புதன், ஜூன் 08, 2011

வாடகைத்தாய்

அம்மாயெ ன‌ண்டத்தில்
என்னவரி னுயிர்கோர்த்துத்
தன்வயிற்றுப் பிண்டமாக்கித்
தரணியில் உலவ வைத்தாய்!

திங்கள்பத்துக் காலமோட‌
யாக்கைத் துயர்பொறுத்துக்
காக்கைக் கூட்டில்
குயில் வளர்த்தாய்!

சுட்டெரிக்குஞ் சூரியத் தந்தையும்
அலைமீளும் நீள்கடற் றாயும்
தந்திட்ட நீர்தாங்கும் மேகமாய்ச்
சேய்த‌ந்தே கரைந்து மறைந்தாய்!

தாய்மை புனித மெனப்பார் போற்றும்
தாய்மை புனித மெனப்பார் போற்றும்!
உற்ற தாயிடம் நவீனக் கர்ணனாய்ப் 
புனிதந் தாரை வார்க்கும் பெற்றதாய்நீ!

முன்பெற்ற பிள்ளைப் பசிதீர்க்கக்
கருவினைத் தாங்கும் கருவியெனக்
காசுக்கு விற்ற கருவறையில் வரமாய்த் 
தெய்வத் தையேதருங் கோயில்நீ!

நினைத்தாலே கண்ணீர் பெருகுதம்மா!
கருவறை காட்டிக் கைநீட்டினாலும்
ஈரைந்து மாதமாய்த் தான்காய்ந்து
நீசெய்த தவம்போல யார்செய்தார்?

என்வயிறு பொறுக்காதென யாவருங் கைவிரிக்க‌
என்வயிறு பொறுக்குமெனத் தைரியமாய்க் கைகொடுத்தாய்!
உடுக்கை இழந்தழுத‌வளுக் கிடுக்கண் களைந்தாய்!
வயிறுதந்து மலடுநீக்கி யென்வயிற்றிற் பால்வார்த்தாய்!

பெறாத பிள்ளைக்கும் மார்பினில் பால்சுரக்க‌
மடியில் கிடந்து சிரிக்கின்றா ளென்மகள்!
சிரிக்கையில் என்சாடை அவர்சாடை காண்கிறேன்!
அழும்போது உன்சாடை மட்டுமே காண்கிறேன்!

நட்பு

நட்பு வாழ்க்கைச் சோற்றின் உப்பு!
நட்பு உள்ளச் சேற்றின் தாமரை!
நட்பு வெப்பப் பாதைக் காலணி!
நட்பு துயர மழையில் விரிகுடை!
நட்பு பரவசம் பரிமாறும் விருந்து!
நட்பு பலரகப் பிணிநீக்கும் மருந்து!
நட்பு அழழும் சிரிக்கச்சிரிக் குமாடி!
நட்பு சம்பந்த மிலாச்சம பந்தம்!
நட்பு கேளாது கொட்டுங் கொடை!
நட்பு கேளாது பிடுங்கும் வதை!
நட்பு கொள்வ தவரவர் உரிமை!
நட்பு பாரந் தாங்க‌ல்நம் கடமை!

தாய்மைக்கலை

பார்த்ததைப் பார்த்தபடி வெள்ளைக் காகிதத்தில்
வார்த்ததைக் காட்டிடு மோவியக் கலையோ?

அல்லது நீக்கக் கல்லைக் கொத்தி
நல்லது காட்டுஞ் சிற்பக் கலையோ?

அசைந்தாடும் மனதை நிறுத்தித் தலையை
இசைந்தாடச் செய்திடும் பாடற் கலையோ?

கண்டதை வாதமிட்டு மனமும் நோகாது
கண்(டு)அதைப் பேசும் சொல்வளக் கலையோ?

கற்பனைக் காட்சியை யாவரு முணர்ந்திட
விற்பன் னராய்ச்சீர் தொகுக்குங் கவிநயமோ?

மண்ணைப் பொன்னாக்கிப் பொருளை மணியாக்கிக்
கண்ணிலும் மேலாய்க் காக்கும்வணி கக்கலையோ?

மன்னு மிந்தமா நிலமழகிற் சிறந்திட
இன்னு மெத்தனை யற்புதக் கலையுண்டோ?

தன்வயிற்றிற் பொன்மகவீந்து சீராட்டித் தாலாட்டித் 
தன்னிகரிலாத் தனயனாக்குந் தாய்மைக் கலையினும்?

முரண் பாடு!

'அமைதியாய் இருங்கள்' 
சத்தமாய்ச் சொன்னார் நூலகர்!

'மெதுவாய்ச் செல்லுங்கள்'
வேகமாய்ச் சொன்னார் காவலர்!

'ஒருமுகப் படுத்துங்கள்'
அலைந்தபடி சொன்னார் ஆன்மிகர்!

'ஊழலைத் தடுப்போம்'
கைநீட்டிச் சொன்னார் தலைவர்!

நிலாமகள் வருகை

இன்று புவியின் மிக அருகில் வந்த நிலவின் வருகை நிகழ்வையொட்டி நான்கு வரிகளில் நன்மையும், நான்கு வரிகளில் தீமையும்:

புவியின் அடங்காத் தகிப்பைத் தணிக்கச்
...சற்றே யருகினில் வந்தாயோ தண்ணிலவே?

கவியும் மேகத்திரை விலக்கிக் கவியும்
...வற்றாக் கவிபுனைய வந்தாயோ பெண்ணிலவே?

தவிக்கும் காதலர்தம் தகுந்த தூதாய்
...உற்றதோர் துணையாய் வந்தாயோ வெண்ணிலவே?

குவிக்கும் கதிரொளி காட்டியே சோறூட்ட
...மற்றதோர் தாயாய் வந்தாயோ கண்ணிலவே?


உறக்க மறுத்திங்கு இளையோர் இயற்கை
...விலக்கச் சீற்றம் கொண்டனையோ புண்ணிலவே?

இறக்கப் பிறந்தவர் வாழ்வதேனென இரக்கமின்றி
...உலுக்கிப் புரட்டவே வந்தனையோ வன்னிலவே?

துறக்க ஏதுமிலாப் பதராய் மானுடம்
...கலங்கித் தவித்திடநீ சிரிப்பாயோ துர்நிலவே?

மறக்க முடியாக் கவலையாற் புவிமகள்
...குலுங்கி யழுதிடக் கருதாயோ செந்நிலவே?

போயஸ் வனத்திலோர்...

போயஸ்வனத்தில் ஓர் ஆண்ட்டி
அவர் அறுபது மாதமாய்க்
காத்திருந்து தேடி
கொண்டு வந்தா ரொருகூட்டு
அதைக் கூத்தாடிக் கூத்தாடிச்
சிதறவிட்டாரடி!

(போயஸ்வனத்தில் ஓர்...)

நாய்கள்

எங்களுக்குள் எல்லையுண்டு போர்முழக்கம் இருந்ததுண்டு
காதலுண்டு மோதலுண்டு நொடியில்மறந்து போவதுண்டு.
புள்ளகுட்டி பொறந்ததுண்டு வாரிசெனும் குழப்பமில்லை
சாதியுண்டு சங்கமுண்டு அடிதடிஎன்று மிருந்ததில்லை

நன்றியென்ற உணர்வுமுண்டு நட்புயெனும் பாசமுண்டு
ஏழைபாழை பிரிவுமுண்டு சமத்துவமும் குறைந்ததில்லை
கருப்புவெள்ளை நிறமுமுண்டு பேதமென்றும் இருந்ததில்லை
யாவுமிருந்தும் மானிடரே! ஏதுமில்லா தேனிருக்கின்றீர்?

எக்குஞ்சு தன்குஞ்சு?

சோற்றைப் பிசைந்து வைத்தாள் அன்னை
மலத்தைப் பிசைந்து வைத்தான் தனயன்.
அழவில்லை யாரும் சிரித்தனர் இருவரும்.

அன்னை சிரிக்கையில் விட்டத்தை வெறித்தான்
அன்னை அழுகையில் குலுங்கிச் சிரித்தான்
உணர்ச்சிகள் சமமென்று ஆனது நிரூபணம்.

கடவுளைத் தொழுது 
கடவுளைப் பெற்றாள்
கடவுளாய்ப் பெற்றாள்.

பெற்றநாள் முதலாய்ப் பிரியாப்பேறு பெற்றாள்
மற்றவர் எள்ளிடென்றே எள்ளிநகை கொண்டார்
சற்றுமவர் சொற்கேளாத் தெய்வ வடிவினள்
உற்றவனி வனென்றே உயர்வாய்க் கொண்டாள்

காக்கைக்குப் பொன்குஞ்சு மேலோ தன்குஞ்சினும்?
யாக்கைக்குப் பொன்னணி மேலோ கண்ணினும்?

கணவான் கணவன் கனவாய்க் கரைந்தான்
மணமிலாப் பூவின்மது வருந்தித் தொலைந்தான்.
குணமகள் தலைகுனிந் தமர்ந்தாள்; சூளுரைத்தாள்
பிணமாய்ப் போனாலும் குனிவதில்லை யினியென்று!

இவளுலகம் தூளானது
அவனுலகம் இவளானது
இவளுலகம் அவனானபின்
இவருலகம் துவளவில்லை

கண்ணினும் மேலாய்க் காத்து வளர்த்தாள்
உயிரினும் மேலாய்ப் பேணி வளர்த்தாள்
வேருக்கும் மேலாய் அவனைத் தாங்கினாள்
புவிக்கும் மேலாய்த் துக்கம் பொறுத்தாள்.

ஆண்டுகள் மாதங்களாய் நாட்களாய்ச் சேர்ந்தன
வாண்டா யிருந்தவன் வாண்டாகவே யிருந்தான்.
கூண்டா யிருந்தவன் சிறகினை விரித்தான்
மாண்டா னொருநாள்; குனிந்தாள் மீண்டும்!

இம்முறை குனிந்தது இறைவனுக்கு நன்றியாய்
செம்மையாய்ச் சிறந்த வரந்தந் தானென்று!
எம்முறை யாலுமவன் மாளப்பின் தான்வாழ
எம்முறையும் வேண்டிய வரம்பலித் தன்றோ!

கண்முன்னே கிடந்தான் அன்றலர்ந்த மலராய்
கடைவாய் கள்ளமிலாச் சிரிப்பால் தேற்றிட
கடைவாயி லடைத்த அணைகள் தோற்றிடக்
கண்ணீர் கன்னமலை அருவியாய்ப் பொழிந்தாள்

காரியங்கள் முடித்தாள்; கிளம்பினாள் கால்நடையாய்!
அலைந்தாள் திரிந்தாள்; உயிர்விட விடமெடுத்தாள்!
யாருங்காணா திருக்க; மாலைவரை பொறுத்தாள்!
கண்மூடிக் காத்திருந்தாள்; தொட்டானொரு சிறுவன்.

அனுபவத் தாயே! நன்றாய் அனுபவித்தாயா? 
என்றான் கள்ளஞ் சிறிதுங்காணாக் கண்களால்!
கடைவாய்ச் சிரிப்பி ல‌வனைக் கண்டாளவன்
கைப்பற்றி முடிவை விடுக்க முடிவெடுத்தாள்!

தாய்மையின் கூட்டில் எக்குஞ்சும் தன்குஞ்சே!

மனநோயாளியான மகனைப் பெற்றெடுத்தாள் ஒரு தாய். அதனால் அவளைக் கணவன் விட்டுவிட்டு வேறொரு மணம் முடிக்க, மக‌னைக் காத்து வளர்த்த அவள், அவன் மாண்டதும் இவளும் மாள முடிவெடுத்தாள். முடிவில் மீண்டும் ஒரு மனநோயாளிச் சிறுவனைக் கண்டதும் தற்கொலை செய்யும் முடிவை விட்டு அவனைக் காக்க முடிவெடுக்கின்றாள்.

சிவன்

எச்சில் உமிழ்ந்தா னொருவன்! அதனால்
உச்சியி லெங்கோ வைத்தாய் அவனை!

அலைய விட்டான் ஒருவன்! அதனால்
குலையா நட்பென‌க் கொண்டாய் அவனை!

கட்டி ய‌ணைத்தா னொருவன்! அதனால்
எட்டி யுதைத்தா யொருவனைச் சினந்து!

ஆறாய்ப் புகழ்ந்தா னொருவன்! அதனால்
மாறாய்ச் சிறையிட் டேய்த்தாய் அவனை!

சிவனே!
ஓதியோரைச் சோதிக்கும் சோதியே!
போதித்துப் போதமளிக்கும் பேறே!
பேதலிக்கும் பேதையைப் பாராயோ?

எந்தை எந்தாய்
என்னுறவு என்மகவு
என்பகை என்னுலகு
யாவும்நீ யானாய்!

பாகமொரு பாதியன்னை பெற்றாள்!
வேகமிகு நதியுஞ்சிரம் பெற்றாள்
நாகனவன் கண்டந்தான் பெற்றான்!
சோகமிகு எனக்கேது மீதமுண்டோ?

நஞ்சுப்பசிக்கு யென்னிடம்
மிஞ்சியதைத் தருவேன்!
கள்ளமனம் கபடகுணம் 
ஆணவத்துட ன‌கம்பாவம்
இத்தனையும் சொத்தாய்ச் 
சேகரித்து யாந்தரும்
பரிசாய்க் கொண்டு
வெள்ளைமனம் சாந்தகுணம்
அடக்கத்துட னன்பருளும்
மாற்றாய்க் கொடுத்து
நற்கதியுந் தருவாயோ?

எல்லையில் உயிர்ப்பூ

கண்ணுக்கெட்டு மட்டுந் தேடிப் பார்க்கிறேன்
காலுக்கெட்டு மட்டு மோடிப் பார்க்கிறேன்
பொங்குமலை யலையாய்மணல் வெள்ளம்
எங்கும்பிர வாகமாய்க் கிடக்கும் பாலையது.

ஊழிக்காற்றின் ஓசையோர் காதில் நுழைந்து
மூளையை உலுக்கிமறு காதில் செல்லுஞ்
சுருதிக்குச் சுதிசேர்த் தென்னிதயம் தாளத்தொடு
பொருந்தி மத்தளந்தட்டுவது எனக்கே கேட்கிறது.

சூரியன் மறைந்த மேற்கெதுவென மறந்தேன்
மணலன்னை மெத்தை மடிதனிலே மல்லாந்தேன்
தொலைவிருக்கும் விண்மீனிடம் வெப்பக் கடன்வாங்கி
எலும்புருக்கும் நள்ளிரவுக் குளிரின்குற்றம் நீக்கினேன்.

காலைக் கதிரவன் காலைக் கதிர்கொண்டு நனைத்தான்
பாலைக் கொடியவன் அனலைத் தான்வாங்கித் தெறித்தான்
கனன்றிடும் அரிசியின் உலையாய் மணலென்னைச் சமைக்க
என்நிழலன்றி வேறுநிழலறியாது தவித்தேன் துடித்தேன்

ஒருசொட்டு நீருக்குத் தவித்தது நாக்கு
ஓருபொட்டு நிழலுக்குத் தவித்தது கால்கள்
வடித்திட நீரிலாது வறண்டது கண்கள்
நொடியில் மெய்விடத் துடித்த தென்னுயிர்

இதோ மரணிக்கப் போகின்றேன்.
பெறப்போகின்றேன் விடுதலை.
உயிருடற் சங்கிலி உடையும் வேளை
கண்ணுக்குள் கண்ணான மனக்கண்ணில் வந்தாய்நீ.

சோலை சூழ்ந்தது
தென்றல் தொட்டது
பன்னீர் தெளித்தது
நறுமணம் கமழ்ந்தது

மரணத்தின் எல்லையில் உயிர்ப்பூ பூத்தது
உடல் கருகட்டும் பூக்கள் மணம் வீசட்டும்.

கணினித் தாலாட்டு!

ஆராரோ ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ!

கண்மணியே, என்றென்றும் தூங்காக் கணிப்பொறியே!
மரகதமே, தேடாமல் கிடைத்திட்ட சுட்டெலியே!
ரத்தினமே, பொத்திவைத்துப் பார்த்திடும் வன்தட்டே!
முத்தினமே, முயற்சிசெய்து சேர்த்திட்ட‌ மென்பொருளே!

பொருத்தமாய் நிகழ்வுகளைக் கோர்த்திருக்கும் நினைவகமே!
ஒருங்கமைந்த கதிர்வந்து சுழ‌ற்றிவிடும் குறுந்தகடே!
பொருள்சிறந்து பல‌வண்ண மைகாட்டும் அச்சகமே!
அருள்சிறந்து மெல்லிசை தவழுமொலி பெருக்கியே!

மாமா அடிச்சாரோ மின்சன்ன‌ல் வழிவந்து?
அக்காள் அடிச்சாளோ மின்னஞ்சல் உடன்வந்து?
யாரடிச்சா சொல்லியழு ஒலிவாங்கியில் வந்துஅழு
யாரடிச்சுப் போனாலென்ன தாய்ப்பலகை நானிருக்கேன்!

கண்மணியே, என்றென்றும் தூங்காக் கணிப்பொறியே!
ஆராரோ ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ!

சிங்கமும் முயலும்...

பேனா இரண்டைச் செருகியது போலே
.................சிலிர்த்து நீளும் அழகான செவிகள்
குறவர்தம் பாசியைக் கொண்டது போலே
.................சொலித்து மின்னும் வண்ணக் கண்கள்
வெடித்த பருத்திப் பஞ்சினை வெளுத்துப்
.................பொலிந்த பசும்பாற் கடலெனப் பட்டுடல்
துள்ளிக் குதித்துக் குதூகலிக்கு(ம்) முயலதை
.................வலிகொண்ட‌ சிங்கம் வலிக்க‌ச் சாப்பிடும்.

வெளுக்கும் வெய்யிலில் காய்ந்து கருவாடாய்
.................மெலிந்து சோர்ந்து தவித்தே போயினும்
துளிர்க்கும் பிஞ்சைப் பஞ்ச ம‌ண்டவிடாது
.................கலிதீர்க்க வந்தானென்று கல்விகற்ற‌ தனயன்
வெளிரிடும் வயதுபல கண்ட சட்டையில்
.................கிலிகொண்டு நகரத்தில் நேர்முகம் சென்றால்
உளரிடும் சொல்லொடு நடுங்கிடும் அவனைப்
.................பலிகொண்டு நகரம் பழிவாங்கித் தீர்க்கும்.

தாஜ்மஹால்

மடையன்!
ஒரு சமாதிக்கு இவ்வளவு செலவா?
என்றென்னைச் சிறைவைத்த அன்புமகன்!
அவனுக்குத் தெரியுமா?
எனதுயிரின் துயர்?

உலகோரென் காதல் உணர்ந்திடவா
பலகாலமிதைக் கட்டி மெருகூட்டினேன்?
இல்லையில்லை!
அவள்நினைவு பாகாய் உருக்கிடவே
துவண்டுபோ யழியாச் சின்னம் வைத்தேன்.

என்னுயிரைக் கொண்டவள் போனாள்
அன்னவளுயிர் கொண்டிவன் வாழ்கிறேன்.

அவள் மனமோ பாலினும் பளிங்கினும் 
பாண்டிய முத்தினும் சங்கினும் வெளுப்பு!
அவள் அன்புடன் நீரோடையை மாமணியை
அன்றலர் மலரை வைக்க லாமொப்பு!

காதற் பைத்தியம் பிடித்தே பிதற்றுகிறான்
பித்தனிவனென்று வையகம் சொல்லுமாயின்
மெத்த மகிழ்வு கொள்வேன் நித்தமு
ம‌த்தகுதி எனக்கிருக் கட்டுமென்று!

வெறுங்கற் கோட்டையென்று எண்ணி விடாதீர்
நொறுங்கிய என்மனக் கோட்டையின் படிமமிது!

மலர்கள்

இராத்திரி வானத்து விண்மீனின் போட்டியாய்
பூமகள் சிதறிவிட்ட மென்மீனின் கூட்டமோ?

தினங்காலை அலைமகளை வரவேற்கும்
மனங்கொள் புள்ளியிலாப் பூக்கோலமோ?

சுந்தரமாய்ப் பசுங்குழவி வாய்விரிக்கும்
செந்தமிழ் மழலை மொழிகளோ?

சுகமாய்க் காற்றில் கலந்திடும் மணமது
தாமாய்ப் பரவும் நல்லோர் புகழோ?

வேற்றுமையி லொற்றுமை காணெனத் 
தேற்றுந் தேசிய ஒருமைப்பாடோ?

விழிவிரித்து வண்டினை ஈர்க்கும் பாங்கது
வழிக்காளை மயக்கும் பெண்மகள் அழகோ?

ஆயுளில் சிறுத்தாலும் வாழ்வினில் சிரித்திடெனச்
சூசகமாய்ப் பாடந்தரும் ஈரங்குலக் குறள்நலமோ?

புறமுதுகு காட்டாப் பெருமகனைத் தினமுந்
திறமுடன் களமிறக்கும் வீரத்தாய்க் குலமோ?

தென்றல் வருடிடத் தெளித்திடும் மதுத்துளி
வென்றிடப் புவியரசின் இலவசத் திட்டமோ?

எதனொடு சேர்ப்பினும் அழகுக்கழ கூட்டும்
பதமான இயற்கை யின‌ழகு நிலையமோ?