி இருந்ததால் அதற்கு அகச் சிவப்புக் கதிர் என்று பெயரிட்டார் பிரெடெரிக்.

ஜோஹன் ரிட்டர் 1776ல் ஜெர்மனியில் பிறந்தார். அவர் இயற்கை அறிவியல் தத்துவ விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். உலகின் அனைத்து சக்திகளின் பிறப்பிடமும் உர்க்ராஃப்ட் (Urkraft) எனும் ஒரே சக்தியிலிருந்து பிறந்தது எனும் தத்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார். 

1801ல் பிரெடெரிக்கின் கண்டுபிடிப்பு குறித்த செய்தியைப் படித்து அறிந்து கொண்டார். ரிட்டரும் அதே சூரிய ஒளி பற்றிய ஆராய்ச்சியில் இருந்தவர் தான். அவர் சூரிய ஒளியால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களையும், அவ்வொளி நிகழ்த்தும் மின்வேதியியல் மாற்றங்களையும் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது ஆராய்ச்சியில் சில்வர் குளோரைடு எனும் வேதிப்பொருளின் மீது ஒளி படும் போது அது நிறம் மாறி வெள்ளையிலிருந்து கருப்பாக மாறுவதைக் கண்டறிந்திருந்தார். அதுவே இன்று நாம் காணும் புகைப்படங்களின் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது!

ரிட்டரும் பிரெடெரிக் போலவே ஆராய்ச்சியில் ஈடுபடத்துணிந்தார். அதாவது நிறங்களில் எந்த நிறம் சில்வர் குளோரைடை வேகமாகக் கருப்பாக்குகின்றது என்று கண்டறிய முயற்சித்தார். அதற்காக பிரெடெரிக் போலவே ஒரு பெரிய இருண்ட அறைக்குள் ஒளிப்பிரிகை மூலம் ஒளியைப் பிரித்துப் பரவச்செய்தார். இப்போது சில்வர் குளோரைடு பூசப்பட்ட பெரிய காகிதங்களின் மேல் அந்நிற அலைகளை விழச் செய்தார். ஆக, இங்கு வெப்பத்தை அளக்காமல், ஒளியின் வேதிநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு நிறமும் சில்வர் குளோரைடைக் கருப்பாக்கும் நேர அளவு அளக்கப்பட்டது. 

சிவப்பு நிறம் சில்வர் குளோரைடைக் கருப்பாக்குவதற்கு மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது! ஊதா நிறமோ நொடியில் சில்வர் குளோரைடைக் கருப்பாக மாற்றியது. ஏற்கனவே பிரெடெரிக் செய்தது போலவே ஊதா நிறத்தையும் தாண்டிய இருட்டில் சில்வர் குளோரைடைக் காட்டிய போது என்ன ஆச்சரியம்!? அப்போது தான் மிக வேகமாக சில்வர் குளோரைடு கருப்பு நிறத்தை அடைந்தது!

ஆக, கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கூட, ஒளியில் சில்வர் குளோரைடைக் கருப்பாக்கும் வேதிநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் அலை ஒன்று இருக்கின்றது என்று நிரூபணம் ஆயிற்று. அக்கதிர் ஊதா நிறத்தையும் தாண்டி இருப்பதால் அதற்குப் புற ஊதாக்கதிர் என்று பெயர் சூட்டினார் ரிட்டர்.

இன்றளவும் அகச்சிவப்புக் கதிர்களும், புற ஊதாக்கதிர்களும் மனித குலத்துக்குப் பல சூட்சுமங்களைக் காட்டியிருக்கின்றது. அவ்விரண்டு கதிர்களையும் கண்டறிந்த விஞ்ஞானிகளான பிரெடெரிக்கும் ரிட்டரும் என்றென்றும் விஞ்ஞான உலகில் மறக்கவியலா மனிதர்களாகின்றனர்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 25

25. நோய்த்தடுப்பூசி (Vaccination)

கண்டறிந்தவர்: சீமாட்டி மேரி வோர்ட்லி மொன்டாகு & எட்வர்ட் ஜென்னர் (Lady Mary Wortley Montagu and Edward Jenner)


ஆண்டு: 1798

உங்களுக்குப் பெரியம்மை, பிளேக், போலியோ போன்ற கொள்ளை நோய்கள் வந்திருக்கின்றதா? அனைவருக்கும் வந்திருக்க நியாயமில்லை. ஆனால், மனிதன் தனக்குத் தானே போரிட்டு மடிவதை விட இது போன்ற கொள்ளை நோய்களால் கூட்டம் கூட்டமாக மரித்திருக்கின்றான். லட்சோப லட்சம் மக்கள் கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்டு மடிந்திருக்கின்றனர். 

இக்கொள்ளை நோய்களை உலகிலிருந்து விரட்டியடித்தது எப்படி எவ்வாறு? 

1712ல் பிரிட்டனின் தூதுவராகத் துருக்கிக்குச் சென்ற தன் கணவருடன் 24 வயதான புகழ்பெற்ற கவிதாயினி மேரியும் சென்றார். தன் உடலில் அழிக்க முடியாத அவலட்சணமான தழும்பை ஏற்படுத்திச் சென்றதும், தன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுமான பெரியம்மை நோயால் துருக்கியில் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்று கவனித்தார் மேரி. விரைவிலேயே அங்கே வாழும் பழங்குடி மக்களின் ஊசி குத்துதல் (ingrafting) சடங்கிற்கும் இதற்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று ஊகித்தார் மேரி. 

அங்கே யாருக்காவது பெரியம்மை நோய் தாக்கியதென்றால் உடனே கூட்டமாகக் கூடி நோய் கிருமி இருக்கும் திரவத்தை ஒரு தேங்காய்ச் சிரட்டையில் எடுத்துக் கொண்டு ஒரு வயதான பெண்மணி அவர்களின் மொழியில் ஏதோ பாடலைப் பாடிக் கொண்டே ஒரு ஊசியின் மூலம் திரவத்தைத் தொட்டு ஒவ்வொருவரின் நரம்பிலும் செலுத்துவதைக் கண்டார் மேரி. அதன்பின் அவ்வாறு செலுத்தப்பட்டவர் சிறிய அளவில் சொறி மற்றும் காய்ச்சலால் ஓரிருநாட்கள் அவதிப்படுவதையும் அதன் பின்னர் அவருக்கு அம்மை நோய் தாக்குவதில்லை என்பதையும் அறிந்து கொண்டார்.

1713ல் இங்கிலாந்து திரும்பிய மேரி இதுகுறித்த தனது கருத்தைப் பரவலாக அனைவருக்கும் அறியப்படுத்தினார். ஆனால் அனைவரும் அவரை முட்டாள் தனமாகப் பேசுகின்றார் என்று ஒதுக்கி விட்டனர். 1714ல் வேல்ஸ் இளவரசி இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, கைதிகளுக்கும் அனாதைகளுக்கும் சோதனை முறையில் இந்த ஊசிமுறையைப் பின்பற்றுவதற்கு அனுமதியளித்தார்!

மேரி அம்மை தாக்கப்பட்டவர்களிடமிருந்து சீழ் போன்ற திரவத்தை எடுத்து சோதனை முறையில் சிலருக்குக் குறைந்த அளவில் செலுத்தினார். இதனால் அவர்கள் இறப்பது மூன்றில் ஒருபங்காகக் குறைந்தது. தழும்பு ஏற்படுவது ஐந்தில் ஒருவருக்கே நிகழ்ந்தது. இவ்வாறு ஊசி போடுவதில் சில கெடுதல்களும் நிகழ்ந்தன. அம்மை நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவி பெருக்கமடைந்து விடுவதால் ஆபத்தானவையாகி விட்டன. எந்த ஊசி காக்கவேண்டுமோ அதுவே உயிரைக் குடிக்கும் எமனாகவும் மாறி விட்டது. இதனால் இந்த முறை அப்படியே வழக்கொழிந்து போனது.

அதன் பின்னர், 1794ல் வந்தார் எட்வர்ட் ஜென்னர். கிராமப்புறத்தில் வாழ்ந்த அவர் பால்பண்ணையில் வேலை பார்ப்பவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை என்பதைக் கண்டறிந்தார். ஆனால், அவர்கள் அனைவருமே பசுக்களைத் தாக்கும் ஒருவித அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தார். அவர்களின் கைகளில் சிறிய பாளமாக வெடிப்பை அந்நோய் ஏற்படுத்தியிருந்தது. ஜென்னர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, பசு அம்மை நோய்க்கும், பெரியம்மைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டுமென்றும், மாட்டு அம்மையால் தாக்கப்பட்டவர்கள் ஊசிகுத்துதல் முறை போன்று கிருமியை ஏற்றுக் கொள்வதால், அவர்களுக்குப் பெரியம்மை நோய் வருவதில்லை என்றும் முடிவு செய்தார். 

சோதனை முறையில் 20 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பசு அம்மை நோய்க்கிருமிகளைச் சிறிய அளவில் ஏற்றினார் ஜென்னர். அனைவருக்கும் பசு அம்மை நோய் வந்தது. கைகளில் பாளங்கள் வந்து அவர்கள் பலநாட்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அனைவருக்கும் பெரியம்மை நோய்க்கிருமியையும் ஏற்றினார் ஜென்னர். அவர்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டார்களேயானால் இறந்து விடுவதற்குக் கூட வாய்ப்பிருந்தது. ஆனால், அவர்கள் ஒருவரைக் கூட பெரியம்மை நோய் அண்டவில்லை!

இவ்வாறு முள்ளைக் கொண்டே முள்ளை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டே விஷத்தை முறிப்பதையும் கண்டறிந்த ஜென்னர் அதற்கு தடுப்பூசி முறை (vaccination) என்று பெயரிட்டார். 1798ல் அவரது ஆராய்ச்சியையும் உலகுக்கு வெளிப்படுத்தினார். Vacca என்றால் லத்தினில் பசு என்று பொருள். Vaccinia என்றால் பசு அம்மை நோய் என்று பொருளாகும்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 24

24. புவியரிப்பு (Erosion of Earth)

கண்டறிந்தவர்: ஜேம்ஸ் ஹட்டன் (James Hutton)
நன்றி: விக்கிபீடியா.

காலம்: 1792

புவியில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உருவானதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பித்து வந்தனர் முன்னோர்கள். புவியின் முகம் நோவா வெள்ளத்தைப் போல் ஏதாவது வியத்தகு அமானுஷ்ய நிகழ்வுகளால் சிதைக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. புவியின் மலைச்சிகரங்களுக்கும் அதல பாதாளங்களுக்கும் இது போன்ற கதைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். 

1780ல் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் 57 வயதை நெருங்கிய மருத்துவரும், விவசாயியும், புவியியல் ஆர்வலருமான ஜேம்ஸ் ஹட்டன் புவியின் பாறைகளைக் குறித்த கதைகளிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கலானார். தனது நாடான ஸ்காட்லாந்தின் பாறைகளின் வயதைக் கொண்டு புவியின் வயதைக் கண்டுபிடிக்க முடியுமா எனும் ஆராய்ச்சியில் இறங்கினார்.

கரம் போன்ற நீண்ட வழுவழுப்பான உருண்டு திரண்ட மலைப் பாறைகளில் நடந்து சென்ற ஹட்டன், இவையெல்லாம் திடுமென ஒரே நாளில் ஒரே நிகழ்வால் உருவானது என்பதை நம்பமுடியாமல் தவித்தார். மாபெரும் வெள்ளங்கள் மாபெரும் பள்ளத்தாக்கை உருவாக்கின என்றும், அவை கல்லைப் புரட்டிப் போட்டதால் மலைகள் உருவாகின என்றும் அவரால் நம்பமுடியவில்லை. எப்பேர்ப்பட்ட வெள்ளத்தாலும் வழுவழுப்பான உருண்ட வடிவான பாறைகளை உருவாக்க முடியுமா என்று தனக்குள் கேள்வியை எழுப்பினார். நதிகளின் சமவெளிகள் எப்படி உருவாகின என்றும் கேள்வி எழுந்தது.

ஆக, தற்போதைய கொள்கை தவறென்பதை நிரூபணம் செய்ய முடிந்தாலும், உண்மையான காரணம் என்பதைக் கண்டறிந்து நிலைநிறுத்தினால் மட்டுமே அனைவரையும் நம்ப வைக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தார் ஹட்டன். ஹட்டனின் ஆராய்ச்சி எந்த அடிப்படை சக்தி புவியின் முகமாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் என்ற வழியில் செல்ல ஆரம்பித்தது.
அந்த ஆண்டு கோடை காலத்தில் ஹட்டன் உயரமான பள்ளத்தாக்கிலிருந்து விழும் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே சென்றார். நீர்வீழ்ச்சியின் அருகே கீழே கிடந்த கூழாங்கற்களையும் மணல் துகள்களையும் தனது கரங்களில் எடுத்து உற்று நோக்கினார். அவற்றைத் தன் கைகளால் பிசைந்து பார்த்த ஹட்டன், இவையாவும் மலைமேலே எங்கிருந்தோ உருண்டு வந்து கீழே விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார். அதற்கு முன் அது பெரிய கல்லாக இருந்து உடைந்து பின் நீர் வரும் பாதையில் உருண்டோடி வழுவழுப்பான தேகத்தைப் பெற்றிருக்கின்றது என்று ஊகித்துணர்ந்தார்.

அந்த நீர்வீழ்ச்சியானது தினந்தோறும், கற்களையும் மணலையும் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றது என்று எண்ணினார். ஆக, புவியின் முகம் ஏதோ ஒருநாளில் உருமாறுவது அல்ல. அது தினந்தோறும் நிகழும் நிகழ்வால் ஏற்படுகின்றது. நீர் மட்டுமல்ல, சுழன்று அடித்து வீசும் காற்றும் இதே போன்று கற்களில் தனது கைவரிசையைக் காட்டுகின்றது என்பதைக் கண்டறிந்தார் ஹட்டன். மழைநீர் மலை மேல் விழுந்து கற்களைப் புரட்டி எடுத்து வந்து மணலாகச் சமவெளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது. இது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டே இருக்கின்றது. கால்வாய்களும், நீர்வீழ்ச்சிகளும் எறும்பூறக் கல்தேய்ந்த கதை என்பதைக் கண்டுகொண்டார்.

இதுவரை சரியாகவே கண்டறிந்த ஹட்டனுக்கு அடுத்து ஒரு கேள்வி மட்டும் தொக்கி நின்றது. இத்தனை ஆண்டுகாலமாக காற்றும் நீரும் புவியை அரித்து சமமாக்குகின்றது என்றால் மலைகள் எவ்வாறு உருவானது? ஏன் இத்தனை கோடி ஆண்டுகளில் புவியின் முகம் சீரானதாகவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலும் கிடைத்தால் மட்டுமே அவரது கண்டுபிடிப்பு முழுமையடையும் என்பதால் அதை நோக்கிய தன் கவனத்தைத் திருப்பினார் ஹட்டன். வெகுகாலம் ஆராய்ந்தே சரியான காரணத்தைக் கண்டறிந்தார் ஹட்டன். ஆம். புவியினடியில் கொதிநிலையில் இருக்கும் மையப்பகுதியே மலைகளையும் பாறைகளையும் வெளித்தள்ளி பெரிய மலைகளை உருவாக்குகின்றன என்பதையும் கண்டறிந்தார். உள்ளிருக்கும் அக்னி மலைகளை வெளித்தள்ள, வெளியிலிருக்கும் நீரும், காற்றும் அதைச் சமன்படுத்த முயல இது தொடர்கதையாக பூமாதேவியை அக்னி, வாயு, வருணன் ஆகியோர் கந்தர்கோலமாக ஆக்குவதை ஒருவழியாகக் கண்டறிந்தார் ஹட்டன்.

புவியியலில் ஒரு மாபெரும் சாதனை படைத்தவராகக் கருதப்படுகின்றார் ஹட்டன். அவரது கண்டுபிடிப்பு பல நவீன கண்டுபிடிப்புகளுக்கும் சாதனைகளுக்கும் வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 23

23. கண்டுபிடிப்பு: வெப்பத்தின் இயல்பு (The Nature of Heat)

கண்டுபிடித்தவர்: கௌண்ட் ரம்ஃபோர்டு (Count Rumford)
காலம்: 1790

தீயைப் பற்றியும் வெப்பத்தைப் பற்றியும் பலவித நம்பிக்கைகள் விஞ்ஞானிகள் இடையே உலவிய காலம் அது. வெப்பம் என்பது கண்ணுக்குத் தெரியாத, எடையில்லா கலோரிக் (Caloric) எனும் திரவம் என்று கற்பனை செய்திருந்தார்கள். சூடாக இருக்கும் பொருட்கள் கலோரிக்கால் நிரம்பி வழிந்ததாகக் கொள்ளப்பட்டது. அவ்வாறு வழிந்து விடுவதால் பொருட்கள் எப்போதும் சூட்டிலிருந்து குளிர்வதாக நம்பப்பட்டது! எரிவதோ ஃப்ளோஜிஸ்டன் (Phlogiston) எனும் மற்றுமொரு கண்ணுக்குத் தெரியாத பொருளினால் ஏற்படுவதாகக் கொள்ளப்பட்டது. எரியக் கூடிய பொருட்களுள் இது நிறைந்திருப்பதாகக் கருதப்பட்டது. ஒரு பொருள் எரியும் போது அது தன்னிடமிருக்கும் ஃப்ளோஜிஸ்டனை இழந்து காற்றில் கலப்பதாக நம்பினார்கள். மொத்த ஃப்ளோஜிஸ்டனையும் ஒரு பொருள் இழந்து விட்டால் எரிவதும் நின்று விடுவதாக நம்பப்பட்டது.

இத்தனை நம்பிக்கைகளும் ஒன்று சேர்ந்து யாருக்கும் அத்தனை எளிதாக தீ, வெப்பம் மற்றும் எரிதல் குறித்த ஆராய்ச்சியை நடத்துவதற்குத் தடைகற்களாக இருந்தன. ஆனால் இக்கற்களைத் தாண்டியவர் கௌண்ட் ரம்ஃபோர்டு என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பெஞ்சமின் தாம்ஸன். எவ்வாறு அவர் எளிமையான வெப்பத்தின் இயல்பைக் கண்டறிந்தார் என்று காண்போமா?

1790 ல் 37 வயதான கௌண்ட் பவாரியா (Bavaria) அரசருக்கு ராணுவ ஆலோசகராகப் பணியாற்றினார். இது தவிர பீரங்கி உற்பத்தியையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். பெஞ்சமின் தாம்ஸன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவருக்கு பிரிட்டன் உளவாளியாகச் சவாலான வேலை பார்த்த அனுபவமும் இருந்தது! 1790ல் பவாரியா அரசரிடம் பணி புரிய ஆரம்பித்தார். 

பீரங்கி உற்பத்தித் தொழிற்சாலை ஒரு சகிக்க முடியாத இரைச்சல் கொண்டதாகும். ஒருபக்கம் மரச் சக்கரங்களின் மேல் உலோகப் பட்டைகளைப் (Rim) பொருத்துவதற்காக அடிக்கப்படும் சுத்தியல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். தக தகவென்று வெப்பத்தின் உச்ச நிலையில் இருக்கும் இரும்பை நீரில் அழுத்திக் குளிர்விக்கும் போது எழும் நீராவி அறையையே முழுதும் ஆக்கிரமிப்பதாக இருக்கும். 

இன்னொரு புறத்தில் பீரங்கிக் குழாயை உருவாக்கும் பணி நடைபெறும். உருகிய உலோகக் குழம்பை பெரிய வார்ப்புகளில் (12 அடிக்கு 4 அடி நீளமுள்ளவை) ஊற்றப்பட்டன. பின்னர் அவ்வுலோகத் தண்டில் துளை போடும் இயந்திரத்தைக் கொண்டு துருவிக் குடையப்பட்டு பீரங்கிக் குழல்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு சுழன்று துருவும் போது அளவிட முடியாத வெப்பம் வெளிப்பட்டது! அவ்வாறு துளையிடும் போது உருகிவிடாமல் இருக்க நீரை எப்போதும் அதன் மேல் ஊற்றிக் கொண்டே இருந்தனர். அப்போது சப்தத்தோடு எழும் நீராவி தொழிற்சாலைக் கூரை வரை சென்று அங்கே குளிர்ந்து செயற்கை மழையாக உருவாகித் தொழிலாளர்களின் மேல் பொழிந்து கொண்டிருந்தது!

இவற்றையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்த ரம்ஃபோர்டு இத்துளையிடும் பணியில் அதிக வெப்பம் வெளியாவதைக் கவனித்தார். அன்றைய நம்பிக்கையோ, துளையிடும் போது அதிகபட்ச கலோரிக் வழிந்து ஓடுவதால் வெப்பம் அதிகம் இருப்பதாகத் தான் இருந்தது. ஆனால் ரம்ஃபோர்டால் அதை நம்ப முடியவில்லை. துளையிட ஆரம்பிக்கும் முன் குளிர்ச்சியாக இருக்கும் உலோகத் தண்டில் துளையிட ஆரம்பித்ததும் அப்படி எவ்வளவு தான் கலோரிக் வெளியேறி ஓடும் என்று கணக்கிட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்தார். இவ்வளவு கலோரிக்கும் அந்த உலோகத்துள் எங்கே இருந்தது என்றும் யோசிக்க ஆரம்பித்தார்.

ரம்ஃபோர்டு ஒரு மிகப் பெரிய தொட்டி ஒன்றைக் கட்டினார். உலோகக் குழாய் உருவாகும் போது வெளிவரும் நீரை முழுதும் பிடித்து அதில் ஏற்படும் வெப்பநிலை அதிகரித்தலைக் கணக்கிட வெப்பமானிகளையும் நிறுவினார். நீராவியே உருவாகாதவாறு அதிகமான நீரைப் பீய்ச்சி அடிக்கவும் ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு பொட்டு நீராவி கூட உருவாகி வெளியே தப்பித்து விடக் கூடாது (!) என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். 

இப்போது கிரீச் எனும் சப்தத்துடன் துளையிடும் பணி ஆரம்பித்தது. வெப்பத்தால் உலோகம் ஜொலிக்க ஆரம்பித்தது. உடனே அதன் மேல் நீர் ஊற்றப்பட்டது. நீரனைத்தும் கீழே இருந்த தொட்டியில் விழுந்து வெப்பமானியில் வெப்பம் அளக்கப்பட்டது. அவர் கனவில் கூடக் கண்டறியாத அளவு கலோரிக் வழிந்தோடியது! அவ்வளவு நீரும் 50 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பமடைந்து ஓடியது. 

கௌண்ட்டின் முகமோ குழப்பத்தால் இருண்டது. எங்கோ மாபெரும் தவறு இருக்கின்றது என்று நினைத்தார். ஏற்கனவே உலோகத்தை உருக்கும் போதே அதிலிருக்கும் கலோரிக் அனைத்தும் வழிந்து ஓடிவிட்டது! அதன் பின் அக்குழம்பு குளிர்ந்து இந்த உலோகத் துண்டு உருவாகி இருக்கின்றது. ஆனால், அதைத் துளையிடும் போது அதனுள்ளிருந்து மேலும் எங்கிருந்து இவ்வளவு கலோரிக் வர முடியும்?

இக்கேள்வியில் அவர் ஆழ்ந்திருக்கும் போதே தொழிலாளிகள் அடுத்த குழாயைத் துளையிட ஆரம்பித்தனர். அப்போது தான் அவருக்குச் சட்டென்று அவரது கேள்விக்குப் பதில் உதித்தது! துளையிடும் காரியமே வெப்பத்தை உருவாக்குவதாக ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி தான் அந்தப் பதில். துளையிடும் கருவி உலோகத்தைத் துருவும் போது ஏற்படும் அசைவே வெப்பமாக உருவெடுக்கின்றது என்பதைக் கண்டறிந்தார் ரம்ஃபோர்டு.

இன்று நாம் அதனை உராய்வு என்று எளிதாகக் கூறினாலும், உராய்வு வெப்பத்தினை உருவாக்கும் வழிகளில் ஒன்று என்று நம்பினாலும், ரம்ஃபோர்டின் காலமான 1790ல் அவரை யாரும் நம்பவில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கு கலோரிக் தான் வெப்பத்தின் காரணம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர்.

காற்று மண்டலத்துடன் உராய்வதாலேயே எரிகற்கள் உருவாகின்றன என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதனால் ஏற்படும் வெப்பத்தைத் தடுக்கவே விண்ணூர்திகளின் அடிப்புறம் செராமிக் கற்களைக் கொண்டு அடுக்குகள் உருவாக்கியிருக்கின்றனர். அக்கற்களில் ஏற்பட்ட பிரச்னையால் தான் கொலம்பியா வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லாவுடன் இன்னும் சிலரது உயிரையும் உராய்வு பறித்தது என்பது கூடுதல் தகவல்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 22

22. கண்டுபிடிப்பு: பொருள் நிறை குறையாப் பண்பு (Conservation of Matter)

கண்டறிந்தவர்: ஆண்டனி லவாய்ஸியர் (Antoine Lavoisier)

காலம்: 1789

எந்த ஒரு வேதியியல் ஆய்வுக்கு முன்பும், ஆய்வின் போதும், ஆய்வு முடிந்த பின்பும் பல விதங்களில் அளந்து குறிப்பெடுக்க வேண்டும் எனும் வழக்கத்தை முதன் முதலில் ஆரம்பித்த விஞ்ஞானி ஆண்டனி லவாய்ஸியர் ஆவார். அதற்கு முன்பு வரை அனைத்து ஆராய்ச்சிகளும் பொருட்களின் வேதியியல் விளைவுகளைப் பற்றி விளக்குபவையாகவும் அவ்விளைவுகளைப் பற்றி வர்ணிப்பவையாகவும் மட்டுமே இருந்தன. லவாய்ஸியர் தனது அனைத்து ஆய்வுகளுக்கு முன்னும் பின்னும் அனைத்துப் பொருட்களின் எடையையும் மிகத் துல்லியமாகக் கவனிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அவர் கண்டறிந்தவை அவரை நவீன உலகின் வேதியியல் தந்தையாக உருவெடுக்க வைத்தது! அவர் அப்படி என்ன கண்டறிந்தார்? எப்படி அதைக் கண்டறிந்தார்?

1781 வாக்கில் பிரெஞ்சு விஞ்ஞானியான ஆண்டனி லவாய்ஸியரின் மனைவியான மேரி, ராபர்ட் பாய்லேயின் ஒரு கட்டுரையை பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தார். அக்கட்டுரையில் ஒரு சோதனை பற்றிய முடிவுகளை பாய்லே குறித்து வைத்திருந்தார். அதாவது இரும்புத் தகடைச் சூடாக்கும் போது அதன் எடையில் மாற்றம் ஏற்படுவதைக் குறித்திருந்தார். மற்ற விஞ்ஞானிகளைப் போலவே பாய்லேயும் அந்த வேதியியல் ஆராய்ச்சியின் போது அதிகப்படியான எடை உருவானதாகக் குறிப்பிட்டிருந்தார்.

லவாய்ஸியருக்கு அதை அப்படியே நம்புவதில் இஷ்டமே இல்லை. சரியான முறையில் அனைத்து விஷயங்களையும் அளக்கவில்லை, அதிலும் குறிப்பாக பொருளின் எடையை மட்டுமல்லாது சுற்றுப்புறத்தைப் பற்றியும் துல்லியமாக அளக்க வேண்டும். அவ்வாறு பாய்லே செய்திருக்க மாட்டார் என்று சந்தேகப்பட்டார். அதனைச் சரிபார்க்க, பாய்லேயின் அந்தச் சோதனையைத் தானும் செய்து விட முடிவுசெய்தார்.

அவ்வாறே மீண்டும் சோதனை செய்த லவாய்ஸியர் அந்த அதிகப்படியான எடை அந்த இரும்புத் தகடுக்கு எங்கே இருந்து வந்தது என்று கண்டுபிடித்து விட்டார்! 

முதலில் ஒரு சிறு தகடை எடுத்த ஆண்டனி அதை மிகத் துல்லியமாகத் தன் தராசில் வைத்து எடையைக் கண்டுபிடித்துக் குறித்துக் கொண்டார். அதன் பின்னர் அத்தகடை வெப்பத்தைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்து அதன் வாயை இறுக அடைத்தார். எந்த விளைவானாலும் அது அந்த குடுவைக்குள் தான் இப்போது நிகழ்ந்தாக வேண்டுமல்லவா?! இப்போது அந்தத் தகடோடு சேர்த்துக் குடுவையின் எடையையும் குறித்துக் கொண்டார். இப்போது அந்தக் குடுவையைச் சூடாக்க ஆரம்பித்தார். சூடு அதிகமாகும் போது அவர் உள்ளே வைத்த இரும்புத் தகட்டின் மேல் சாம்பல் நிறத்தில் ஒரு அடுக்கு படியக் கண்டார். அதன் பின்னர் சூடாக்குவதை நிறுத்தி விட்டுக் குடுவையைக் குளிர வைத்தார். மீண்டும் குடுவையை எடை போட்டார். என்ன ஆச்சரியம்! குடுவையின் எடையில் எந்த மாற்றமும் இல்லை! இப்போது குடுவையை மெல்லத் திறந்ததும் காற்று வெற்றிடத்தை நிரப்புவதைப் போல் வேகமாக உள்ளே நுழைந்தது. இப்போது தகடை மீண்டும் எடுத்து எடையைப் போட்டார் ஆண்டனி. தகட்டின் எடை 2 கிராம் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தார். பாய்லே சொன்னது போலவே தகடின் எடை அதிகரித்திருந்தது.

குடுவையின் மொத்த எடை ஆய்வுக்கு முன்னும் பின்னும் மாறாததால் தகடுக்கு அதிகப்படியான எடை குடுவைக்கு உள்ளே இருந்த காற்றினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார் ஆண்டனி. அதனால் தான் காற்று வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேகமாக நுழைந்திருக்க வேண்டும் என்று யூகித்தார் ஆண்டனி. தகடு சூடேறும் போது காற்றுடன் வினைபுரிந்து சாம்பல் நிற அடுக்கு உருவாகி இருக்கின்றது என்று கண்டறிந்தார். இப்போது சற்றுப் பெரிய தகடை எடுத்துச் சூடாக்கி அதனை எடை போட்டார். அதே இரண்டு கிராம் தான் அதிகரித்திருந்தது! எத்தனை பெரிய தகடைச் சூடாக்கினாலும் இரண்டு கிராம் மட்டுமே அதிகரித்தது! அதுவே பெரிய குடுவையில் வைத்தால் இன்னும் கொஞ்சம் அதிக எடை அதிகரித்தது! ஆக, குடுவைக்குள் இருக்கும் காற்றின் அளவைப் பொறுத்தே தகடின் எடையில் மாற்றம் உருவாவதைக் கண்டறிந்தார். அதிலும், குடுவைக்குள் இருக்கும் காற்று அதிகரிக்க அதிகரிக்க, அதிகமான எடை அளவில் 20 சதவீதம் மட்டுமே தகடுடன் வினைபுரிந்து அதன் எடை அதிகரிக்க வகை செய்தது.

சுற்றுப்புறக் காற்றில் 20 சதவீதக் காற்று மட்டுமே தகடை வினைபுரியச் செய்ய வைக்க வல்லது என்று கண்டறிந்தார். இந்த 20 சதவீதக் காற்று தான் 1774ல் ப்ரிஸ்ட்லி கண்டறிந்த சுத்தக் காற்று என்று உணர்ந்து கொண்ட ஆண்டனி அதற்கு ஆக்ஸிஜன் என்று பெயரிட்டு அழைத்தார். அத்தோடு அதை ஆண்டனி விடவில்லை. மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். பல்வேறு வேதி வினைகளின் போது நிகழ்வதை அளந்து பார்த்து மிக முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தார். 

ஆம்! மொத்தமாகப் பொருளின் நிறை எப்போதும் அழிவதில்லை! அதை யாரும் அழிக்க முடியாது! வேதி வினைகளின் போது பொருளின் நிறையானது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம், அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குச் செல்லலாம். ஆனால் மொத்த நிறை எப்போதும் மாறுவதில்லை என்று உலகுக்கு வெளிக்காட்டினார். எந்த ஒரு ஆராய்ச்சியின் போதும் நிறை எங்கே சென்றது என்பதையும் குறித்து வைத்திருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

தான் கண்டறிந்த இம்முடிவுகளை 1789ல் அவர் வேதியியல் புத்தகத்தில் வெளியிடும் வரை ரகசியமாகவே வைத்திருந்தார்.

வரி வசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றிய அவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது மரண தண்டனை பெற்று 8/5/1794ல் தனது 50வது வயதில் கில்லெட்டின் கருவியின் மூலம் தலை வெட்டுப்பட்டு மாண்டார். 

"The Republic needs neither scientists nor chemists; the course of justice cannot be delayed" இவ்வார்த்தைகள் அவருக்குத் தீர்ப்பளித்த நீதிபதி கூறியது.

"It took them only an instant to cut off his head, but France may not produce another such head in a century." இவ்வார்த்தைகள் அவரைத் தண்டனைக்குள்ளாக்கிய பின் ஜோசப் லூயி லாக்ரான்ஜ் என்னும் கணிதமேதை கூறியது.

"To the widow of Lavoisier, who was falsely convicted." மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்த பின், அவரது உடமைகளைத் திருப்பிக் கொடுக்கும் போது அவரது மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் வார்த்தைகள் இவை.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 21

21. கண்டுபிடிப்பு: ஒளிச்சேர்க்கை (Photosynthesis)

கண்டறிந்தவர்: ஜன் இங்கென்ஹௌஸ் (Jan Ingenhousz)

காலம்: 1779

உலகம் முழுவதிலும் தாவரங்கள் வளர்வதற்கும் பரவி இருப்பதற்கும் முக்கியக் காரணமே ஒளிச்சேர்க்கையாகும். மேலும், தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளியிடுவதும் ஒளிச்சேர்க்கை என்னும் செயலால் தான் நிகழ்கின்றது. விஞ்ஞானி ஜன் இங்கென்ஹௌஸின் ஒளிச்சேர்க்கையைப் பற்றிய அரிய கண்டுபிடிப்பு நாம் புவியின் காற்றுமண்டலத்தில் கரியமில வாயு மற்றும் பிராண வாயுவைப் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் உதவிகரமாக இருந்தது. 

1730ம் ஆண்டு நெதர்லாந்தின் ப்ரேடா எனுமிடத்தில் பிறந்தார் ஜன் இங்கென்ஹௌஸ். ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்று தன் மருத்துவச் சேவையை அந்த ஊரிலேயே துவங்கினார் இளம் ஜன் இங்கென்ஹௌஸ். 1774ல் பிரிஸ்ட்லி ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்த தன் ஆய்வின் போது ஒரு குடுவைக்குள் ஆக்ஸிஜனை நிரப்பி அதற்குள் ஒரு குச்சியை எரிய வைத்து அதுவாக அணைந்து போகச் செய்தார். இதனால் அந்தக் குடுவைக்குள் வெறும் கரியமில வாயு மட்டுமே இருந்தது. அதற்குள் ஒரு நீரில் மிதக்கும் மிண்ட் செடியைக் காட்டி அந்த வாயுவால் செடிக்கு ஏற்படும் விளைவைக் கண்டறிய முற்பட்டார். அந்தச் செடி சாகாமல் பிழைத்துக் கொண்டது. இரண்டு மாதங்கள் கழித்து அதற்குள் ஒரு எலியை விட்டுப் பார்க்கும் போது எலி பிழைத்திருக்கக் கண்டார். இதன் மூலம் மிண்ட் செடி கரியமில வாயுவில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கியது கண்டறியப்பட்டது. ஆனால், இது எல்லா சமயங்களிலும் இதே போலவே நடைபெறவில்லை! பல சமயங்களில் தோல்வியிலும் முடிந்தது! எனவே இது புதிரான ஒன்றாக இருக்கின்றது என்று ப்ரிஸ்ட்லி சோதனையைக் கைவிட்டார்.

இதைப் பற்றி அறிந்த ஜன், இந்தப் புதிரை எப்படியாவது விடுவிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் ஜன். எப்படியெல்லாம் சோதனை செய்ய முடியுமோ, என்னென்ன மாற்றங்களுக்கெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ எல்லாவற்றிலும் முயற்சி செய்தார். அவர் ஒரு தாவரம் வெளியிடும் வாயுவைப் பிடிப்பதற்கு இரண்டு வழிமுறைகள் வைத்திருந்தார். ஒன்று தாவரத்தைச் சுற்றி ஒரு குடுவையை வைத்திருப்பது. மற்றொன்று தாவரத்தை நீரில் மூழ்க வைத்துச் சோதனை செய்வது.

இதில் அவரால் நீரில் மூழ்க வைத்துச் சோதனை செய்வதில் தான் எளிதாக வாயுவைப் பிடிக்க முடிந்தது. ஏனெனில் தாவரங்களிலிருந்து வாயு வெளியாகும் போது சிறு குமிழிகள் தோன்றுவதை நேரடியாகக் கண்ணால் காண முடிந்தது. ஒவ்வொரு முறை வாயுவைப் பிடிக்கும் போது அது மெழுகுவர்த்தியை எரிய விடுகின்றதா அணைத்து விடுகின்றதா என்று சோதனை செய்தார்.

அப்போது தான் அவர் ஒரு அரிய உண்மையைக் கண்டறிந்தார். மனிதர்கள்/விலங்குகள் ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றார்கள். தாவரங்கள் அப்படியே தலைகீழாக மாற்றிச் செய்கின்றன. சூரிய ஒளியில் இருக்கும் தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதே சமயத்தில் இரவு நேரத்திலும், நிழலிலும் இருக்கும் தாவரங்கள் மனிதர்களைப் போலவே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுகின்றன என்று கண்டறிந்தார் ஜன்.

ஆனால் அவை வெளிவிடும் ஆக்ஸிஜன் அவை உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். சூரிய ஒளியில் நீரில் மூழ்கி இருக்கும் தாவரம் சுத்தமான ஆக்ஸிஜனை நீர்க்குமிழியாக வெளியிடுவதை நேராகக் காண முடிந்தது. இரவானதும் எந்த நீர்க்குமிழியும் உருவாகவில்லை. ஆனால், வெகுநேரம் கழித்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியாக ஆரம்பிக்கின்றது. இந்த வாயு மெழுகுவர்த்தியை எரிய விடாமல் அணைத்து விட்டது! அதே செடியை சூரிய ஒளியில் வைத்ததும் உடனே ஆக்ஸிஜனை வெளிவிட ஆரம்பித்து விடுகின்றது.

ஆக, இந்த வாயுக்கள் வெளியிடுவது சூரிய ஒளியைச் சார்ந்து இருக்கின்றது என்று கண்டறிந்தார் ஜன். இதுவரை எல்லோரும் நம்பியிருந்த தாவரங்கள் புதிய இலைகள், தண்டுகளை உருவாக்க நிலத்திலிருந்து நிறையை (Mass) எடுத்துக் கொள்கின்றன என்ற கொள்கை தவறானது என்று முதன்முதலில் கண்டறிந்தவராகின்றார் ஜன். மாறாகத் தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டு தான் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடிலுள்ள கார்பனை (Mass) வளர்வதற்காக எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனைப் பிரித்து வெளிவிடுகின்றன என்று கண்டறியப்பட்டது! 

போட்டோ சிந்தசிஸ் எனப்படும் சொல் சில ஆண்டுகள் கழித்தே தாவரங்களின் இந்தச் செயல்பாட்டுக்கு வழங்கப்பட்டது.

ஒளிச்சேர்க்கையைக் கண்டறிந்ததன் மூலம் ஜன் இங்கென்ஹௌஸ் ஒரு அரிய அறிவியல் உண்மையை உலகம் அறிந்து கொள்ள வழி செய்துள்ளர்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 20

20. கண்டுபிடிப்பு: பிராணவாயு (Oxygen)

கண்டறிந்தவர்: ஜோசஃப் ப்ரிஸ்ட்லி (Joseph Priestley)

காலம்: 1774

மனிதன் வாழ நீர், காற்று, புவி, நெருப்பு ஆகிய அடிப்படைக் கூறுகளின் தேவை பற்றி வெகுகாலமாக அறிந்திருந்தாலும், மற்ற கூறுகளின் தன்மை பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும் காற்று பற்றி மட்டும் யாரும் அதிக ஆராய்ச்சி செய்யவில்லை. காற்றில் என்னென்ன வாயுக்கள் கலந்திருக்கின்றன? அவற்றினைப் பிரிப்பது எப்படி என்பது பற்றி அறிந்திருக்கவில்லை. அதை முதன்முதலில் செய்தவர் ஜோசஃப் ப்ரிஸ்ட்லி ஆவார்.

பொருட்கள் எரிவதற்கு அடிப்படைத் தேவை பிராணவாயு என்பதாலும் எரிதலின் போது என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருந்ததாலும் அவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. ப்ரிஸ்ட்லி மேலும் ஒரு வாயுவைப் பிரித்தறியும் போது எதையெல்லாம் கண்டறிய வேண்டும் அதை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பதையும் வரையறுத்தார். எடுத்துக்காட்டாக, வாயுவின் நிறம் என்ன, வாயுவில் விஷத்தன்மை உண்டா, நீரில் கரையுமா போன்ற கேள்விகளுக்குப் பதிலைக் கண்டறியலாம் என்று உணர்த்தினார்.

ரெவரெண்ட் ஜோசஃப் ப்ரிஸ்ட்லிக்குத் தனது தேவாலயப் பணிகளைக் காட்டிலும் வாயுக்களின் மேல் தான் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அடிப்படைக் கூறுகளில் ஒன்றான காற்று எதனால் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிய ஆர்வம் காட்டினார். இவருக்கு முந்தைய விஞ்ஞானிகள் பொருட்களில் ஏற்படும் வேதி வினையின் போது புதிய வாயுக்கள் குமிழிகளாக (நீருக்குள்ளிருந்து) வெளிவருகின்றன என்பதைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கின்றனர். இந்த வாயுவுக்கு அவர்கள் ‘முரட்டு வாயு’ என்று பெயர் சூட்டினார்கள். இந்த வாயு மரங்களை மூன்று மடங்கு வேகத்தில் எரிய வைக்கின்றது என்றும் முன்பே கண்டறிந்திருந்தனர். ஆனால் ஒருவராலும் இதைத் தனிமைப்படுத்திப் பிடித்து வைத்து ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. ப்ரிஸ்ட்லி இந்த வாயுக்களைப் பிரித்துப் பிடிக்கப் பலமுறைகளில் முயற்சி மேற்கொண்டார். 
1774 ஆண்டின் முற்பகுதியில் இவ்வாயுவைத் தலைகீழாய்க் கவிழ்த்து வைக்கப்பட்ட நீர்க்குடுவையினுள் நிரப்புவதன் மூலம் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆகஸ்டு 1, 1774 அன்று ஒரு சக்தி மிக்க உருப்பெருக்கக் குவியாடியின் மூலம் சூரிய வெளிச்சத்தை ஒரு கண்ணாடிப் புட்டிக்குள் பொடியாக்கப்பட்ட mercurius calcinatus எனப்படும் பாதரச ஆக்ஸைடின் மீது விழச் செய்தார். அந்தப் புட்டியின் வாய்ப்பகுதி ஒரு தக்கையால் அடைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலிருந்து ஒரு கண்ணாடிக் குழாய் மற்றொரு நீர்த் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்த நீர்த்தொட்டியினுள் தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு புட்டிக்குள் இந்தக் குழாயின் மறுபகுதி இருந்தது. இதனால் வேதிவினையால் உருவாகும் வாயு வேறெங்கும் செல்ல முடியாமல் நீர்க்குடுவையினுள் அடைபட்டுக் கொண்டது! மெர்க்குரி ஆக்ஸைடு சூடாக ஆரம்பித்ததும் அதிலிருந்து கிளம்பிய வாயு நேராக குடுவைக்குள் சென்றது. ப்ரிஸ்ட்லி இது போன்ற மூன்று குடுவைகளில் அந்த வாயுவைப் பிடித்து வைத்துக் கொண்டார். இதன் மூலம் முதன்முதலில் ஒரு வாயுவைத் தனிமைப்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தார்.

முதல் குடுவையின் வாயில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியைப் பிடித்துப் பார்த்தார். மெதுவாக எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சடாரென தீப்பந்து போல் எரிய ஆரம்பித்தது! அனைவரும் சொன்னது போலவே இவ்வாயு எரிதலை வேகப்படுத்துகின்றது என்று கண்டறிந்தார்!

ப்ரிஸ்ட்லி சாதாரணமாக அறையில் நிறைந்திருக்கும் காற்றினைக் கொண்ட இன்னொரு குடுவையையும் அருகில் வைத்துக் கொண்டார். இரண்டிற்குள்ளும் ஒவ்வொரு எலியைப் போட்டார். சாதாரண குடுவைக்குள் 20 நிமிடங்கள் வரை மூச்சுத்திணறல் இல்லாமல் இருந்தது எலி. ஆனால் இப்போது பிடித்து வைத்த குடுவைக்குள்ளோ 40 நிமிடங்களுக்கு மேலும் எலிக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே இல்லை! அப்படியானால் இது “தூய வாயு” என்று முடிவுக்கு வந்தார் ப்ரிஸ்ட்லி.

இன்னொரு குடுவையைத் தனது மூக்கினருகே வைத்துக் கண்களை மூடிக் கொண்டு இருதயம் படபடக்க அதிலிருக்கும் வாயுவை உள்ளிழுத்தார் ப்ரிஸ்ட்லி! அந்த வாயுவைச் சுவாசித்ததும் எந்தப் பிரச்னையும் ஏற்படாதது மட்டுமல்ல, அவருக்குள் அந்த வாயுவினால் ஒரு சக்தியும் பிறப்பதைக் கண்டார். அந்த வாயு மிகவும் லேசாகவும், வாயுவைச் சுவாசிப்பது மிகவும் சுகமாகவும் இருப்பதைக் கண்டு கொண்டார்.

பாரீஸில் இருந்த மற்றொரு விஞ்ஞானியான அந்தோணி லவாய்ஸியர் (Antoine Lavoisier) ப்ரிஸ்ட்லி தனிமைப் படுத்திய இந்த வாயுவுக்கு ஆக்ஸிஜன் என்று பெயர் சூட்டினார்!

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 19


19. கண்டுபிடிப்பு: உலகத் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கடல்கள் (Oceans control the global weather)

கண்டறிந்தவர்: பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

காலம்: 1770

அட்லாண்டிக் கடலில் இயங்கும் வளைகுடா நீரோட்டம் உலகின் மிக முக்கியமான கடல் நீரோட்டமாகும். அது ஒரு மிகப் பெரிய சூடாக்கும் இயந்திரம் எனலாம். கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகமான வெப்ப நீரை வடக்குக்குக் கொண்டு சென்று மொத்த ஐரோப்பாவையே வெதுவெதுப்பாக்குகின்றது என்றால் அது உண்மை தான். இந்த வெப்ப நீரோடை வணிகத்துக்கும், கடல்வழிப் பயணங்களுக்கும் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று என்று கூடக் கூறலாம். இறுதியில் இதுவே உலகின் தட்பவெப்ப நிலைக்கும் காரணமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியப் படத்தக்க உண்மை. 

இந்த உண்மையைக் கண்டறிந்தார் அமெரிக்காவின் சிறந்த ராஜதந்திரி, விஞ்ஞானியுமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். எவ்வாறு கண்டறிந்தார் என்று காண்போமா? அவரது ஆராய்ச்சியில் கடல் நீரோட்டம், அதனால் கடலின் வெப்ப அளவில் ஏற்படும் மாற்றம், காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றம், தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவை அடக்கம். நவீனக் கடலாராய்ச்சியின் தந்தை என்றே பெஞ்சமினைத் தைரியமாக அழைக்கலாம்!

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அட்லாண்டிக் கடல் நீரோட்டத்தை எவ்வாறு கப்பலின் வேகத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிவதற்காகவே தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார். ஆனால் அவர் கண்டறிந்ததோ உலகுக்கே பயனளிக்கக் கூடிய தட்பவெப்ப நிலை மாற்றத்துக்கான காரணத்தை என்பது ஆச்சரியம் தான்!

அட்லாண்டிக் கடலின் நீரோட்டம் கப்பலோட்டிகளுக்குச் சாதகமானது என்பதைக் காலம் காலமாக உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டனர் அக்கால மாலுமிகள். Columbus மற்றும் Ponce de Leon போன்றவர்கள் ப்ளோரிடா கடற்கரைப் பகுதி, ப்ளோரிடா மற்றும் க்யூபாவுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உணர்ந்ததாகக் குறித்திருக்கின்றார்கள். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வட அட்லாண்டிக் கடல் முழுவதும் அதை உணர ஆரம்பித்திருந்தனர். இருந்த போதிலும் அதை யாரும் அளக்கவில்லை, மதிப்பிடவில்லை, படமாக ஆக்கவில்லை. 

1769ல் போஸ்டனில் இருந்த ஆங்கில அதிகாரிகள் லண்டனுக்கு ஒரு கடிதத்தில் பிரிட்டனின் பிரயாணிகளையும் கடிதங்களையும் சுமந்து சென்ற சிறுவகைக் கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக் கடக்கும் போது அமெரிக்கக் கப்பல்களைக் காட்டிலும் இரண்டு வாரங்கள் தாமதமாகச் செல்வதாகக் குறைபட்டுக் கொண்டனர். அப்போது அமெரிக்கத் தூதுவராக லண்டனில் தங்கியிருந்த பெஞ்சமின் காதுகளுக்கு இது சென்றடைந்த போது அவர் இதை நம்பவில்லை!

ஏனெனில் பிரிட்டனின் சிறுகப்பல்கள் அமெரிக்க வணிகக் கப்பல்களைக் காட்டிலும் அதிவேகமாகச் செல்லக் கூடியவை. இது சாத்தியமா என்று அமெரிக்க வணிகக் கப்பல்களின் மாலுமிகளிடம் விசாரித்தார் பெஞ்சமின். அந்தக் கப்பலின் மாலுமியோ, இது உண்மை என்றும், ரோட் தீவின் மாலுமிகள் அனைவருக்கும் வளைகுடா நீரோட்டமானது கப்பலின் வேகத்தை மணிக்கு 3 மைல்கள் அதிகரிக்க வைப்பது தெரியும் என்றும், அது நியூயார்க்கிலிருந்து நியூ இங்கிலாந்து வரை கிழக்கு முகமாக இருக்குமென்றும் கூறினார். இதனால் அமெரிக்க மாலுமிகளுக்கு இவ்விடத்தை அடைந்ததும் மேற்கிலிருந்து வரும் போது வடக்கிலோ தெற்கிலோ சற்று வளைந்து (நீரோட்டத்தை எதிர்க்காமல்) செல்வார்கள் என்றும் கூறினார்!

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் இதைச் சரிபார்க்க படங்களைக் காணும் போது இது எங்கேயும் குறித்து வைக்கப்படவே இல்லை என்பதை உணர்ந்தார்! அதன் பின்னர் பல மாலுமிகள், திமிங்கலம்/சுறாக்களை வேட்டையாடுபவர்களைப் பேட்டி கண்டார் பெஞ்சமின். சுறா வேட்டையாடுபவர்களுக்கு இந்த நீரோட்டம் பற்றி அதிக அறிவு இருப்பதையும் கண்டார்.

1770 வாக்கில் நீரோட்டம் குறித்த விரிவான படங்களைத் தயாரித்தார் பெஞ்சமின். ஆனால் பிரிட்டிஷார் அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை. 1773ல் ஏற்பட்ட காலணி ஆதிக்கப் பிரச்னைகளின் காரணமாகத் தனது கண்டுபிடிப்புகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தார் பெஞ்சமின். 

1783 க்குள் அட்லாண்டிக் கடலில் எட்டு முறை குறுக்காகப் பயணம் செய்து பல இடங்களில் தட்பவெப்ப நிலையைக் குறித்து வைத்துக் கொண்டார் பெஞ்சமின். அவரது கடைசிப் பயணத்தில் ப்ரான்ஸிலிருந்து அமெரிக்கா செல்லும் வழியில் மாலுமியிடம், நீரோட்டத்தின் ஓரத்திலேயே செல்லுமாறு பணித்தார் பெஞ்சமின். அது அவரது பயணத்தை மிகவும் தாமதப்படுத்தியது! கப்பலின் ஒருபுறம் வெப்ப நீரோட்டம், மறுபுறம் குளிரான கடல்நீர் ஆகிய இரண்டுக்கும் நடுவில் கப்பல் தத்தளித்ததைக் கண்கூடாகக் கண்டார் பெஞ்சமின்! அப்போது 20 மற்றும் 40 பாத்தம் ஆழத்தில் வெப்ப அளவும் குறித்து வைக்கப்பட்டது. இது தான் முதன் முதலில் நீரோட்டத்தின் ஆழத்தையும் கண்டறிய நிகழ்ந்த முயற்சியாகும். இதன் மூலம் நீரோட்டத்தின் கன அளவும் அறிய முடிந்தது. 
இது தான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளினின் நீரோட்ட வரைபடமாகும். (நன்றி விக்கிபீடியா)

வளைகுடா நீரோட்டம் மிக அதிக அளவில் வெப்ப நீரை கரீபியனிலிருந்து வடக்காக ஐரோப்பாவை வெதுவெதுப்பாக்குகின்றது என்று கண்டறிந்தார். இதன் மூலம் நீரோட்டம் தட்பவெப்ப நிலையையே கட்டுப்படுத்துகின்றது என்றும் கண்டறிந்தார். காற்றின் அளவு, வேகம், திசை இவை அனைத்தும் நீரோட்டங்களால் நிர்ணயிக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. பெஞ்சமின் குறித்த தகவல்கள் கொஞ்சம் என்றாலும், மேலும் மேலும் கடலாராய்ச்சி செய்ய இது ஊக்கமாக இருந்தது என்பதை மறுக்கவியலாது. 1814ல் ஜெர்மானிய விஞ்ஞானி Alexander von Humbolt 20 முறை குறுக்காகப் பயணம் செய்து தனது ஆராய்ச்சி முடிவுகளை அறிவிக்கும் வரை பெஞ்சமினின் தகவல்களே மிக விரிவானதாக இருந்தது. இவ்விரண்டு ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளும் கடலாராய்ச்சியின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.

வளைகுடா நீரோட்டம், உலகில் இப்போது ஓடும் மிசிசிபி, நைல், காங்கோ, அமேசான், வோல்கா, யாங்க்சீ போன்ற பெருநதிகளுடன் மற்ற அனைத்து நதிகளையும் இணைத்தாலும் கூட அதை விட அதிக அளவில் நீரைக் கொண்டிருக்கின்றது என்னும் தகவல் இந்நீரோட்டத்தின் பிரமாண்டத்தை உணர்த்தக் கூடும்!

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 18

18. கண்டுபிடிப்பு: மின்சாரத்தின் இயல்பு (The Nature of Electricity)

கண்டறிந்தவர்: பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

காலம்: 1755

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு மாபெரும் மேதை. அவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். அவர் ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், அரசியல் தத்துவ வித்தகர், சித்தாந்தி, அரசியல்வாதி, தபால் தந்தி அலுவலர், கண்டுபிடிப்பாளர், சமூகக் காவலர், ராஜதந்திரி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிவியல் துறைக்கு அவர் ஆற்றிய அரிய சாதனைகளில் ஒன்று மின்சாரத்தின் இயல்பினைக் கண்டறிந்தது ஆகும். 19ம் நூற்றாண்டில் உலகின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடிகோலியதில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுக்கு முன்பே மின்சாரம் கண்டறியப்பட்டுவிட்டது. 18ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் வரை மின்சாரம் என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று விளையாட்டுத்தனமான நிலை மின்சாரம் (Static Electricity) (ஒரு சீப்பை வாரிக் கொண்டு கீழே கிடக்கும் தாளைத் தூக்குதல், வேகமாக வெளியில் சென்று வந்ததும் சட்டையிலிருந்து பட பட வென்ற சத்தம் கிளம்புதல், அருகில் கொண்டு சென்றால் மயிர்க்கூச்செரிதல் போன்றவை நாம் நிலைமின்சாரம் கொண்டு விளையாடியிருக்கக் கூடிய விளையாட்டுகள்!). மற்றொன்று அதிபயங்கரமான அழிவைத் தரக் கூடிய மின்சாரம் (எ.கா. மின்னலில் பாய்வது). 

1746ல் பெஞ்சமின் தான் மின்சாரத்தைத் தனது முக்கியமான ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானியாவார். இவர் தான் முதன்முதலில் நிலைமின்சாரமும், மின்னலில் பாயும் மின்சாரமும் இரு வடிவத்திலிருக்கும் ஒரே பொருள் என்று யூகித்தவரும் ஆவார். 

ஃப்ராங்க்ளினின் தனது சோதனைகளுக்கு Leyden jars எனப்படும் ஜாடிகளைப் பயன்படுத்தினார்.

ஒரு கண்ணாடிக் குடுவையின் உள்ளும் புறமும் மின்கடத்தும் உலோகப் பூச்சு பூசப்பட்டிருக்கும். (படத்தில் A மற்றும் B) இந்த ஜாடிகளில் பாதி அளவுக்கு நீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு கம்பி (எலெக்ட்ரோட்) உட்பக்கமாக இந்த B உலோகப்பூச்சைத் தொடும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய கைப்பிடி கொண்ட மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் மூலம் இந்த ஜாடியின் உட்பூச்சில் மின்சாரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்! இது தான் ஆரம்ப கால மின்கலனாகும். தற்போதைய capacitor என்றும் கொள்ளலாம்.

யாராவது இந்த மேல்பகுதியைத் தொட்டால் மின்சாரம் தாக்குவதை உணர முடியும்! ஃப்ராங்க்ளின் இது போன்ற ஜாடிகளை வரிசையாக வைத்து அதற்குத் தொடர்பை ஏற்படுத்தி விட்டால், அதிக அளவிலான ஆளையே தூக்கி எறியக் கூடிய அளவு மின்சாரம் உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

 1752ல் தனது நண்பர்களுக்கு அப்படி ஒரு சோதனையைச் செய்து காட்ட முயலும் போது அவர் தற்செயலாக ஜாடியின் மேற்பகுதியைத் தொட்டுவிட ஊதா நிறத்தில் ஒளி ரூபத்தில் மின்சாரம் பாய்ந்து சில அடிகளுக்குத் தூக்கிவீசப்பட்டார். இது கிட்டத்தட்ட மின்னல் போலவே இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டார் ஃப்ராங்க்ளின். ஆக, ஜாடிக்குள் இருக்கும் நிலைமின்சாரமும், வானத்தின் மேகத்திலிருந்து வெளியாகும் மின்சாரமும் ஒன்றே என்று நிரூபிக்க முனைந்தார் ஃப்ராங்க்ளின்.

ஒரு பெரிய பட்டம் ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு மெல்லிய மின்கடத்தும் கம்பியை நூலுடன் சேர்த்துப் பயன்படுத்திக் கீழே ஒரு பெரிய இரும்புச்சாவியைக் கட்டினார். இரும்புச்சாவியில் மின்சாரம் வந்து தங்கிவிடும் என்பது அவரது கணிப்பு. அந்த இரும்புச்சாவியை ஒரு பட்டுத் துணியால் கட்டி அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டார் ஃப்ராங்க்ளின்.

இதை உருவாக்கிய சில நாட்களில் மின்னல் வெட்டியபடி பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. தனது பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய ஃப்ராங்க்ளின் அதைப் பறக்கவிட்டார். வரலாற்றில் எழுதி வைத்திருப்பது போல் நிகழவில்லை. அந்தோ பரிதாபம்! பட்டத்தின் நூல் அறுந்து விட்டது! அன்று மிக நல்லதொரு காரியம் நிகழ்ந்திருக்கின்றது. இதே போன்ற ஒரு சோதனையைச் செய்ய முயன்ற ப்ரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் மின்னல் தாக்கிப் பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார்!

அன்று ஃப்ராங்க்ளின் கதை என்னவாயிற்று? மின்னல் அடித்ததும், நீல வண்ணத்தில் பட்டத்தின் கயிறு வழியாக மின்சாரம் நீர் போல் இறங்கி வருவதைக் கண்டார் ஃப்ராங்க்ளின். அடுத்த விநாடியே பட்டத்தின் நூல் பிரிந்து அறுந்து விட்டது. ஃப்ராங்க்ளின் மிக மிகக் கவனத்துடன் இரும்புச் சாவியின் அருகில் கையைக் கொண்டு சென்றார். எவ்வாறு அவரை முன்பு மின்சாரம் தாக்கியபோது உணர்ந்தாரோ அதே போன்று இப்போதும் உணர்ந்தார்! மின்னலின் மின்சாரமும், நிலைமின்சாரமும் ஒன்றே என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவரது இந்தத் தத்துவத்தின் படியே தான் இடிதாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் வோல்டா, ஃபாரடே மற்றும் ஓர்ஸ்டெட் போன்ற பலரும் மின்சாரத்தைச் சார்ந்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 17

17. கண்டுபிடிப்பு: நட்சத்திர மண்டலம் (Galaxy)

கண்டறிந்தவர்(கள்): தாமஸ் ரைட் மற்றும் வில்லியம் ஹெர்ஷல் (Thomas Wright and William Herschel)

காலம்: 1750

தாமஸ் ரைட்
வில்லியம் ஹெர்ஷல்

நன்றி: விக்கிபீடியா

பூமி தான் அண்டத்தின் மையம் என்று வெகுகாலம் நம்பிக் கொண்டிருந்தனர். பின்னர் சூரியனைச் சுற்றியே கோள்கள் இயங்குகின்றன என்று கண்டறிந்ததும் சூரியன் தான் அண்டத்தின் மையம் என்று கருத ஆரம்பித்தனர். தாமஸ் ரைட் வந்து சூரியன் ஒரு பெரிய நட்சத்திர மண்டலத்தின் ஒரு பகுதியாகத் தான் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்யவும், அதைச் சில ஆண்டுகள் கழித்து வில்லியம் ஹெர்ஷல் நிரூபிக்கவும் செய்த பின்னர் தான் நட்சத்திர மண்டலம் என்பது உணரப்பட்டது. அண்டத்தின் வடிவமைப்பு பற்றிய மனிதனின் அறிவு இன்னும் கொஞ்சம் விசாலமடைந்தது. 

தாமஸ் ரைட் கணிதமும், அண்டவெளி விஞ்ஞானமும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். கடவுள் மீது அபரிதமாக நம்பிக்கை வைத்திருந்தார். நட்சத்திரங்கள் அனைத்தும் சொர்க்கத்திலிருந்து கடவுளால் பதித்து வைக்கப்பட்டிருப்பவை என்று நம்பினார். அவை அனைத்தும் குறிப்பிட்ட இடைவெளியிலேயே வரிசையாக அடுக்கப்பட்டிருந்ததாகவும் நம்பினார். ஆனால், உண்மை நிலையைத் தொலைநோக்கியில் காணும் போது நட்சத்திரங்கள் அவ்வாறு இல்லாமல் வானமெங்கும் சிதறி விட்டது போல் கிடப்பதைக் கண்டார். 

அவரது காலத்தில் நட்சத்திரங்கள் குறித்த கற்பனைகள் பலவாறு இருந்தன. சூரியனும் மற்ற கோள்களும் ஒரு மிகப் பெரிய கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும், கூட்டுக்கு வெளியே நட்சத்திரங்களைப் பதித்து வைத்திருப்பதாகவும், கூட்டுக்குள் சூரியனும் கோள்களும் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. எனவே சூரியன் தான் அண்டத்தின் மையமாகவும் கருதப்பட்டது. இன்னும் சிலரோ, அண்டத்தின் வெளிப்புறம் எப்போதும் ஒளிமயமாக இருப்பதாகவும், (Perpetual Day) அண்டத்தில் ஏற்பட்ட சிறு துளைகளின் வழியே ஒளி வருவதாகவும், அதுவே நட்சத்திரங்களென்றும் கருதினர்!

தாமஸ் ரைட் தொலைநோக்கியில் காணும் போது நட்சத்திரங்கள் வரிசையாக நடப்படவில்லை என்று முதலில் கண்டார். அதன் பின்னர், பல நட்சத்திரங்கள் ஒரே பட்டையாக பால்வெளி வீதியினை ஒட்டியே இருப்பதையும் கண்டார். ஒரு பெரிய புல்வெளியில் பனித்துளிகள் தான் நட்சத்திரங்கள் என்று கற்பனை செய்தார் ரைட். இப்போது பனித்துளிகளை மேலிருந்து காணும் போது அவற்றிற்கிடையே இடைவெளியைக் காண முடியும். அதே பனித்துளிகளைப் பக்கவாட்டில் அல்லது தரைமட்டத்தில் இருந்து காணும் போது நட்சத்திரங்கள் புல்வெளியை ஒட்டியே காணப்படும் என்றும் நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி கண்களுக்கு மாறாகத் தெரியும் என்றும் கற்பனை செய்தார் ரைட்! அதாவது கடவுள் நட்சத்திரங்களை வரிசையாக இடைவெளி விட்டே வைத்திருக்கின்றாரென்றும், நாம் இருக்கும் இடமும், காணும் முறையுமே நமக்கு நட்சத்திரங்கள் பட்டையாகத் தெரியக் காரணம் என்றும் முடிவுக்கு வந்தார் ரைட். 

அவ்வாறு கற்பனை செய்ததை மேலும் உண்மையாக்க, சனி கிரகத்தின் வளையங்கள் உதவி புரிந்தன. இது போன்ற வளையத்தில் சூரியன் என்னும் நட்சத்திரமும் இருந்தால், மற்ற நட்சத்திரங்கள் யாவும் எப்படித் தெரியுமோ அதே போன்று தான் பால்வெளி வீதியின் நட்சத்திரங்களும் தெரிகின்றன என்று எளிதாக ரைட்டால் விளக்க முடிந்தது. 

ஆயினும் தாமஸ் ரைட்டால் கற்பனை செய்து பார்க்க முடிந்ததை 35 ஆண்டுகள் கழித்து அதாவது 1785ல் நிரூபணம் செய்தார் வில்லியம் ஹெர்ஷல். ஹெர்ஷல் புள்ளியியல் முறைகளின் படி நட்சத்திரங்களை எண்ண முனைந்தார். ஆனாலும் அவரால் முடியவில்லை. எனவே வானத்தை 683 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகமாக அப்போது மிகப்பெரியதாக இருந்த 48 அங்குல தொலைநோக்கி வழியாக நட்சத்திரங்களைக் கண்டு அவற்றை எண்ண ஆரம்பித்தார். 

அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கும் வகையில் பால்வெளி வீதியின் அருகே மட்டும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அதற்கு நேரெதிரில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. தாமஸ் ரைட்டின் ரசிகரான வில்லியம் ஹெர்ஷல், தாமஸ் ரைட்டின் அமைப்பான ஒரு பெரிய வளையத்தின் நடுவே சூரியனும் பூமியும் இருக்கும் போது அந்த வளையத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காணும் போது இடைவெளி மிகக் குறைவாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும், அதற்கு எதிர்த்திசையில் இருக்கும் நட்சத்திரங்களுக்கிடையே இடைவெளி அதிகமாகவும், எண்ணிக்கை குறைவாகவும் தோன்றும் என்னும் அமைப்பு சரியாக ஒத்து வருவதை புள்ளியியலின் படி நிரூபித்தார்.

சூரியன் ஒரு குவிந்த பெரிய வளையத்தில் ஒரு மூலையில் இருந்தால் மட்டுமே இது போன்று தெரிய சாத்தியம் என்பதை அனைவரும் உணர்ந்தனர். 

நட்சத்திர மண்டலங்களுக்கு ஏற்கனவே தாமஸ் ரைட் வைத்த பெயரான Galaxy என்பதே வைக்கப்பட்டது.



உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 16

16. கண்டுபிடிப்பு: இயற்கையின் ஒழுங்கு

கண்டறிந்தவர்: கார்ல் லின்னயூஸ் (Carl Linnaeus)


காலம்: 1735

ஒட்டு மொத்த இயற்கையும் உயிரினங்களும் வித்தியாசமானவையாகவும், எந்த ஒரு ஒழுங்குக்கும் அடைபடாததாகவுமே அறியப்பட்டிருந்த வேளையில், அதுவும் குறிப்பாக தாவர இனத்தில் ஒவ்வொரு தாவரத்தையும் இனம் பிரித்து, அவற்றைக் குழுக்களாகத் தொகுத்து அதில் ஒரு ஒழுங்கைக் கண்டறிவது என்பது அதுவும் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கும் முன்பு என்பது ஒரு அசாதாரணமான விஷயம். அதை கார்ல் செய்து காட்டினார். அவரது இயற்கைத் தொகுப்பு முறை 300 ஆண்டுகள் தாண்டப் போகும் இந்தக் காலத்திலும் பயன்பாட்டில் இருக்கின்றது என்றால் அது உண்மையில் பிரமிக்கத்தக்கது தான். மொத்த இயற்கையையும் ஒரு மரமாகக் கற்பனை செய்து, ஒவ்வொரு உயிரினத்தையும் அந்த மரத்தின் கிளைகளாகப் பிரித்து ஒழுங்கு படுத்துவது என்பது கற்பனைக்கெட்டாத அளவு எத்தனை கடினமானது? அது கார்லுக்கு சாத்தியமானது.

கார்ல் லின்னயூஸ்க்கு முதலிலிருந்தே எதுவும் ஒழுங்கின்றி இருந்தால் பொறுக்காது. பிடிக்காது. வரிசைப்படி அடுக்காத எதையும் அவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவரது எழுத்துகளில் குறிப்பிட்டிருக்கின்றார். 1707ல் ஸ்வீடனில் பிறந்த அவர் தன் தந்தையைப் போன்றே தேவாலயத்தில் பணிபுரிய வேண்டியவர். ஆனால் அதில் அவருக்குச் சிறிதும் ஆர்வமில்லாததால் மருத்துவம் படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.

கார்லுக்குச் சிறுவயதிலிருந்தே செடிகள் மற்றும் பூக்களின் மேல் இருந்த தணியாத ஆர்வத்தால் கல்லூரியில் வகுப்பில் இருந்ததைக் காட்டிலும் தோட்டத்தில் இருந்ததே அதிகமான காலமாகும். அப்போது தான் ஒரு பிரெஞ்சு தாவரவியல் ஆராய்ச்சியாளரான Sebastian Vaillant என்பவரது கட்டுரையைக் காண நேர்ந்தது. அதில் செடி கொடிகளுக்கும் இனப்பெருக்க உறுப்பு இருக்கின்றதென்றும், தாவரங்களும் விலங்குகளைப் போலவே இனப்பெருக்கம் செய்கின்றனவென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தாவரங்களிலும் ஆண்,பெண் உண்டா என்பதே பெரிய விஷயமாக இருந்தது. தோட்டத்திலிருக்கும் ஒவ்வொரு செடியும் தனித்தனி இனம் என்று இதுவரை எண்ணியிருந்த கார்லின் எண்ணம் உடைபட்டது. செடிகளின் இந்த இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டு ஏன் இவற்றை இனவாரியாக ஒழுங்குபடுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

அவரது நண்பர்களின் பண உதவியுடன் ஸ்வீடன் முழுதும் செடிகொடிகளை இனம் பிரிக்கப் பயணப்பட்டார் கார்ல். எப்போதும் மிகச் சரியாகக் காலை 7 மணிக்குத் தன் பணியை ஆரம்பித்து மதியம் 2 வரை தொடர்ந்து பணிபுரிந்து, பின் மதிய உணவு, மாலை 4 மணிக்கு விரிவுரை என்று ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பல மாதங்களாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் கார்ல்.

தாவரங்களின் இனப்பெருக்க விதத்தை வைத்து அவற்றைப் பிரிக்க முனைந்த கார்ல், பல தாவரங்கள் ஒரு சில இனத்தின் அடிப்படையிலேயே இருப்பதைக் கண்டறிந்தார். 1735 வாக்கில் தன் Systema Naturae என்ற புத்தகத்தில் 4000 தாவரங்களை இனம் பிரிக்கும் அசைக்க முடியாத சாதனையைச் செய்திருந்தார் கார்ல்! species-இனம், genus-மூலம், family-குடும்பம், order-வரிசை, Class-வகுப்பு, Subphylum, Phylum, மற்றும் Kingdom-ராச்சியம் என்னும் ஒன்றன் மேல் ஒன்றான எட்டு வரிசையாகப் பிரித்திருந்தார். 

இயற்கையை இவ்வாறு தரம்பிரிப்பது என்பது நிச்சயமாகச் சாதாரணமான காரியம் அல்ல.
அடுத்த 30 ஆண்டுகளாக கார்ல் தாவர, விலங்குகளின் இனத்தைத் தேடும் பணியையே வாழ்வாய்க் கொண்டார். 1758ல் கார்ல் 4400 விலங்கினங்களையும், 7700 தாவரங்களையும் இனம் பிரித்திருந்தார். தனது புத்தகத்தின் பத்தாவது பதிப்பில் தாவரங்களை (இனம் மற்றும் மூலம்) இருபெயரிட்டு அழைக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்.

இதன் மூலம் இயற்கையின் ஒழுங்கைக் கண்டறிந்ததுடன், அதை மிகச் சரியாக இன்றளவும் பயன்படத்தக்க அளவில் இனம் பிரித்த கார்ல் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 15

15. கண்டுபிடிப்பு: இயக்க விதிகள் (Laws of Motion)
கண்டுபிடித்தவர்: சர் ஐசக் நியூட்டன்
காலம்: 1687

சர் ஐசக் நியூட்டனின் மூன்று இயக்க விதிகளும் இயற்பியல் என்னும் அறிவியலின் அடிப்படை விதிகளில் தலையானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றை அடித்தளமாகக் கொண்டு தான் ஐன்ஸ்டீன் உட்படப் பலரும் அறிவியல் மாளிகைகளைக் கட்டி எழுப்பி இருக்கின்றனர். எனவே நியூட்டனின் இந்தக் கண்டுபிடிப்பு இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் தவிர்க்கவோ மறக்கவோ முடியாத ஒன்றாகிவிட்டது.

குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடாமல் William Ayscough என்போரின் அரவணைப்பில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஐசக் நியூட்டன், நகரங்களில் பரவிய பிளேக் நோயின் காரணமாக தன் சகோதரியின் கிராமப்புறப் பண்ணை வீட்டில் வாழ்ந்தார் என்று ஏற்கனவே கண்டோம். பொருட்கள் அசைவதற்கும், அசையாமல் இருப்பதற்கும் காரணங்களையும், அவற்றின் வேகம், உந்தம், இயக்க விசைகள் பற்றிக் கணிதச் சமன்பாடுகளையும் அதுவரை யாரும் கண்டறியாததால் அவரது பல கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் இருந்தது.

நியூட்டன் அரிஸ்டாட்டில், கலிலியோ, கெப்ளர் மற்றும் ஹாலி ஆகியோரின் அறிவியல் புத்தகங்களை ஊன்றிக் கற்றார். அவர்களின் பொது உண்மைகளையும் தவறுகளையும் தனித்தனியே பிரிக்கும் பணியைச் செய்தார். 

நியூட்டனும் ஐன்ஸ்டீனும் அறிவியல் விஞ்ஞானிகளில் வித்தியாசமானவர்கள் எனலாம். சோதனைகள் மூலம் தங்கள் கருத்துகளை நிலைநாட்டவில்லை. பிரச்னையை மனதுக்குள் போட்டுப் பூட்டி விட்டு ஆற அமர யோசிப்பது இவரது செயல்பாடு ஆகும். தனக்குத் தேவையான பதில் கிடைக்கும் வரை மனதுக்குள்ளேயே சோதனை செய்து பார்க்கும் முறையைக் கையாண்டார். வெளியிலிருக்கும் உலகத்தின் கேள்விகளுக்குத் தனக்குள்ளேயே பதில் தேடும் முயற்சி தான் இது. அவரது வார்த்தைகளில் சொல்வதானால், “தொடர்ந்து நமக்கு முன்னால் கேள்விகளை வைத்துக் கொண்டு, பதிலின் மேல் மூடியிருக்கும் திரை விலகி, பதில் மெல்ல மெல்லத் தெரியும் வரை” மனச் சோதனைகளில் ஈடுபட்டாராம்.

விசையால் இயக்கத்தை எவ்வாறு/எவ்வளவு உருவாக்க முடிகின்றது என்பதைச் சோதனை செய்வதில் தான் அவருக்கு அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. கலிலியோவின் கீழே விழும் பொருட்களின் விதிகளையும், கெப்ளரின் கோளியக்க விதிகளையும் கருத்தில் கொண்டு, ராப்பகலாகப் பட்டினி கொண்டு மயங்கிப் போகும் நிலைக்குக் கூடச் சென்றிருக்கின்றார் நியூட்டன்.

விளைவு: நியூட்டன் கண்டறிந்த இயக்க விதிகள். 

விதி 1: வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்.

விதி 2: ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர் தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.

விதி 3: ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது.

1666லேயே இந்த மூன்று விதிகளையும் நிறுவிவிட்டார் நியூட்டன். நுண்கணிதம் (calculus - நன்றி தொழில்நுட்பம் இணையதளம்) என்னும் புதிய கணித முறையைக் கண்டறிவதற்கும், புவி ஈர்ப்பைக் கண்டறிவதற்கும் இவ்விதிகள் அடிப்படையாகத் துணை நின்றன. ஆனாலும் ஹாலியின் தொடர்ந்த வலியுறுத்தலால் 20 ஆண்டுகள் கழித்து தன் Principia என்னும் நூலை வெளியிடும் வரை இந்த விதிகளை நியூட்டன் வெளியில் சொல்லவே இல்லை! 

1684ல் Jean Picard என்னும் அறிஞர் முதன் முதலில் புவியில் அளவையும், நிறையையும் துல்லியமாகக் கணித்தார். இந்த எண்களின் மூலம் நியூட்டனால், புவி ஈர்ப்பு விசை, கோள்களின் பாதைகள் ஆகியவற்றைத் தனது விதிகளின் மூலமும், கணிதச் சமன்பாடுகள் மூலமும் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. இருந்தாலும் 1687ல் தனது Principia புத்தகத்தின் மூலமாக ஹாலி மன்றாடிக் கேட்டுக் கொண்டதாலேயே வெளியிட்டார்!

ராபர்ட் ஹூக் தானே இயக்கவிதிகளைக் கண்டறிந்ததாகத் தவறாகப் பறை சாற்றிக் கொண்டிருந்ததாலேயே நியூட்டன் இவ்விதிகளை வெளியிடவில்லை. ஆனாலும் உண்மை என்றும் வெளிவராமல் இருக்காது என்பதாலும், பொய்யால் வெகுகாலம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதாலும் நியூட்டனின் புத்தகம் இன்று வரை அறிவியல் ஆர்வலர்கள் படிக்கக் கூடிய முக்கிய புத்தகங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

இரண்டாவது விதியின் சிறிய விளக்கம்:

உந்தம் என்றால் ஒரு பொருளின் வேகமாற்றம்/நகர்வு/இயக்கம் எனலாம். அதாவது நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை நகரவிடாமல் நிற்கச் செய்ய அதன் மீது ஒரு சக்தியைப் பிரயோகிக்க வேண்டுமல்லவா? அதன் அளவு தான் உந்தம். அல்லது நகராமல் நிற்கும் பொருள் நகர்வ‌தும் உந்தமே. ஆங்கிலத்தில் acceleration எனப்படுகின்றது. ராக்கெட் உந்திச் செல்கின்றது என்று கூறுகின்றோம் அல்லவா?

விதி 2: ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர் தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.

இரண்டாவது விதியை இப்போது எடுத்துக்காட்டுடன் விளக்குவோம்.

ஒரு வண்டி அசையாமல் நின்று கொண்டிருக்கின்றது. இப்போது அந்த வண்டியைப் பின்னால் இருந்து இன்னொரு வண்டி மோதுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மோதலின் காரணமாக நிற்கும் வண்டியின் வேகம் மாறுபடும் தானே? அந்த வேக மாற்றமும் திசையும் எவ்வாறு இருக்கும் என்பதே இரண்டாவது விதி. அந்த வேகமாற்றமானது மோதிய விசையின் நேர் தகவில் (direct proportion) இருக்கும். அதாவது மோதிய வண்டி மிக வேகமாக மோதினால், நின்று கொண்டிருந்த வண்டியின் வேகமாற்றமும் அதிகமாக இருக்கும். மோதிய வண்டி மெதுவாக மோதினால் நின்று கொண்டிருக்கும் வண்டியும் மெதுவாகவே நகரும். திசை (direction) செயல்படும் விசை எந்தத் திசையில் இருக்கின்றதோ அதே திசையில் இருக்கும். அதாவது மோதிய வண்டி எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கின்றதோ அதே திசையில் தான் மோதப்பட்ட வண்டியும் நகர ஆரம்பிக்கும்.

அதே சமயத்தில், நின்று கொண்டிருக்கும் வண்டியின் நிறையும் முக்கியமானது ஆகும். நிறை அதிகமாக அதிகமாக அதன் மேல் மோதும் வண்டி மிக வேகமாகவோ அல்லது அதன் நிறையும் அதிகமாக இருந்தாலோ மட்டுமே நின்று கொண்டிருக்கும் வண்டியின் மீது பாதிப்பு ஏற்படும். இதைத் தான் "ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது" என்னும் வார்த்தைகள் குறிக்கின்றன. அதாவது பொருள்களின் வேகமாற்றமானது நிகர விசையால் ஏற்படும். (net force). சுருக்க‌மாகச் சொன்னால், நின்று கொண்டிருப்பது ஒரு லாரி என்றும், வந்து மோதுவது ஒரு ஈ என்றும் வைத்துக் கொண்டால், அதனால் லாரியின் வேகத்தில் ஏதும் மாற்றம் ஏற்படாது. காரணம், லாரியின் மீது செயல்படும் ஈயின் விசை யாவும் லாரியின் அதிகப்படியான‌ நிறையால் சமன்செய்யப்பட்டு விட்டன!

இதுவே மிகவும் பிரபலமான F=ma என்னும் விசை = நிறை * வேகமாற்றம் Force = mass * acceleration என்னும் சமன்பாட்டை உருவாக்கியது.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 14

14. கண்டுபிடிப்பு: பாக்டீரியா
கண்டறிந்தவர்: ஆண்டன் வான் லியூவென்ஹூக் (Anton van Leeuwenhoek)
காலம்: 1680

ராபர்ட் ஹூக் முன்பே நுண்ணோக்கியில் பல மேம்பாடுகள் செய்திருந்தாலும், தனது முக்கியமான கண்டுபிடிப்பால் உலகில் முதன்முதலாக ஒரு நுண்ணுயிரியைக் காணும் வாய்ப்பைப் பெற்றவர் வான். அவரது கண்டுபிடிப்பு பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்தாக அமைந்திருக்கின்றது.

எவ்வாறு கண்டறிந்தார்?

வான் ஒரு டச்சுக்காரர். துணி வியாபாரி. அறிவியல் மேல் தான் கொண்ட அளவிலா ஆர்வத்தால் சுயமாகக் கணிதமும் அறிவியலும் கற்றுக் கொண்டார். டச்சுமொழி அல்லாமல் வேறு மொழி தெரியாததால் தனது கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார். 

அவரது அறிவியல் பசிக்கு ராபர்ட் ஹூக்கின் இரண்டு படி லென்சுகள் உதவவில்லை. அவை மங்கலாகத் தெரிந்தன. அவராக உருவாக்கிய ஒரு நுண்ணோக்கியில் அதிகமாகக் குவிந்த ஒரே ஒரு ஆடியைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். இதனால் மிகத் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. 
அவர் 1673ல் உருவாக்கிய 270 பவர் நுண்ணோக்கியை விட மேம்பட்ட ஒன்றைக் கண்டறிய 200 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது அவரது திறமைக்கு ஒரு சான்றாக அமைகின்றது. அதன் மூலம் 1 மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பகுதியைக் காண முடிந்தது. அவர் ஆராய்ச்சிக்கு மனிதனின் முடி, தேனீக்களின் கண், வாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டார். அவரைத் தவிர வேறு யாரையும் அவரது நுண்ணோக்கி வழியாகக் காணவும் அனுமதிக்கவில்லை. தான் கண்டதைத் தானே நேர்த்தியாக வரையப் பழகிக் கொண்டார்.

அதன் பின்னர், அவரது ஆராய்ச்சி நீர்த்துளி, ரத்த அணுக்கள், விந்து போன்றவற்றின்பால் திரும்பியது. திரவங்களைப் பார்க்க ஆரம்பித்ததும் தான் அவரால் நுண்ணுயிருலகத்தைக் காண முடிந்தது.
மனிதனின் கண்களுக்குப் புலப்படாத பாக்டீரியாக்களைக் கண்டறிந்து வியந்து அவற்றைப் படங்களாக வரைந்து தள்ளினார் வான்.
தொழில்முறை விஞ்ஞானியல்லாத அவர் தனது ஓய்வுக்காலங்களிலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர முடிந்தது. லத்தின் மற்றும் பிரெஞ்சு தெரியாததால் அவரால் அறிவியல் கட்டுரைகளையும் வெளியிட முடியவில்லை. இருந்த போதிலும், 1676ல் இருந்து லண்டன் ராயல் சொசைட்டிக்குத் தனது கண்டுபிடிப்புகளைக் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள, அவர்கள் அதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து அனுப்பினார்கள். அக்கடிதங்கள் யாவும் இன்றும் நுண்ணுயிரிகளைப் பற்றி அறிந்து கொள்ள வழிவகை செய்கின்றன.

பாக்டீரியா தான் உடலில் புண் பரவவும், தொற்று நோய் வரவும் காரணம் என்று முதன்முதலில் அறிவித்தவரும் இவரே. ஆனால் 1856 வரை யாரும் இதை ஒத்துக்கொள்ளவில்லை. வான் வினிகர் பாக்டீரியாவை அழிக்கின்றது என்று கண்டறிந்து, புண்களுக்கு மருந்தாய் அதைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தினார். ஆனாலும் அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள உலகம் 200 ஆண்டுகள் காத்திருந்தது.

மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் படித்துப் பட்டம் வாங்க வேண்டியதில்லை. ஆர்வமும் இடைவிடாத முயற்சியுமே போதுமானது என்பதற்கு நிரூபணமாய்த் தைரியமாய் ஆண்டன் வான் லியூவென்ஹூக்கைக் கை காட்டலாம்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 13

13. கண்டுபிடிப்பு: புவி-சூரிய தூரம், அண்டத்தின் அளவு
கண்டறிந்தவர்: ஜியோவான்னி காசினி (Giovanni Cassini)
காலம்: 1672

அண்டவெளியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இரண்டு அடிப்படை விஷயங்கள் உதவிபுரிகின்றன. முதலில் நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் தூரம் பற்றி அறிந்து கொள்தல், இரண்டாவதாக அந்த நட்சத்திரத்தின் வேதியியல் மூலப் பொருள் எதுவென்று கண்டறிதல்.

காசினியின் துல்லியமான தூரக் கணிப்பு விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்த பல விஷயங்களைத் தூக்கி உடைப்பில் போடுவதாக இருந்தது. நட்சத்திரங்கள் வெறும் மில்லியன் கி.மீ. தூரத்தில் இருப்பதாக நினைத்தது எல்லாம் எத்தனை தவறு என்று அறிந்து திருத்திக் கொண்டதும், அண்டத்தின் கற்பனைக்கெட்டாத அளவைப் பற்றிப் புரிந்து கொண்டதும் காசினியால் மட்டுமே சாத்தியமானது.

காசினி எவ்வாறு கண்டறிந்தார்?

1625ல் இத்தாலியில் பிறந்த காசினி ஜோதிடத்தில் மிகவும் ஆர்வலராக இருந்தார். பின்னாளில் ஜோதிடம் அனைத்தும் உண்மையல்ல என்று எழுதினாலும் கூட அந்தத் துறையில் புகழ்மிக்கவராகவே விளங்கினார் காசினி.

அவரது விண்ணியல் ஆர்வம் கண்டு அவருக்கு பாரீஸ் விண்காட்சியகத்தில் பதவியளிக்கப்பட்டது. தனது பெயரை Jean Dominique Cassini என்று மாற்றிக் கொண்டார் காசினி. அவரது சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சுற்றும் காலம், சனி கிரகத்தின் வளையங்களுக்குள் இருக்கும் இடைவெளி ஆகிய புகழ்மிக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். இப்போது அந்த இடைவெளிகள் காசினி இடைவெளிகள் என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒளி ஒரு முற்றான வேகத்தில் செல்கின்றது என்று முதன்முதலில் யூகித்தவரும் இவரே ஆவார். ஆனாலும், ஒளியைக் கடவுளுக்கு ஒப்பாக வைத்திருந்ததாலும், மதக் கொள்கைகளாலும், ஒளியின் முற்றான வேகம் என்னும் கொள்கையை உடைத்தெறிய பல சோதனைகளை நிகழ்த்தினார். ஆயினும், அத்தனை சோதனைகளும் தோல்வியையே தந்தன!

கத்தோலிக்கரான காசினி புவிமையக் கொள்கையையே நம்பினார். பின்னர் சூரியன் தான் மையத்திலிருக்கின்றது என்று அரைமனதுடன் நம்பினார். சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தொலைவை அறிய முற்பட்டார். 

தொலைநோக்கியால் நேரடியாகப் பார்க்க முடியாத/பார்க்கக் கூடாத ஒரு பொருள் இவ்வையகத்தில் உண்டென்றால் அது சூரியன் மட்டுமே! தொலைநோக்கி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இது தெரியும். கெப்ளரின் சமன்பாடுகள் மூலம், ஏதேனும் ஒரு கிரகத்துக்கும் புவிக்கும் இருக்கும் தூரத்தை அளக்க முடிந்தாலே அதைக் கொண்டு சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தை அளக்க முடியும் என்று அறிந்து கொண்டார் காசினி.

பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தைப் பற்றி நன்கறிந்ததால், அதன் தூரத்தை அளக்க முடிவு செய்தார். திரிகோணமிதி எனப்படும் ட்ரிக்னாமெட்ரி கணித முறை மூலம், புவியின் இரு இடங்களிலிருந்து செவ்வாயின் ஒரு இடத்தின் கோண அளவைத் தெரிந்து கொண்டால், தூரமும் தெரியவந்து விடும் என்று முடிவு செய்தார்.

காசினி பாரிஸில் இருந்து கொண்டு, தனது சகாவான Jean Richerஐ தென்னமெரிக்காவின் வடக்குக் கடற்கரையிலிருக்கும் Cayenne என்னுமிடத்துக்கு அனுப்பினார். ஆகஸ்டு 1672 ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு விஞ்ஞானிகளும், பின்புலத்தில் நட்சத்திரங்களின் இருப்பிடங்களுடன், செவ்வாய்க் கிரகம் இருக்கும் கோணத்தை அளந்தனர். இந்த அளவுகளையும் கெப்ளரின் சமன்பாடுகளையும் கொண்டு காசினி சூரியனுக்கும் புவிக்கும் இடையே இருக்கும் தூரம் 87 மில்லியன் மைல்கள் அல்லது 149.7 மில்லியன் கி.மீ. என்று அறிவித்தார். நவீன அறிவியல் கண்டறிந்த துல்லியமான தூரம் 93 மில்லியன் மைல்கள் ஆகும். 

இதே முறையில் சனியின் தூரத்தை அளந்த காசினி அது 1.6 பில்லியன் மைல்கள் தூரத்தில் இருப்பதாக அறிவித்தார். 

மனிதர்கள் தங்கள் கற்பனையால் கூட செய்து பார்க்க முடியாத அளவு அண்டம் பிரம்மாண்டமானது என்னும் உண்மையை உலகோர் உணரச் செய்தார் காசினி.



உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 12

12. கண்டுபிடிப்பு: படிமங்கள் (fossils)
கண்டறிந்தவர்: நிகோலஸ் ஸ்டெனோ (Nicholas Steno)
காலம்: 1669

பழங்காலச் சரித்திரச் சுவடுகளைக் கண்டறிந்து முன்னே நடந்தவற்றை ஊகித்தறியக் கூடியதில் கண்டகங்கள் எனப்படும் படிமங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தடயங்களைக் கொண்டு படிமங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றின் தன்மைகள் எவை போன்ற அடிப்படை அறிவியல் விஷயங்களைக் கண்டறிந்ததால் நிகோலஸ் ஸ்டெனோ வரலாற்றுத் துறையில் மறக்கவியலா ஒரு இடத்தைப் பெறுகின்றார்.

எப்படிக் கண்டறிந்தார்?

கல்லாகச் சமைந்து போன மரங்கள், விலங்குகளை முதன்முதலில் பார்த்தவர் அல்லர் நிகோலஸ். அவருக்கு முன்பே பலரும் இதைக் கண்டிருக்கின்றனர். முதன் முதலில் விலங்குகளை உருவாக்கும் முன்னர் கடவுள் செய்து பார்த்த உருவங்கள் என்றும், கடவுளைப் போல் உயிரினங்களை உருவாக்க நினைத்த சாத்தான்களின் செயல்பாடுகள் இவை என்றும் தான் இவற்றை நினைத்தனர். 

Niels Stensen என்ற தன் பெயரை நிகோலஸ் ஸ்டெனோ என்று மாற்றிக் கொண்ட நிகோலஸ் டென்மார்க்கில் பிறந்தவர். இத்தாலிக்கு மருத்துவம் பற்றிப் பயிலுவதற்காக வந்தவர். கலிலியோவின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். தசைகள் மற்றும் எலும்பு அசைவினைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தசைகள் எவ்வாறு சுருங்கி விரிந்து எலும்புகள் அசைய ஏதுவாக இருக்கின்றன என்று கண்டறிந்தார். இதனால் உடலமைப்பு அறிவியலில் இத்தாலியில் பிரபலமாக இருந்தார். 

அப்போது ஒரு மிகப்பெரிய சுறாவைப் பிடித்தனர் இத்தாலி மீனவர்கள். அதன் மிகப் பெரிய அமைப்பைப் பார்த்ததும் அதை ஆராய்ச்சி செய்யச் சொல்லி ஸ்டெனோவிடம் தந்தார் இத்தாலி அரசர். கொடுத்த வேலையைச் செய்ய ஆரம்பித்த ஸ்டெனோ அந்தச் சுறாவின் பற்களை நுண்ணோக்கியில் கண்டதும் ஆச்சரியப்பட்டார்.

கரையோர மலைகளில் கிடைக்கும் பற்கற்கள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த கற்களின் அமைப்பிலேயே இந்தச் சுறாவின் பற்களும் இருந்ததைக் கண்டு வியந்தார். ரோம சாம்ராஜ்ய காலத்திலிருந்தே இந்தப் பற்கற்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அப்போதைய பிரபல கவிஞர் ஒருவர், இக்கற்கள் நிலாவிலிருந்து உதிர்ந்து புவியில் விழுந்தவை என்று கற்பனை செய்திருந்தார்.

சந்தேகத்துடன் சுறாவின் பல், பற்கற்கள் இரண்டையுமே சோதனை செய்து பார்த்த ஸ்டெனோ இரண்டும் ஒன்று போல் தெரியவில்லை, இரண்டும் ஒன்றே தான் என்ற முடிவுக்கு வந்தார். அவரது முடிவை ஏற்றுக் கொள்ளாத இத்தாலிய விஞ்ஞானிகள், இவை சுறாவின் பல்லாக இருக்க முடியாததற்கு காரணத்தையும் கூறினார்கள். கடற்கரைக்குப் பல மைல்கள் தொலைவிலும் இந்தப் பற்கற்கள் கிடைத்தது என்பது தான் முக்கியக் காரணமாகும். சுறாவின் பல் கல்லாலானது அல்ல என்பதும் ஒரு காரணமாகும்.

இவைகளை எதிர்கொண்ட ஸ்டெனோ, ஏதேனும் ஒருவகையில் கரையில் சுறா ஒதுங்கிய பின்னர், கரை மேலெழும்பியதால் பல மைல்கள் தள்ளிக் கூட பற்கற்கள் கிடைக்கலாம் என்னும் புதிய யோசனையைக் கூறினார். அதன் பின்னர், படிமங்களையும் தனது ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்ட ஸ்டெனோ, பல எலும்பு வடிவப் படிமங்களையும் சோதனை செய்து, அவையும் பழங்கால எலும்புகளே என்று கண்டறிந்தார். காலச் சக்கரமும், வேதி வினைகளும் சேர்ந்து எலும்பைக் கல்லாகச் சமைத்து விட்டது என்று கண்டறிந்தார். அதற்கு corpuscular theory of matter என்பது பெயர். 
இதுமட்டுமின்றி, எவ்வாறு இப்படிமங்கள் பாறைகளுக்கிடையில் வந்து சேர்ந்தன என்றும் பல எடுத்துக்காட்டுகளுடன் நிரூபித்தார் ஸ்டெனோ. இதன் மூலம் படிமப்பாறைகளின் அறிவியலையும் கண்டுணர்ந்தவரானார் ஸ்டெனோ.

அறிவியலின் உச்சத்திலிருந்த போது, அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பில்லை என்று திடீரென்று ஆராய்ச்சியிலிருந்து விட்டு ஒதுங்கிவிட்டார் ஸ்டெனோ. இருப்பினும் அவரது கண்டுபிடிப்பு என்றென்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 11

11. கண்டுபிடிப்பு: புவி ஈர்ப்பு விசை
கண்டறிந்தவர் சர். ஐசக் நியூட்டன்
காலம்: 1666


சர். ஐசக் நியூட்டன் அவரைப் பற்றிப் போற்றப்படுதலுக்கெல்லாம் தகுதியான ஒருவர் எனலாம். அவர் இதுவரை கண்டறியாத ஒரு அடிப்படை அறிவியல் கோட்பாட்டைக் கண்டறிந்தது ஆச்சரியம். அது மற்ற பல அறிவியல் தத்துவங்களை விளக்கவும் எளிதாக்கியது (எடுத்துக்காட்டு, நிலவு ஏன் பூமியைச் சுற்ற வேண்டும், பூமி ஏன் சூரியனைச் சுற்ற வேண்டும்) என்பது அடுத்த ஆச்சரியம். உலகில் பல வித விசைகள் கண்டறியப்பட்டுள்ளன. இழுவிசை, மின்விசை, உராய்வு விசை, காற்று அழுத்தம் இப்படிப் பலவிசைகள் இருந்தாலும், ஈர்ப்பு விசை எனப்படும் விசையைக் கண்டறிந்ததும் அனைத்தையும் சூத்திரங்களில் அள(ட)க்க முடிந்தது. 

எப்படிக் கண்டறிந்தார் நியூட்டன்?

1666ம் ஆண்டில் 22 வயதானாலும், ஒல்லியான தேகத்துடனும் குழந்தை முகத்துடனும் நீளமான முடியுடனும் உலா வந்தார் இளம் நியூட்டன். அப்போது நகரங்களில் பிளேக் எனப்படும் கொள்ளை நோய் பரவியிருந்த சமயம். பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே நியூட்டன் நகரங்களில் இராமல் கிராமப்புறங்களில் தனது நாட்களைக் கழித்தார். 

அப்போது அவரது மனதில் சில கேள்விகள் எழுந்தன. ஏன் நிலவு பூமியைச் சுற்ற வேண்டும்? ஏன் பூமி சூரியனைச் சுற்ற வேண்டும்? இவை தான் அவர் மனதில் எழுந்த கேள்விகள். 

பிற்காலத்தில் நியூட்டன் இது நடந்ததென்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் சகோதரியின் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது ஆப்பிள் மரத்தில் இருந்து தாழ இருந்த ஒரு கிளையிலிருந்து பழுத்த பழம் விழக் கண்டார். அது பூமியில் விழுந்து உருண்டு ஓடியது. இன்னொரு பழம் உயரமான கிளையிலிருந்து விழுந்தது. அது எம்பிக் குதித்து மீண்டும் பூமியில் விழுந்தது. இப்போது இளம் விஞ்ஞானியின் மனத்தில் சில கேள்விகள் எழுந்தன. இதே போல் ஏன் நிலவு பூமியின் மேல் விழுந்து மோதவில்லை? ஏன் நட்சத்திரங்களும் கோள்களும் அதனதன் இடத்திலேயே இருக்கின்றன?

நியூட்டன் இதற்கு முன் ஆப்பிள் கீழே விழுந்ததைப் பார்த்திராதவர் அல்ல. இதைப் புதுமையாகவும் பார்க்கவில்லை.

ஆனால் இதற்கான விடை அவருக்கு அடுத்த நாளே கிடைத்தது. அவரது அக்காவின் குழந்தை தன் கையில் ஒரு பந்தை வைத்திருந்தான். அதில் கயிறின் ஒரு முனையில் பந்து கட்டப்பட்டிருந்தது. கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு வேகமாகச் சுழற்றினான் குழந்தை.

இதைக் கண்ட நியூட்டனின் மூளைக்குள் மின்னல் அடித்தது. குழந்தை கையில் சுற்றிய பந்து நிலாவாகவும், குழந்தை பூமியாகவும் அவருக்குத் தெரிந்தது. அவ்வளவு தான்!

பந்து கையில் சுற்றி வருவதற்கு இரண்டு விசைகள் காரணம் என்பதை உணர்ந்து கொண்டார்! ஒன்று பந்து வேகமாகச் செல்வதால் உண்டாகும் விலகுவிசை. இன்னொன்று அதை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் கையால் உண்டாகும் இழுவிசை. இந்த விலகுவிசையும், இழுவிசையும் சேர்ந்தே பந்தை ஒரு வட்டப்பாதையில் சுழல வைக்கின்றது என்று கண்டு கொண்டார்! மொத்த அண்டத்தின் அசைவு மற்றும் இருப்பின் ரகசியத்தையும் வெளிக்கொணர்ந்தார்.

இந்த ஈர்ப்பு விசையானது கோள்கள் மட்டுமின்றி நிறையுள்ள அனைத்திற்கும் உண்டு என்று நம்பினார். புவி ஈர்ப்பே ஆப்பிளை விழச் செய்கின்றது, மழையைப் பொழிய வைக்கின்றது, சூரியனைச் சுற்றி வர வைக்கின்றது என்று அகில முழுமைக்குமான ஒரு கோட்பாட்டைக் கொண்டு வந்தார்.

அகில முழுமைக்குமான எளிமையான புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்ததன் மூலம் இயற்பியலில் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ அவர் ஒரு அடிப்படை வித்தானார் என்பது நிச்சயமாக ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

சனி, டிசம்பர் 24, 2011

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 10

10. கண்டுபிடிப்பு: செல்களின் இருப்பு
கண்டுபிடித்தவர்: ராபர்ட் ஹூக் (Robert Hooke)
காலம்: 1665

உலகம் முழுதும் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும் செல்களால் கோர்க்கப்பட்டவையே. பல கோடிக்கணக்கான செல்கள் இணைந்தே ஒரு உடல் உருவாகின்றது. மூலக்கூறுகளும், அணுக்களும் எவ்வாறு வேதியியலில் முக்கியத்துவம் பெற்றதோ அதை விடச் சற்று அதிகமாகவே செல்களின் கண்டுபிடிப்பு உயிரியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

ஒரு அடியால் கலிலியோ தொலைநோக்கியின் மூலம் வானத்தை அளந்த போது, இன்னொரு அடியால் ராபர்ட் ஹூக் நுண்ணோக்கியின் மூலம் இந்த பூமியை அளக்க ஆரம்பித்தார். இருவரும் கண்டறிந்த விஷயங்கள் ஆச்சரியமானவை. இதுவரை மக்கள் கண்டுணராதவை. இரு வித்தியாசமான உலகத்தையே இவ்விருவரும் சிருஷ்டித்தார்கள் எனலாம். 

ஹூக் எவ்வாறு கண்டறிந்தார்?

இந்தப் பிள்ளை எங்கே பிழைக்கப் போகின்றது? என்னும் அளவுக்கு நோஞ்சானாக இருந்தார் ஹூக். 11 வயது வரை ஹூக்கைப் பள்ளிக்கெல்லாம் அனுப்பி எல்லோரையும் போல் படிக்க வைக்கவில்லை அவரது தந்தை. 12வது வயதில் ஒரு ஓவியரைப் பார்த்துத் தானும் வரையப்போவதாகச் சொன்ன போது அதைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார்.

அவரது தந்தையும் அடுத்த ஆண்டு வெறும் 100 பவுண்ட் மட்டும் சொத்தாக வைத்து விட்டு இறந்து விட்டார். அதைத் தன் ஓவியக் கல்விக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்த ஹூக்கால் வண்ணங்களிலிருந்து வரும் வாசனையால் வந்த ஒவ்வாமையைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் ஒரு பள்ளியில் தாமாகவே சேர்ந்தார் ஹூக். அங்கே ஒருவர் இசைக்கருவியை இசைப்பதைக் கண்டதும், தானும் இசைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். அதையும் கற்றுத் தேர்ந்தார். அங்கேயே வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அடுத்து வந்த ஆங்கில அரசாங்கத்தின் இசைக்குழுவின் மேல் இருந்த வெறுப்பால் அவரது வேலை பறிக்கப்பட்டது. 

பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் மாணவர்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஹூக். அப்போது மாணவர்கள் கற்றுக் கொள்ளும் அறிவியல் மேல் அவரது கண் விழுந்தது. இதையும் தான் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். 

அவர் ராபர்ட் பாயிலிடம் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார். 

1590லேயே நுண்ணோக்கி கண்டறியப்பட்டாலும் 1660 வரை ஒரு சிலரே அதைப் பயன்படுத்தி இருந்தனர். மேலும் ஒரு பொருளை 100 மடங்கு பெரிதாக்கிப் பார்க்கும் போது அதைக் குவியப்படுத்திப் (Focus) பார்ப்பது மிகக் கடினமானதாக இருந்தது. 
இதில் தன் திறமையைக் காட்டிய ஹூக், 1662 வாக்கில் 300 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை வடிவமைத்தார். தேனீக்களின் கண்கள், வண்ணத்துப்பூச்சியின் இறகுகளின் அமைப்பு, என அனைத்தையும் கண்டு வியந்தார் ஹூக். ஏற்கனவே வரைந்து அனுபவம் இருந்ததால் தான் கண்டதை வரைந்தும் குறிப்பெடுத்தார்.

1664ல் தன் நுண்ணோக்கியை ஒரு சிறிய மரத்தக்கை மேல் திருப்பியதும் ஹூக் வியப்பின் எல்லைக்குச் சென்றார். அங்கே அவர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட துளைகள் போன்ற அமைப்பைக் கண்டார். உண்மையில் தக்கையின் செல்கள் மிகப் பெரியவை. எனவே தான் அப்போதைய அவரது நுண்ணோக்கியில் தெரியவந்தது. மற்ற வகை செல்கள் எல்லாம் இன்னும் நுண்ணியவை.
 ஹூக் இந்தத் துளைகளை சிறைச்சாலையில் இருக்கும் அறைகள் என்னும் பொருள்படும்படியாக செல்கள் (Cells) என்றழைத்தார். தக்கை இறந்துபட்டதால் அவற்றில் எதுவும் இல்லை என்றும் உயிர் இருக்கும் போது அவற்றுள் திரவம் இருந்திருக்க வேண்டும் என்றும் மிகச் சரியாகவே யூகித்துணர்ந்தார் ஹூக்.

அவர் இட்ட பெயரான செல் என்பது நிலைத்து விட்டது. அது மட்டுமல்ல, எப்படிச் செங்கற்கள் சுவர்க் கட்டுமானத்துக்கு உதவுகின்றனவோ, அதைப் போலவே உடற் கட்டுமானத்துக்கு செல்கள் உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுவிட்டது. உயிரியல் வல்லுநர்கள் செல்களைப் பற்றியும், செல்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.