கும்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 07, 2012

கும்கி - 9


இன்னும் பலப்பல அதிசயம் பகர்வேன்
அறிந்து நினைந்து நினைந்து மகிழ்வீர்
பரந்து பட்டபூமிப் பந்தில் நாங்கள்
உவந்து வாழும் ஆயுள் அறிவீரோ?
மனிதர்க்கு நூறு எமக்கோ ஆயிரமென்றே
ஏளனமாய்ச் சொல்லி கும்கி குதித்தது!

ஆ!என்ன! சொல்ல‌து மெய்யா பொய்யா?
என்றபடி செல்வன் செல்வியைப் பார்த்தான்.

இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பார்ப்பதில்
மனிதர்க்கு என்றும் நிகரேதும் உண்டோ?!
எமதாயுள் அதிகமெனுங் கவலையை விடுவீர்!
எமதர்மன் வருநாளை யாரறிவார் சொல்வீர்!
மனிதர்க்கு ஆயுளொரு நூறு ஆண்டாம்
எமக்கிங்கு உளதோ ஆயிரம் நாளாம்
வாநாள் முழுதும் உழைப்பின்றி வீணே
நாறும் நூறால் பலனென்ன சொல்வீர்?

குறைபட்ட ஆயுளை விளக்க‌க் கேட்டதும்
தேய்ந்திட்ட‌ நிலவாய்ச் செல்வி சோர்ந்தனள்.
வெறும் மூவாண்டில் என்னதான் செய்வாயோ?
இப்போது வயதென்ன? சொல்நீ! என்றே
அடுக்கு அடுக்காய்க் கேள்வியைத் தொடுத்தாள்!

இருக்குங் காலத்தில் மகிழ்வுட னிருந்தால்
அருகும் ஆயுளால் கவலை வருமோ?
சீரோடு ஊராண்டு உலகாண்டு களித்திட்டேன்
மூவாண்டில் ஓராண்டு இன்றோடு கழித்திட்டேன்
யான்பிறந்த நாளில் வருந்த ஏதுமிலை!
மழலைகள் நீவிர் மகிழ்ந்து ஆடுவீர்!

பிறந்த நாளென்றால் எங்கிருந்து வருமோ?
அவ்விடத்து வந்தே நிறைந்தது குதூகலம்!
சுணைக்கால் பிடித்துக் குலுக்கினான் செல்வன்!
நீஆணா? பெண்ணா? கேட்டாள் செல்வி!

இனிக்கும் பசும்பாலும் குறளெனும் முப்பாலும்
தாய்மைப் பெண்பாலும் கம்பீர ஆண்பாலும்
எப்பாலும் வருதற்கும் முப்போதே அப்போதே
உருவான குடியானவர் நாங்கள் எமக்குள்
ஆண்பால் பெண்பால் பேதமில்லை அறிவீர்!
இருபாற் குணமும் ஒருங்கே கொண்டு
அரிதாய் விளங்கும் அர்த்தநாரி காண்பீர்!
இன்னும் ஏதேதோ சொல்லத் துவங்க‌
செல்வி! செல்வா! அழைத்தார் பாரதி!

தொடரும்...

வியாழன், ஜூலை 05, 2012

கும்கி - 8

பார்க்கச் சிறியோன் என்றே நினைத்தீரோ
தீர்க்கக் காரியம் புரியும் என்னை?
மூர்த்தி சிறிதானும் கீர்த்தி பெரிதெனல்
ஆர்க்கும் இறைக்கும் என‌க்கும் பொருந்தும்!

பாரியின் தேரிலன்று முல்லை வளைந்தாற்போல்
செல்வியின் விரலில் சொகுசாய் வளைந்தாடி
மூச்சுக்கும் சொல்லுக்கும் இடைவெளி விடாது
கீச்சுக் குரலில் கும்கி பகன்றது.

ஒருவிரல் நசுக்கலில் உயிரளவு கொண்டாலும்
பெருமை அடிப்பதில் அடிக்க ஆளில்லையே!
பிள்ளைப் பருவத்தீ ரென்றே ஏளனமோ?
பள்ளி சென்றறிவு கொள்வதும் அறிவாயோ?

காதும் குத்தியாச்சு! யாரும் அங்கே
சுற்றிப் பூவைக்க இடமும் இல்லை!
சொல்வ தெல்லாம் கேட்டுத் தலையாட்டிச்
செல்வியிவள் செல்லாள்! அறிவா யென்றாள்!

நடுநிசி போலும் இருண்ட மாநிழலில்
சமதளத்தில் சமுக்கமாய் சருகு நீக்கிக்
கிடைத்த இடத்தில் கவனப் பக்குவமாய்க்
கும்கியைக் கீழிறக்கி மெதுவாய் விடுத்தாள்!

ஏமாற்ற ஏமாற நானோ மனிதனில்லை!
வழிவழி வந்த அறிவிருக்க எமக்குப்
பள்ளியும் செல்லத் தேவையும் இல்லை!
எம்கதை சொல்வேன் தெளிய அறிவீர்!

வெள்ளையர் கருப்பர் குட்டை நெட்டையர்
மூக்கு சிறுத்தோர் தங்க முடியோர்
இன்னுஞ் சில‌விதமென‌ மானுடர் இருப்பர்
எமக்கோ ஈராயித்து இருநூறு இனமுண்டு!

மண்தோன்றி வளந்தோன்றாப் பழைய காலம‌தில்
மண்தோண்டிச் சிறந்தோங்கப் பரமன் படைத்தனன்!
பழுதேதும் இன்றி உழுதுண்டு வாழ்ந்து
தரிசான வயலைப் பரிசாக்கும் பணியெமது!

ஆண்டுகள் கொண்டு கொஞ்சம் அளந்தால்
வாண்டுகள் நீங்கள் கோடிகோடிப் புதியோர்!
இறுக்கப் பூமியிளக்கிய பழங்குடி நாங்கள்
நேற்றுப் பிறந்த புதுக்குடியினர் நீங்கள்!

கும்கி சொல்லில் சந்தேகம் இருப்பின்
நூற்புழுவாய் மாறி நூலகஞ் சென்று
வைட், லாயிட், டார்வின் போன்றோர்
எம்மைப் பற்றிச் சொன்னதைப் படிப்பீர்!

ஏதேதோ சொல்லும் கும்கியைக் கண்டு
தோதாய்ச் சம்மணிட்டு எதிரெதிர் அமர்ந்து
ஒருமித்துக் கருத்தைக் காதில் வைத்தபடி
இருந்தனர் நம்பியும் நம்பாமலும் தும்பிகள்.

(தொடரும்)

திங்கள், ஏப்ரல் 09, 2012

கும்கி - 7

அண்ணா ஈங்கோர் அதிசயம் பாரேன்!
அழைத்தனள் கூவி செல்வனைச் செல்வி
அத்தோடு நின்றாளா? அவனைத் தேடியே
துள்ளி யோடினாள் மான் போலவே.

அலுவலகஞ் செல்லும் காலைப் பேருந்தில்
கடைசிப் படியில் ஒருகாலை வைத்து
ஒருகையால் கம்பியில் தொங்கிச் செல்வதாய்
பாவம் கும்கிக்குத் தலையெலாஞ் சுற்றிற்று.

பேசும் மண்புழு!
பேசும் மண்புழு!
மண்புழு! மண்புழு!
வளையுது பார்!
நெளியுது பார்!

நீர்நிறை புட்டியைத் தலைகீழாய்க் கவிழ்த்தால்
கழுத்து முட்டித் தடுமாறும் நீரெனச்
சொற்கள் தட்டித் திக்கி விழுந்தன!
செல்வனும் எட்டி அதிசயமாய்ப் பார்த்தான்!

மழலைகள் முகந்தனில் குதூகலம் கண்டு
பின்வந்த முருகையன் இதழ்களில் முறுவல்
மகிழ்வின் உச்சியில் இளக்கம் இயல்பன்றோ?
துளிர்த்தன‌ கண்ணீர் பூக்கள் ஆனந்தமாய்!

மேலே கருமையும் கீழே வெண்மையுமாய்
உடலெங்கும் வரிசையாய்க் கோர்த்த வளையங்கள்
தலையருகே சுணைக்கால் கொண்டு நகரும்
கும்கியைக் கண்கள் விலக்காமல் பார்த்தனர்!

செல்வனும் செல்வியும் ஆர்வமாய்ச் சேர்ந்து
குறுகுறு பார்வையில் துளைத்துச் செய்த
மண்புழு ஆராய்ச்சி தந்தது கும்கிக்குச்
சொல்லொணாக் கூச்சமும் படபட வெட்கமும்.

நன்றாய்ப் பார்ப்போமெனச் சூரிய ஒளியில்
சென்றே தொடர்ந்தனர் தமது ஆராய்ச்சியை!
கதிரவன் கதிரைத் தாங்குமோ மண்புழு?
காயத்தில் காயம் பெற்றே சுருண்டிடுமே?

போதும்! போதும்! என்னை விடுங்கள்!
கதிரவன் கதிரோ தணலாய்த் தகிக்குதே!
கதறிய கும்கியைக் காக்க எண்ணியே
நிழலுக்கு வந்தனர் மூவரும் விரைந்து!

யாது மறியாது செய்த பிழைபொறுப்பாய்!
தோழராய் எம்மை ஏற்றே மன்னிப்பாய்!
உனைப் பற்றி அறியா யெமக்குச்
சொல்வாயோ அறியும்படி கொஞ்சம் விளக்கமாய்?

கேட்டாள் அன்பது ததும்ப‌ச் செல்வி
விட்டால் வழியத் தயாராய் அணைகட்டி
அவள்கண் நின்ற கண்ணீரைக் கண்டதும்
உருகியது கும்கி! செறுமியது குரலை!

(தொடரும்)

திங்கள், பிப்ரவரி 20, 2012

கும்கி - 6

இயற்கைத் தூரிகை வரைந்த நவீனஓவியம்
முயற்சிப் புழுஎட்டிய வெற்றிச் சிகரம்
சிறகாலே பூவிரிக்கும் வண்ணத் தூதகம்
மதுவாலே திளைக்கும் வாழ்க்கைப் பயணம்

நூறாய்ப் பறக்கக் கண்கொளாக் காட்சியில்
எதைத் துரத்த எதை விடவெனச்
செல்வன் ஆருக்கும் பிடிபடாது பறந்தான்
தானுமொரு வண்ணத்துப் பூச்சியென எங்கும்

கிணற்று ஆழத்தைக் கண்ணால் வியந்தபடி
எல்லை எதுவரை தமதென அளந்தபடி
தம்பதியர் அமர்ந்தனர் எளிமைச் சுகமாம்
பின்னிப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில்

குற்றாலமாய்ப் பாய்ச்சிய நீரின் வேகத்தைக்
கைநீட்டித் தடுத்துப் பார்த்துத் தோற்றதில்
செல்விக்கு முகமெங்கும் முத்தாய் விழுப்புண்கள்!
வாய்க்கால் கால்நனைத்துச் செய்தனள் உடன்படிக்கை

வரப்பெங்கும் நீர்வழிப் பாட்டையில் நடந்தாள்
இருமருங்கும் நெற்கதிர் தலைவணங்க ராணியாய்
அறுவடைக்குத் தயாரென்று இராமையா விளக்க
புதிதான சொற்களைப் புரியாமல் சிரித்தாள்.

வரப்பினின்று இராமையா கைபற்றி ஏறினாள்
காற்பெருவிரல் சுற்றியபடி மெல்லிய கயிறு
கயிறென்று நினைத்துக் கையெடுத்து நீக்கினாள்
கயிறல்ல வளைந்து நெளிந்தது ஒருஜந்து.

பாம்பென்றே பயந்து அலறித் தவித்தாள்
உதறிய கையை நீங்காது பற்றியதது
பாம்பன்று மண்புழு என்றையம் நீக்கினார்
அவ்விடம் அனைத்தும் அறிந்த இராமையா.

புழுவாவென்றே பொசுக்கென்று நசுக்கப் போனாள்
வேண்டாமம்மா என்றே தடுத்தார் தாத்தா
நானுமுயிர் தானே என்றொரு குரலும்வர
ஆச்சரியமா யங்குமிங்கும் தலைதிருப்பிப் பார்த்தாள்

மண்புழு பேசுமா? அவளுடன் பேசிற்று!
உனக்குப் பேசவும் வருமோ என்றாள்
உயிர்போந் தருவாயில் எல்லாம் வருமென்றது!
வியந்ததன் பெயர்கேட்கச் சொன்னது 'கும்கி'யென! 

(தொடரும்)

கும்கி - 5

முதல்வந்து அமர்ந்த செல்வனின் முன்னிருக்கை
முகஞ்சுருங்கி அழுத செல்விக்கே கிடைத்தது!
மாசுநிறை நகரநரகம் பின்நகரச் சென்றனர்
பாசிநிறை கிராமச் சொர்க்கம் நோக்கி

கருப்புச் சாலைகள் நீண்டெங்கோ செல்ல‌
பசுமைச் சோலைகள் நோக்கித் திரும்பினர்!
அலையாடும் படகாய் வாகனமும் தலையாட்டிச்
செம்மண் சாலையில் ஓடியது புழுதிபறக்க‌!

கிராம எல்லையில் தாண்டி யார்போவாரென‌
அரிவாள் குத்தீட்டி வேற்கம்புப் படையோடு
உக்கிரமாய் நின்றிருந்தார் பரிமேல் அய்யனார் 
பயத்துடன் மழலைகள் பணிந்து வணங்கினர்!

வந்தது கிராமம் பெருவளக்கரைப் பெயர்கொண்டு
எண்ணி ஐம்பது இல்லங்கள் மட்டுங்கொண்டு
சாரைப் பாம்பாய் நெளிந்த பாதையில்
ஊரைத் தாண்டிச் சென்றது வாகனம்!

ஆழப் பதிந்த வாழை யோர்புறம்
வாழத் தந்திடும் செந்நெல் லோர்புறம்
சூழக் கரைவளர் தென்னை யோர்புறம்
நீழல் தருமினிய மாக்கூட்ட மோர்புறம்

எங்கெங்கு காணினும் பசுமை வெள்ளம்
எங்கிருந்தோ நாசியைத் தாக்கும் சுகமணம்
மேடையேறப் பயமிலாக் குயிலின் கானாமிருதம்
மெய்யைத் தீண்டிடும் தென்றல் மென்கரம்!

கண்டுமயங்கி நின்றோரைக் கண்டொருவர் ஓடிவந்தார்
தவமணியென‌க் கண்டதும் மெய்மலர்ந்து வரவேற்றார்!
உடல்வன் மையும் உள்ளமென் மையுங்கொண்டு
உடையில் மட்டும் அழுக்கிருக்கும் முருகையன்!

(தொடரும்)

கும்கி - 4

ஊர்வலக் காட்சி:

ப‌ள்ளி யெழுச்சி காலை எட்டு
பள்ளி சென்று மீள்தல் நான்கு
பாடச் சுமை இறக்கம் எட்டு
பள்ளி சோர்வது இரவு பத்து

முற்காலத்திற் பொழுதுண்டு போக்கில்லை
தற்காலத்திற் போக்குண்டு பொழுதில்லை
பொற்காலம் ஈதென்றே கருதுவார்
கற்காலம் நோக்கிப் போவதறியார்

நொடியேனும் அசராது ஓரிடத்தில் நில்லாது
கடிகாரம் விரட்டியே போவும் காலமும் 
விடுமுறைக் காலமோ முறைவிடுதல் இல்லாது
தொலைக்காட்சிப் பெட்டியே கதியென் றாகிடும்.

இன்று பள்ளிக்கு விடுமுறை யாதலால்
கன்றுகள் துள்ளிப் படங்காணத் துடித்தனர்
என்றும் போலவே மின்சாரம் போனது
என்றும் இல்லாமல் திரும்ப வராமல்!

ஓடி விளையாடப் பெற்றோர் விடுவதில்லை
ஆடி விளையாடப் பிள்ளைகள் விரும்பவில்லை
வேறு வழியின்றி உலகையே சலித்து
வேறு எங்கேனும் செல்ல நினைத்தனர்

நவமணியும் விளையும் நலமிகு நிலபுலனாய்த்
தவமணியின் தந்தை சேர்த்திட்ட சொத்து
தூரத்துக் கிராமத்தில் தனியாய்க் கிடந்தது
நேரத்தைக் கழித்திடக் கிளம்பினர் அங்கு.

(தொடரும்)

ஞாயிறு, ஜனவரி 22, 2012

கும்கி - 3

அத்தோடு விட்டாளா?

'மூஞ்சூறு கரத்திருக்கும் கொழுக்கட்டை
அதுவாய் விழுந்ததா?
பிள்ளையார் கொடுத்தாரா?'

என்று அடுத்துத் தொடுத்தாள் கேள்விக்கணை!

மழலைக் கேள்விக்கு மலங்க விழித்தார்
வ‌லமிடந் தலையாட்டி விளையாடச் செல்லென்றார்
வந்தான் செல்வன் துடுக்காய் உதவிக்கு
தந்தான் செல்விக்குப் பதிலுக்குப் பதிலாய்

'அடிச்செல்வி!
கனத்த சரீரம் அவருக்கடி!
நடக்கவே மருத்துவர் சொன்னாரடி!
நடைபயண உதவிக்கே மூஞ்சூறடி!
அதனாலே அழகனுடன் போட்டிக்கு
எலிமேல் ஏறாமல் அழகாய்
தாய்தந்தை வலம்வந்த உத்தமனடி!

தானே உருவாக்கி தரணிக்கே தருபவன்
தேனான கொழுக்கட்டை தந்திட‌ மாட்டானோ?
மழலைகள் தெய்வமடி கலைகளின் ராஜனடி!
தலையிலே குட்டிக் கரணமும் போடடி!

நீ குட்டுவாயா நானே குட்டவா?'
அண்ணன் செல்லமாய் விரட்டத்
தப்பியோடி இக்காட்சி ரசித்திட்ட‌
தாயிடம் புகுந்தாள் தஞ்சம்

(தொடரும்)

கும்கி - 2


கடவுள் வணக்கம்:

ஏக நாயகன் ஞான வித்தகன்
ஞால முதலவன் கோடி ஒளியவன்
மூல முறைபவன் நாத முறையவன்
கால நெறியவன் ஓது மறையவன்

ஆனை முகத்தவன் பானை வயிற்றவன்
ஓமெனும் பிரணவன் சேமந் தருபவன்
காட்சிக்கு எளியவன் மாட்சிக்குப் பெரியவன்
பாதக் கமலம் பணிந்து போற்றியென‌

வாயால் பாடி மனத்தால் ஆடி
கண்கள் கலங்கி உயிரது உருகி
பக்திக் கட்டில் தன்னை விடுத்து
அன்னை பாரதி அன்பாய்த் தொழுதனள்

செல்வன் அமைதியாய்த் தாயொடு நின்றான்
செல்வி செல்லமாய்த் தந்தையொடு இயைந்தாள்
மலரன்ன‌ கண்களை மெதுவாய்த் திறந்தாள்
தந்தையின் கரங்களைப் பற்றி இழுத்தாள்.

என்ன குறும்பிது பூசை நேரத்தில்
என்றே தவமணி பொறுமை காத்தார்
'சின்ன எலியேறிப் பிள்ளையார் சொகுசாய்ப்
போவதும் எப்படியோ என்றே கேட்டாள்!'

(தொடரும்)

கும்கி - 1

கும்கி ‍: இது ஒரு அறிவியல் கவிதைக் கதை.

அறிமுகப்படலம்

தமிழ்ச்செல்வி:

ஆறாய்த் துள்ளும் ஆறு வயதினள்
ஆம்பலும் வெட்கும் அழகு முகத்தினள்
தேனீ மயங்கும் மதுரக் குரலினள்
வானரம் தோற்கும் வாலைக் குறும்பினள்

தமிழ்ச்செல்வன்:

முத்தாய் எட்டும் வயதோ பத்தினன்
கொத்தாய்க் கொட்டும் தாயவள் அன்பினன்
வித்தாய் முட்டும் எதிலும் முதலவன்
பித்தாய் ஒட்டும் செல்விக்கு மூத்தவன்

முருகைய‌ன்:

ஐம்பதைத் தாண்டிய அனுபவ‌ மேதை
வம்பதைத் தீண்டா எளிய மனிதர்
என்பிலும் தேங்கும் அன்புத் தேக்கம்
முண்டாசு நீங்கா உழவுத் தொழிலர்

கும்கி:

கதையின் நாயகன்
எளிய வடிவினன்
அரிய செயலினன்
செல்வியின் தோழன்

(தொடரும்)