வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

இஃதென்ன?



இஃதென்ன?
புன்னகைச் சுரங்கம் அரங்கம் ஏறுதோ?
குதூகலக் கப்பல் பவனி துவங்குதோ?
இன்பக் கருவூலக் கதவு திறக்குதோ?
மகிழ்ச்சி மடைதிறந்து கடலாய் நிறையுதோ?
வல்லினக் கரத்தில் மெல்லினம் இழையுதோ?
தோஷமில்லாச் சந்தோஷம் எங்கும் பரவுதோ?
கடைகாணா நகைகள் கடைவாயில் கிடைக்குதோ?
ஏழ்மைச் செல்வம் குபேரனை வெல்லுதோ?
உள்ளத்தின் பல்லக்கில் வெண்மை விளங்குதோ?
உள்ளதில் வாழ்வதால் இன்மை குறையுதோ?
இன்றில் வாழ்வதால் நாளை மறந்ததோ?
பயணம் துவங்கிட வழியும் தெரியுதோ?

ஆயுதக் கவிதை

நரியதன் வண்ணம்
      நூறாய்
            ஆயிரமாய்
                  லட்சமாய்க்
                        கோடிகளாய்
                              லட்சக் கோடிகளாய்
                                    ஊழல் வளர்ந்திருந்தால்
                              வெற்றுக் கேடிகளாய்
                        பேடிகளாய்ப்
                  பிச்சைகளாய்
            கேவலமாய்ச்
      சோறின்றித்
திரிவதும் திண்ணம்!

பொய்யென...

அரசியல் அடிதடிக்கும்
ஆர்ப்பாட்டக் கயமைக்கும்
ஆன்மீகக் கபடத்துக்கும்
சோரமான உழைப்புக்கும்
தாந்தோன்றிச் சிறுமைக்கும்
தான்னோக்கும் கொடுமைக்கும்
வியாபாரக் கல்விக்கும்
நடுநில்லா நீதிக்கும்
வீரநாண‌மில்லா ஆண்மைக்கும்
நாணவீர‌மில்லாப் பெண்மைக்கும்
பரிசாயின்று வானமும்
பொய்யெனப் பொய்த்ததோ?