ஞாயிறு, ஜனவரி 22, 2012

கும்கி - 3

அத்தோடு விட்டாளா?

'மூஞ்சூறு கரத்திருக்கும் கொழுக்கட்டை
அதுவாய் விழுந்ததா?
பிள்ளையார் கொடுத்தாரா?'

என்று அடுத்துத் தொடுத்தாள் கேள்விக்கணை!

மழலைக் கேள்விக்கு மலங்க விழித்தார்
வ‌லமிடந் தலையாட்டி விளையாடச் செல்லென்றார்
வந்தான் செல்வன் துடுக்காய் உதவிக்கு
தந்தான் செல்விக்குப் பதிலுக்குப் பதிலாய்

'அடிச்செல்வி!
கனத்த சரீரம் அவருக்கடி!
நடக்கவே மருத்துவர் சொன்னாரடி!
நடைபயண உதவிக்கே மூஞ்சூறடி!
அதனாலே அழகனுடன் போட்டிக்கு
எலிமேல் ஏறாமல் அழகாய்
தாய்தந்தை வலம்வந்த உத்தமனடி!

தானே உருவாக்கி தரணிக்கே தருபவன்
தேனான கொழுக்கட்டை தந்திட‌ மாட்டானோ?
மழலைகள் தெய்வமடி கலைகளின் ராஜனடி!
தலையிலே குட்டிக் கரணமும் போடடி!

நீ குட்டுவாயா நானே குட்டவா?'
அண்ணன் செல்லமாய் விரட்டத்
தப்பியோடி இக்காட்சி ரசித்திட்ட‌
தாயிடம் புகுந்தாள் தஞ்சம்

(தொடரும்)

கும்கி - 2


கடவுள் வணக்கம்:

ஏக நாயகன் ஞான வித்தகன்
ஞால முதலவன் கோடி ஒளியவன்
மூல முறைபவன் நாத முறையவன்
கால நெறியவன் ஓது மறையவன்

ஆனை முகத்தவன் பானை வயிற்றவன்
ஓமெனும் பிரணவன் சேமந் தருபவன்
காட்சிக்கு எளியவன் மாட்சிக்குப் பெரியவன்
பாதக் கமலம் பணிந்து போற்றியென‌

வாயால் பாடி மனத்தால் ஆடி
கண்கள் கலங்கி உயிரது உருகி
பக்திக் கட்டில் தன்னை விடுத்து
அன்னை பாரதி அன்பாய்த் தொழுதனள்

செல்வன் அமைதியாய்த் தாயொடு நின்றான்
செல்வி செல்லமாய்த் தந்தையொடு இயைந்தாள்
மலரன்ன‌ கண்களை மெதுவாய்த் திறந்தாள்
தந்தையின் கரங்களைப் பற்றி இழுத்தாள்.

என்ன குறும்பிது பூசை நேரத்தில்
என்றே தவமணி பொறுமை காத்தார்
'சின்ன எலியேறிப் பிள்ளையார் சொகுசாய்ப்
போவதும் எப்படியோ என்றே கேட்டாள்!'

(தொடரும்)

கும்கி - 1

கும்கி ‍: இது ஒரு அறிவியல் கவிதைக் கதை.

அறிமுகப்படலம்

தமிழ்ச்செல்வி:

ஆறாய்த் துள்ளும் ஆறு வயதினள்
ஆம்பலும் வெட்கும் அழகு முகத்தினள்
தேனீ மயங்கும் மதுரக் குரலினள்
வானரம் தோற்கும் வாலைக் குறும்பினள்

தமிழ்ச்செல்வன்:

முத்தாய் எட்டும் வயதோ பத்தினன்
கொத்தாய்க் கொட்டும் தாயவள் அன்பினன்
வித்தாய் முட்டும் எதிலும் முதலவன்
பித்தாய் ஒட்டும் செல்விக்கு மூத்தவன்

முருகைய‌ன்:

ஐம்பதைத் தாண்டிய அனுபவ‌ மேதை
வம்பதைத் தீண்டா எளிய மனிதர்
என்பிலும் தேங்கும் அன்புத் தேக்கம்
முண்டாசு நீங்கா உழவுத் தொழிலர்

கும்கி:

கதையின் நாயகன்
எளிய வடிவினன்
அரிய செயலினன்
செல்வியின் தோழன்

(தொடரும்)

சனி, ஜனவரி 14, 2012

உலகம் உருளுமாய்யா?




சாமிக்கும் முழுக்க அலுக்க வேலையுண்டு
அதிகாலை எழுந்து பன்னீரில் குளிப்பதுண்டு
சாயுங்காலம் விழுந்து பள்ளியில் படுப்பதுண்டு
தினப்படி ஒழுக்கமா யாறுகால பூசையுண்டு
வந்து போவோர்க்கு மறுக்காமல் அருளுமுண்டு!

நம்வசமாய் நாடாமல் இலவசங்கள் வந்தாலும்
கடலோடிப் புள்ளைக திரவியங்கள் சேர்த்தாலும்
மாச‌த்தில் மழைபெஞ்சு மண்ணீர் ஆகையிலே
ரெட்டைக் காளை ஏர்பூட்டி உழுகையிலே
மண்ணும் பிரண்டுச்சு மனசும் பிரண்டுச்சு!

வாழ்க்கையே கடனாய் கடனே வாழ்க்கையாய்
வாழுங் காலமெலாம் மலையேறிப் போவுமோ?
பாழும் உழவனை மதிக்கவும் தெரிந்திடுமோ?
வருசத்துக்கு ஒருமாசம் தைமாசம் வந்திடுது
உழவனுக்கும் மாட்டுக்கும் பொங்கலும் வெந்திடுது!

செம்மண்ணில் கலந்தாலும் நீரென்னவோ நீர்தானய்யா!
செவ‌க்காட்டில் வெளைஞ்சாலும் பொங்கலோ இனிப்பய்யா!
செவத்தத்தோலு கறுத்தத்தோலு மாடும்நானும் ஒன்றய்யா!
வெளிப்பார்க்க முரடானாலும் உள்ளேமனசு கரும்பய்யா!
நாங்கமட்டும் இல்லையின்னா உலகம் உருளுமாய்யா?

புதன், ஜனவரி 11, 2012

வாழைத் தாய்




மகனே!
வெறும் பத்துமாதச் சுமைக்காகவா
உன்னைப் பரிதவித்து வளர்த்தேன்?
தாய்மையின் அரிச்சுவடு ஏதென்று கண்டாய்?
உடலிரண்டு ஆகிவிட்டால் உயிரும் இரண்டாமோ?
வயோதிகத்தி லென்னைத் தாங்குவா யெனக்கருதி
வியாபாரி யாயுனை வார்த்ததாய் நினைத்தாயோ?
எங்கிருப்பினும் வாழ்க வென்பது என்றும்
பிரிந்த‌ காதலுக்கு மட்டும‌ன்று என்றும்
பிரியாத் தாய்க்கும் அதுதானடா!
உனக்கு மகிழ்வென்றால் முதியோர் இல்லமும்
மரத்தடியும் நடைத்தெருவும் சொர்க்கமே எனக்கு!
ஆலமரமாய் ஓரிடத்தில் நிழல்பரப்பி வாழநினைத்தேன்!
ஆலமரத்தின் பலனென்னப் பிரமாதமாய் இங்குண்டு?
வாழையின் உடலெலாம் தியாகமென்றே புரிந்ததாலோ
வாழைமரமாய் அடிபறித்து நிற்கவே நீநினைத்தாய்!
வீழுமட்டும் வாழையாய் வாழவும் அறிவேனடா!
கண்மூடி நானிங்கு வீழ்ந்த பின்னேனும்
அரிச்சுவட்டை மறந்தாலும் அடிச்சுவட்டை மறவாதிரு!