புதன், ஜூன் 08, 2011

வாடகைத்தாய்

அம்மாயெ ன‌ண்டத்தில்
என்னவரி னுயிர்கோர்த்துத்
தன்வயிற்றுப் பிண்டமாக்கித்
தரணியில் உலவ வைத்தாய்!

திங்கள்பத்துக் காலமோட‌
யாக்கைத் துயர்பொறுத்துக்
காக்கைக் கூட்டில்
குயில் வளர்த்தாய்!

சுட்டெரிக்குஞ் சூரியத் தந்தையும்
அலைமீளும் நீள்கடற் றாயும்
தந்திட்ட நீர்தாங்கும் மேகமாய்ச்
சேய்த‌ந்தே கரைந்து மறைந்தாய்!

தாய்மை புனித மெனப்பார் போற்றும்
தாய்மை புனித மெனப்பார் போற்றும்!
உற்ற தாயிடம் நவீனக் கர்ணனாய்ப் 
புனிதந் தாரை வார்க்கும் பெற்றதாய்நீ!

முன்பெற்ற பிள்ளைப் பசிதீர்க்கக்
கருவினைத் தாங்கும் கருவியெனக்
காசுக்கு விற்ற கருவறையில் வரமாய்த் 
தெய்வத் தையேதருங் கோயில்நீ!

நினைத்தாலே கண்ணீர் பெருகுதம்மா!
கருவறை காட்டிக் கைநீட்டினாலும்
ஈரைந்து மாதமாய்த் தான்காய்ந்து
நீசெய்த தவம்போல யார்செய்தார்?

என்வயிறு பொறுக்காதென யாவருங் கைவிரிக்க‌
என்வயிறு பொறுக்குமெனத் தைரியமாய்க் கைகொடுத்தாய்!
உடுக்கை இழந்தழுத‌வளுக் கிடுக்கண் களைந்தாய்!
வயிறுதந்து மலடுநீக்கி யென்வயிற்றிற் பால்வார்த்தாய்!

பெறாத பிள்ளைக்கும் மார்பினில் பால்சுரக்க‌
மடியில் கிடந்து சிரிக்கின்றா ளென்மகள்!
சிரிக்கையில் என்சாடை அவர்சாடை காண்கிறேன்!
அழும்போது உன்சாடை மட்டுமே காண்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக