சனி, ஜூன் 07, 2014

தா வரம்!

முத்து வள்ளிக் கிழங்கே
சற்றுங் காறாக் கத்திரியே
வழவழப்பு கண்ட‌தக் காளியே
விழுவிழுப்பு காணா வெண்டையே
உருக்க மணங்கூடு மாநெய்யே
பெருக்க‌ சுவைகுறையாப் பூசணியே
தோள்மட்டும் தொங்கும் புடலையே
நாட்பட்டும் மங்காச் செந்தேனே
அரிந்தெடுத்த இருகாற் பசுங்கீரையே
தெரிந்தெடுத்த முற்றா முருங்கையே
கரைதனிலே கடல்கண்ட உப்பளமே
சிவந்துந் சிவக்கா அப்பளமே
எங்கெங்கு அலைந்தே தேடினும்
அங்கெலாங் கிடையாத் தாவரமே
அங்கமதில் பங்கதுவாய் எப்பிறப்பும்
இங்கிதமாய் வந்திடவே தாவரமே!

ஆகாய நடுக்கம்

காயமின்றித் தொலைகை சுகத்தின் உச்சம்
மிச்சமின்றித் தீர்வதிலே இன்பமே மிச்சம்
கோடிப்பேர் கோடிப்பேர் கொண்டு கோடியிற்
றொழுதுங் காணான் ஒளியுந் தொழிலான்
ஒளிய விரும்பும் ஒளியான் இருளான்
வளர்ந்த நகம் வெட்டி எரிதலாய்
நிலமது நடுங்கி நலமது நீக்கும்
இருப்பு நடுங்கின் இன்பம் ஒடுங்குமாயின்
இன்மை நடுங்கின் துன்பம் ஒடுங்குமோ?
இருப்பின் நடுக்கம் மற்றோர் துவ‌க்கமாயின்
இன்மை நடுக்கம் மற்றோர் முடிவோ?

புதன், மார்ச் 05, 2014

ஓட்டைப் பாத்திரங்கள்...

ஓட்டைப் பாத்திரங்கள்...



அழுக்குக் கடலில் கிழிசல் பாலங்கள்
வெற்று வெளியில் நிணநீர்ப் பாளங்கள்
மட்டை மயிர்கள் நகக்கண் துருக்கள்
பட்டைச் சருமம் பழுப்பு விழிகள்
ஈமொய்க்கும் புண்மேல் இருக்கும் கவனம்
செக்கு மாடாய் அசைபோடும் மந்திரம்
வட்டியால் தட்டி வாழ்வு வழுக்கியோர்
கள்ளக் காதல் துணையைப் பொறாதோர்
எற்றிய பிள்ளைப் பேய்கள் வெட்டியோர்
இல்லாள் மறைவால் இல்லம் மறந்தோர்
திருடனாய் இருந்து திருந்த நினைத்தோர்
மணநோய் முற்றி மனநோய் கொண்டோர்
வைத்தியம் இல்லாப் பைத்தியம் பிடித்தோர்
கால்கை இருந்தும் முடமாய் இருந்தோர்
பலகலை கற்றும் அசடாய்த் திரிந்தோர்
சித்தம் விளக்கிச் சித்தராய் விளங்குவோர்
கோடியில் புரண்டு கோடியில் புரள்வோர்
காசெலாங் கரைத்து நோயில் விழுந்தோர்
சுகதேசி ஆனதாலே பரதேசி யானோர்
முகவரி தொலைத்தே முகவரி கண்டோர்
ஏதிலியாய்ப் புகுநாட்டில் புகலிடம் பயந்தோர்
அகாரணப் பிறழ்வால் கரணம் பிழைத்தோர்
எதிர்பாரா விபத்தில் வாழக்கை இழந்தோர்
வெறும்பை சுமக்காது வெறுப்பைச் சுமந்தோர்
தாய்ப்பால் வறண்டிடச் சுடுவெயில் அலைந்தோர்
இவர்வகை இன்னும் எத்தனை எத்தனையோ ?
ஏற்பது இகழ்வெனும் அவமானந் துறந்தோர்
எதிர்காலம் ஏதெனும் கேள்வி மறந்தோர்
ஏனிப்படி என்றே பார்வையால் கேட்டேன்!
ஒருவேளைச் சோறு போட்டால் போடு
இல்லையேல் எனக்குண்டு தெருவிலே வீடு
வாய்திறவா ஏளனச் சிரிப்பாய் எதிரொலி
அழுக்கறத் தெள்ளெனப் புரிந்த சூக்குமம்
நீயும் பிச்சை நானும் பிச்சை.

வியாழன், ஜனவரி 23, 2014

ஆனந்தக் கண்ணீர்!

ஆனந்தக் கண்ணீர்!

நகர்ந்து பரவும் பூதக் குன்றுகள்
சுழித்து வீசும் காற்றின் அரவம்
பகலில் வெப்பம் இரவில் நடுக்கம்
என்றும் காண்பது அங்கே உச்சம்

மணலாட்சி செய்யும் பாலை சூழ‌
இராசபுதன இராசர் வழிவழி ஆளக்
குணமாட்சி செய்யும் அரசின் கீழாய்ச்
சிறந்த கேத்ரி நாடே நாடென்பர்

எட்டா ராஜ்ஜியத்தின் எட்டாவது அரசன்
அஜித்சிங்.
அசைக்க முடியாப் பெயருடையோன்
அசைந்து கொடுக்கும் மனமுடையோன்
இசையில் மயங்கும் குணமுடையோன்
கல்வி கேள்வியிற் சிறப்புடையோன்
உயர்ந்தோர் மதிக்கும் பண்புடையோன்

அன்றொருநாள்;
கொளுத்திய வெயில் மங்கிய‌ மாலை;
பிரதாப சிங்கெனும் ஜோத்பூர் இராசனுடன்
அரைமணிப் பேட்டி கண்டான்.
இடையில் வந்தது சீட்டொன்று.
துறவி வந்துளார் காணவென்று.
பொறுக்கச் சொன்னான்!
அவரும் பொறுத்தார்.
பேட்டி முடிந்திற்று. அழைத்தான் துறவியை.
துறவியும் வேந்தனும் சிறிதாய்ப் பேசினர்.
அஜித்துக்கு அது காணவில்லை!
கொஞ்சம் அதிகமாய்ப் பேசினர்.
அதுவும் அவனுக்குப் போதவில்லை!
அஜித் எதைத் தொட்டாலும்
துறவி அதை முடித்தார்.
வியப்பில் வேந்தன் தனையே மறந்தான்.
இராப்பொழுதும் ஆனது.
கடமை கருதி இருவரும் பிரிந்தனர்.
ஒருநாள் இருநாளல்லாது ஆறு மாதமாய்த்
தேசாந்திரத் துறவி ஓரிடம் நிலைத்தார்!
வேந்தனுடன் நட்புப் பாலம் அமைத்தார்.
அடிக்கடி நடந்தது விவாத மேடை.
இருவர் நாவிற்கும் ஓடியோடி
நாமகள் களைத்திருப்பாள்
அவர் களைத்திருக்க மாட்டார்.

துறவிக்கும் கடமை அழைத்தது.
ஒரே நட்பிவர் எனக் கொண்டார்.
பிரியாவிடை பெற்றுப் பிரிந்தார்.

கோடைகள் இரண்டு கடந்தன.
அன்றோ துறவி வந்தது
அஜித்துக்கும் தெரியாது!
இன்றோ துறவி வருவது
பாலையின் மணலும் அறிந்தது.
ஊரெங்கும் கோலம் போட்டு
ஊர்வலமாய்க் கூட்டி வந்தான் அஜித்
துறவி நெளிந்தார்.
நட்பின் பெருமை வியந்தார்.
ஈதென பிரமாதம்?
நாளை அரசவை பாரீர்.
இன்று சற்றே ஆறுவீர் என்றான்.

இசையென்றால் இளகுவான் அஜித்
அதிலும் அவள் இசையென்றால் போதும்!
இனிப்பிற் குறைவிலாமல்
திகட்டும் கறையிலாமல்
தித்திப்பு புரண்டோடும் அவளிசையில்!
பாலைக் காற்றின் சுருதி கொண்டே
அவள் தேங்குரலெடுத்துப் பாடுகையில்
மயங்கித் தீபங்கள் அசையா
ரசிப்போர் மனங்களும் அசையா
அவர்தம் தலைமட்டும் அசையும்!

முத்து பிறப்பதும் சிப்பியில் தானே?
தாமரை மலர்வதும் சேற்றில் தானே?
வைரம் வளர்வதும் மண்ணில் தானே?
அவள்தம் பிறப்பும் அப்படித் தானே!

இரவு விருந்தில் அரசன் பாடினான்
அவள் புகழை.
துறவி மீண்டும் நெளிந்தார்.
நாளை அரசவை
தாசியின் தரவாலும் துறவியின் வரவாலும்
சிறக்கும் என்றான்.
துறவிக்கு ஈது அடுக்காது என்றார்!
தரும விரோதமென்றார்.
நட்புக்காய் வரவேண்டும் என்றான்.
காலுக்கும் அரை மனதாய்ச் சரியென்றார்.

அந்தப்புரக் காவலர் மூலம்
இச்சேதி கேட்டாள் இசையரசி.
தன்குலங் கருதி கண்ணீர் சுரந்தாள்.
ஒருசொட்டும் வழியாது
கண்ணிலே நிறுத்திக் கொண்டாள்!
மிடக்கிட்டு விழுங்கினாள்!
நாமகளைக் கரந்தொழுதாள்.
சூர்தாசன் ஏடொன்றைப் புரட்டினாள்.
அகமதன் மலர்ச்சி முகத்திலும் கொண்டு
நிம்மதியாய்க் கண்ணயர்ந்தாள்.

காலை விடிந்தது.
அரசவை நிறைந்தது.
மன்னனுக்கும் துறவிக்கும்
கூட்டினர் கட்டியம்.
துறவி தன்நிலையால் நிலையின்றிக்
கண்குனிந்திருந்தார்.

கச்சேரி துவங்கிற்று.
ஆலாபனை துவங்கினாள்.
சொல்லிலாக் கீதத்தில்
சொல்லவொணா மயக்கத்தில்
அரசவை ரசித்திருத்த வேளையில்
இராசபுதனன் அரசவையில்
மாசிலாத் துறவிமுன்னே
மக்கள் நிறைந்திருக்க‌
நெஞ்சில் நிறைவோடு
ஞானவேந்தன் சூர்தாசன்
பாடலைப் பாடினாள்.

ஓ! இறைவா!
நன்மை தீமை நீயும் பார்ப்பாயோ?
நீர் அறியுமோ சாக்கடை கங்கையென்றே?
கொல்லன் அறிவானோ
இருப்புக்கோ அறுப்புக்கோ என்று?
உரைகல் அறியுமோ பொன்னின் பெருமை?
நீ அறிவாய் அனைத்தும் ஒன்றென்றே!
சமநிலையில் நீயின்றேல் நானெங்கே?

ஞான ராகம் இசைத்தே மெய்மறந்தாள்!
பாடல் முடிந்ததும் கண்கள் திறந்தாள்!
கைகுவித்து முன்னே நின்றிருந்தார் துறவி!
அம்மா மாதரசி! தேவ‌இசைக் கலையரசி!
கலைகள் யாவும் ஏதேதோ கற்றறிந்தேன்.
ஞானம் ஈதென்று இன்றுதான் அறிந்தேன்!
எம்மை வாழ்த்தி எனக்கும் அருள்வாயாக
என்றே துணிந்து வணங்கி நின்றார்!

பணிந்த துறவியின் பெருமை கண்டு
அகத்தில் மகிழ்ந்து புறத்தில் ஆங்கே
கலைமகள் கண்களில் வழிந்தது கண்ணீர்!
பாரதப் புதல்வனைத் திருத்திய கண்ணீர்
அஃது ஆனந்தக் கண்ணீர்!

துறவியின் பெயரோ நரேந்திரன்
பின்னாளில் அவரே விவேகானந்தன்!
இந்நிகழ்வு நடந்தது ஆண்டு 1893ல்.

அஜித் சிங்
படம்

துறவி
படம்

நிகழ்வு பற்றிய ஆதாரத் தகவு: http://en.wikipedia.org/wiki/Ajit_Singh_of_Khetri

ஞாயிறு, ஜனவரி 05, 2014

மாயப்பன் விளையாடல்

அந்தவனம் ஒரு நந்தவனம்.
ஆமாம்! வந்து பார்த்தால்
அதுதான் நந்தன் வனம்.
நந்தகோபன் சொந்த வனம்.
பால்மணம் கமழும் ஆயர்பாடியில்
பால்மணம் மாறா பச்சிளவனாய்
பால்மனம் மய‌க்கும் சியாமளன்
நூற்கடற் போற்றும் நேசனவன்
பாற்கடற் பள்ளி வாசனவன்
முக்காலுந் தான‌றிந்த ராசனவன்
முக்காலில் உலகளந்த வேசனவன்
முக்காலியில் கட்டுப் பட்டபடி
நின்றால் தட்டுத் தள்ளாடி
தவழ்ந்தால் பிடிகை படாதபடி
மூவரில் இடையனே இடையனாய்க்
கோபாலன் வலமாய் வந்தபின்னே
மத்து பிடித்த கைக்காரி
ஆயர் நாட்டரசி யசோதை
அவனைக் கொண்ட நாள்முதலாய்
ஒருவேளை பார்க்க முடிந்ததா?
ஒருவேலை பார்க்க முடிந்ததா?
இல்லையே!?
எந்நாளும் அவனால் தொல்லையே!
அச்சச்சோ!
தாயே! அம்மா! யசோதா!
அங்கே பார்! உன்மகனை!
மண்ணள்ளி வாயில் அப்பி
கபளீகரம் செய்கின்றானே!
முன்பே அவன் கருப்பன்
எங்கண் திருட்டி படுமென்றே
இதோ முகமெலாம் மண்ணாக்கி
க‌ருகருப்பன் ஆகி விட்டானே!
என்னவென்று கேட்க‌ மாட்டாயோ?
ஓடிவந்து மூச்சிரைக்கப் பதறினர்
என்றுங் கோபியாக் கோபியர்!
விடுவாளா அன்னை யசோதை?
உன்மகனை என்றவர் சொல்லிய‌
வாய் மூடு முன்னே நந்த‌
வனமேகி மாதவன் முன்நின்றாள்!

பால்வேண்டு மென்றாலோ உனக்கெனப்
பாலாறு தந்திடேனோ?
மோர்வேண்டு மென்றாலோ மொண்டெடுத்து
ஜோராகத் தந்திடேனோ?
கெட்டித்தயிர் வேணுமாயின் கத்தியால்
வெட்டித்தான் தந்திடேனோ?
வெண்ணெய் பிடிக்குமென்றால் உறியிறக்கி
எண்ணம்போல் தந்திடேனோ?
மண்ணைப் போய்த் தின்பாயோ?
பொன்னுடல் தான் தாங்கிடுமோ?
பிள்ளை வளர்த்தறியாப் பேதைக்குப்
பிள்ளை எதற்கென‌ உலகம் ஏசாதோ?
ஒருநொடியில் கண்ணீர்ப் பெருக்கெடுத்து
அருவியெனக் கொட்டிப் பதைக்க‌
ஆவென‌ வாயைத் திறந்து
மண்ணெங்கே காட்டு!
மண்ணெங்கே காட்டு!
மண்ணெங்கே காட்டு!
என்றாள் வானோர் தவத்தினும்
மேலாய்த் தவஞ்செய் மாதரசி
கேசவனோ கொஞ்சமாய்ச் சிரித்தான்!
திருட்டுத் தனமாய் மாட்டேனென்றே
இடம்வலமாய்த் தலையசைத்தான்!
சிரித்தாள்; அதட்டினாள்; கெஞ்சினாள்;
கொஞ்சினாள்; அழுதாள்; தழுவினாள்
மேவாய் தொடும் புண்ணியத்தால்
பாவமெலாம் போக்கி என்புருக‌
வாய்திறக்க மாட்டாயோ என்றாள்!
இனியிவள் தன்னை விடமாட்டாள்
என்றுதான் நினைத்தானோ அன்றி
நாடு அகம் காட்டும் மனங்கொண்டு
நாடகந்தான் துவக்க நினைத்தானோ?!
ஒருகணம் அவள்கண்ணோடு கண்சேர்த்தான்!
ஊனக்கண் போக்கி ஞானக் கண்சேர்த்தான்!
பின் மெல்லமாய் வெல்ல வாய்திறந்தான்!

படம்

என்ன கண்டாள்? எதைக் கண்டாள்?
எல்லாம் கண்டாள்!
காணாதது எல்லாந் தான் கண்டாள்!
மண்கண்டாள்; மலைகண்டாள்;
மடுகண்டாள்;
ஞாயிறொடு திங்களும் செவ்வாய்
புதனொடு வியாழனும் வெள்ளியொடு
சனியும் தான் கண்டாள்!
இதுபோல் ஆயிரமாயிரங் கோடி
கண்டு களித்தாள்!
கண்டு களைத்தாள்!
உள்ளின்று அசையும் லோகத்திலெலாம்
ஒரு கண்ணன் வாய்திறக்க‌
அதை யசோதை ஒருத்தி
கண்டு வியக்கப்
புதிது புதிதாய்
நிறை வாய் விரிந்து
நிறைவாய் நிறைந்து
ம‌ண்டி இருக்கக் கண்டாள்!
அவனவன் வாய்க்குள்ளும் கோடானுகோடி
லோகங்கள் தெரிந்திருக்கக்
கல்லெனச் சமைந்து விட்டாள்.

கண்ணா! ஈதென்ன காட்சி?
என்னதவம் செய்தேன் யான்?
ஆண்டாண்டு பசித்தவன்
விருந்தைப் புசித்து போல்
நூலேதுங் கல்லா மூடனவன்
அறிவுக்கரை கண்டது போல்
பாலைவனத் தாகங் கொண்டவன்
சோலைவனத் தடாகங் கண்டதுபோல்
கண்ணிலாக் குருடன்
விண்ணிலா கண்டது போல்
புழுவினுங் கீழாகுந்
தகுதியிலா அடியேளுக்கு
முடிவிலாப் பரம்பொருளாய்க்
காட்சி தந்தால் என்செய்வேன்?!
என்றபடி யசோதை ஆனாள்சிலை!

அம்மா வயிறு பார்த்திடா அநாதியன்
அம் மாவயிறு பார்த்திடா ஆதியன்
யசோதை தோள்பற்றி அன்புடன்
அம்மா வென்றான்!

அன்றொரு நாள் நான்
மனிதனாய்ப் பிறப்பெடுத்தேன்!
உறுபசி கொண்டு கானகத்தில்
தம்பியொடும் மண்மகளோடும்
அலைந்து களைத்திருந்தேன்!
பொறுக்கிய கனிதனில்
இனிக்கின்ற கனிகாண‌
எச்சில்படுத்தி எச்சில்படுத்தி
எமக்குநீ தந்தனை!
அன்பெச்சில் கலந்ததையே
கனியினிக்குங் காரணமாய்க்
கண்டேன் யான்!

அன்று என்வாயில் நானுண்ட‌
கனிமாட்சி
இன்று என்வாயில் நீகண்ட‌
திருக்காட்சி
பெரிதினும் பெரிதாய்க் காட்டிடும்
எந்தன் விசுவரூபமும்
தாயன்பின் முன்னால்
சிறிதினும் சிறிதாய்க் கூட்டிடும்
மெய்வழி காட்டினேன்
என்றான் மாயப்பன்!
அறிய அரிதாய்
உணர எளிதாய்
இருக்கும் ஓரப்பன்!

புதன், ஜனவரி 01, 2014

வேலப்பன் விளையாடல்!

படம்

பழம்பெருங் கதைதனிலே யாவரும் மகிழும்
பழம்பெறுங் கதையொன்று இங்கு தானுண்டு
பழம்பெறும் நாயகன் பழம்மட்டும் பெற்றான்
பழம்பெரும் நாயகன் குன்றெலாம் பெற்றான்
மற்றவையும் மற்றும் யாவையும் ஆட்டுவிக்கப்
பெற்றவர்; பெற்றவர் பெருமை காட்டுவித்து
அண்டமும் பிண்டமும் சரிசரி சமமென்று
கண்டமின்றிக் காட்டிட நடந்ததாம் ஆட்டம்
அப்பனுக்கு அப்பழுக்கிலாப் பாடஞ் சொன்ன‌
சுப்பனுக்கு அப்பழக்கதை தெரியாதா என்ன?
குப்பனுக்கும் தெரியவே கிளம்பினான் மயிலேறி!
விடையேறியும் அரியேறியும் அகமகிழ எலியேறி
குடுகுடுவென எளிதாய் வலம்வரு நொடிய‌ளவில்
இதுகாறும் பிறந்த சராசர முதலாய்
இன்னமும் பிறவா சராசர முடிவாய்
வேலப்பன் வலம்வ‌ந்தான்! கணேசன் வாய்க்குள்
பதவிசாய்ச் சென்ற பழமெங்கே என்றான்!
உழைப்புக் கென்றும் மதிப்பேது? என்றான்!
சினந்தான்! முனிந்தான்!
எதுவும் வேண்டாம் எனக்கே என்றான்
பக்கத்தில் யாரும் வந்தால் விரட்டவே
கக்கத்தில் தண்டொன்றும் தயாராய்க் கொண்டான்!
ஞானம் சினந்தால் ஞாலம் தாங்குமா?
தமிழ்தான் பார்த்துச் சும்மா தூங்குமா?
ஔவை வந்தனள் சமரசம் பாட‌
எதுஎவிடம் சேருமோ அதுஅவிடம் சேரும்!
அறியா தோர்க்குச் சொல்லி விளக்கலாம்
அறிவா னோர்க்குச் சொல்லவும் வேண்டுமோ?
மெய்கீர்த்தி அவ்வற்பப் பழத்திலா உண்டு?
பழமே நீயான உனக்கேன் ஞானப்பழம்?
சுப்பனுக்கே பாடஞ் சொன்னாள் ஔவை!
ஞாலப்பன் காலப்பன் கோலப்பன் வேலப்பன்
அருட்பார்வை கொண்டான் ஔவை மகிழ்ந்தாள்!
என்னை நீயும் அறியவிலையே பாட்டி
சுட்டபழம் வேணுமோ சுடாதபழம் வேணுமோ
என்றோர் நாளுனைக் கேட்டேன் அல்லவா?
அவ்வினைக்கே இவ்வினை செய்தேன் பாரென்றான்!
அன்றோ உன்னைப் பழத்தால் ஏமாற்றினேன்!
இன்றோ நானும் பழத்தால் ஏமாற்றினேன்!
பழக்கணக்கும் பழங்கணக்கும் தீர்ந்தது காணென்றான்!
ஔவைக்கும் புரிந்தது குமரப்பன் விளையாடல்!