வியாழன், ஜனவரி 23, 2014

ஆனந்தக் கண்ணீர்!

ஆனந்தக் கண்ணீர்!

நகர்ந்து பரவும் பூதக் குன்றுகள்
சுழித்து வீசும் காற்றின் அரவம்
பகலில் வெப்பம் இரவில் நடுக்கம்
என்றும் காண்பது அங்கே உச்சம்

மணலாட்சி செய்யும் பாலை சூழ‌
இராசபுதன இராசர் வழிவழி ஆளக்
குணமாட்சி செய்யும் அரசின் கீழாய்ச்
சிறந்த கேத்ரி நாடே நாடென்பர்

எட்டா ராஜ்ஜியத்தின் எட்டாவது அரசன்
அஜித்சிங்.
அசைக்க முடியாப் பெயருடையோன்
அசைந்து கொடுக்கும் மனமுடையோன்
இசையில் மயங்கும் குணமுடையோன்
கல்வி கேள்வியிற் சிறப்புடையோன்
உயர்ந்தோர் மதிக்கும் பண்புடையோன்

அன்றொருநாள்;
கொளுத்திய வெயில் மங்கிய‌ மாலை;
பிரதாப சிங்கெனும் ஜோத்பூர் இராசனுடன்
அரைமணிப் பேட்டி கண்டான்.
இடையில் வந்தது சீட்டொன்று.
துறவி வந்துளார் காணவென்று.
பொறுக்கச் சொன்னான்!
அவரும் பொறுத்தார்.
பேட்டி முடிந்திற்று. அழைத்தான் துறவியை.
துறவியும் வேந்தனும் சிறிதாய்ப் பேசினர்.
அஜித்துக்கு அது காணவில்லை!
கொஞ்சம் அதிகமாய்ப் பேசினர்.
அதுவும் அவனுக்குப் போதவில்லை!
அஜித் எதைத் தொட்டாலும்
துறவி அதை முடித்தார்.
வியப்பில் வேந்தன் தனையே மறந்தான்.
இராப்பொழுதும் ஆனது.
கடமை கருதி இருவரும் பிரிந்தனர்.
ஒருநாள் இருநாளல்லாது ஆறு மாதமாய்த்
தேசாந்திரத் துறவி ஓரிடம் நிலைத்தார்!
வேந்தனுடன் நட்புப் பாலம் அமைத்தார்.
அடிக்கடி நடந்தது விவாத மேடை.
இருவர் நாவிற்கும் ஓடியோடி
நாமகள் களைத்திருப்பாள்
அவர் களைத்திருக்க மாட்டார்.

துறவிக்கும் கடமை அழைத்தது.
ஒரே நட்பிவர் எனக் கொண்டார்.
பிரியாவிடை பெற்றுப் பிரிந்தார்.

கோடைகள் இரண்டு கடந்தன.
அன்றோ துறவி வந்தது
அஜித்துக்கும் தெரியாது!
இன்றோ துறவி வருவது
பாலையின் மணலும் அறிந்தது.
ஊரெங்கும் கோலம் போட்டு
ஊர்வலமாய்க் கூட்டி வந்தான் அஜித்
துறவி நெளிந்தார்.
நட்பின் பெருமை வியந்தார்.
ஈதென பிரமாதம்?
நாளை அரசவை பாரீர்.
இன்று சற்றே ஆறுவீர் என்றான்.

இசையென்றால் இளகுவான் அஜித்
அதிலும் அவள் இசையென்றால் போதும்!
இனிப்பிற் குறைவிலாமல்
திகட்டும் கறையிலாமல்
தித்திப்பு புரண்டோடும் அவளிசையில்!
பாலைக் காற்றின் சுருதி கொண்டே
அவள் தேங்குரலெடுத்துப் பாடுகையில்
மயங்கித் தீபங்கள் அசையா
ரசிப்போர் மனங்களும் அசையா
அவர்தம் தலைமட்டும் அசையும்!

முத்து பிறப்பதும் சிப்பியில் தானே?
தாமரை மலர்வதும் சேற்றில் தானே?
வைரம் வளர்வதும் மண்ணில் தானே?
அவள்தம் பிறப்பும் அப்படித் தானே!

இரவு விருந்தில் அரசன் பாடினான்
அவள் புகழை.
துறவி மீண்டும் நெளிந்தார்.
நாளை அரசவை
தாசியின் தரவாலும் துறவியின் வரவாலும்
சிறக்கும் என்றான்.
துறவிக்கு ஈது அடுக்காது என்றார்!
தரும விரோதமென்றார்.
நட்புக்காய் வரவேண்டும் என்றான்.
காலுக்கும் அரை மனதாய்ச் சரியென்றார்.

அந்தப்புரக் காவலர் மூலம்
இச்சேதி கேட்டாள் இசையரசி.
தன்குலங் கருதி கண்ணீர் சுரந்தாள்.
ஒருசொட்டும் வழியாது
கண்ணிலே நிறுத்திக் கொண்டாள்!
மிடக்கிட்டு விழுங்கினாள்!
நாமகளைக் கரந்தொழுதாள்.
சூர்தாசன் ஏடொன்றைப் புரட்டினாள்.
அகமதன் மலர்ச்சி முகத்திலும் கொண்டு
நிம்மதியாய்க் கண்ணயர்ந்தாள்.

காலை விடிந்தது.
அரசவை நிறைந்தது.
மன்னனுக்கும் துறவிக்கும்
கூட்டினர் கட்டியம்.
துறவி தன்நிலையால் நிலையின்றிக்
கண்குனிந்திருந்தார்.

கச்சேரி துவங்கிற்று.
ஆலாபனை துவங்கினாள்.
சொல்லிலாக் கீதத்தில்
சொல்லவொணா மயக்கத்தில்
அரசவை ரசித்திருத்த வேளையில்
இராசபுதனன் அரசவையில்
மாசிலாத் துறவிமுன்னே
மக்கள் நிறைந்திருக்க‌
நெஞ்சில் நிறைவோடு
ஞானவேந்தன் சூர்தாசன்
பாடலைப் பாடினாள்.

ஓ! இறைவா!
நன்மை தீமை நீயும் பார்ப்பாயோ?
நீர் அறியுமோ சாக்கடை கங்கையென்றே?
கொல்லன் அறிவானோ
இருப்புக்கோ அறுப்புக்கோ என்று?
உரைகல் அறியுமோ பொன்னின் பெருமை?
நீ அறிவாய் அனைத்தும் ஒன்றென்றே!
சமநிலையில் நீயின்றேல் நானெங்கே?

ஞான ராகம் இசைத்தே மெய்மறந்தாள்!
பாடல் முடிந்ததும் கண்கள் திறந்தாள்!
கைகுவித்து முன்னே நின்றிருந்தார் துறவி!
அம்மா மாதரசி! தேவ‌இசைக் கலையரசி!
கலைகள் யாவும் ஏதேதோ கற்றறிந்தேன்.
ஞானம் ஈதென்று இன்றுதான் அறிந்தேன்!
எம்மை வாழ்த்தி எனக்கும் அருள்வாயாக
என்றே துணிந்து வணங்கி நின்றார்!

பணிந்த துறவியின் பெருமை கண்டு
அகத்தில் மகிழ்ந்து புறத்தில் ஆங்கே
கலைமகள் கண்களில் வழிந்தது கண்ணீர்!
பாரதப் புதல்வனைத் திருத்திய கண்ணீர்
அஃது ஆனந்தக் கண்ணீர்!

துறவியின் பெயரோ நரேந்திரன்
பின்னாளில் அவரே விவேகானந்தன்!
இந்நிகழ்வு நடந்தது ஆண்டு 1893ல்.

அஜித் சிங்
படம்

துறவி
படம்

நிகழ்வு பற்றிய ஆதாரத் தகவு: http://en.wikipedia.org/wiki/Ajit_Singh_of_Khetri

2 கருத்துகள்:

  1. சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 24, 2014 7:34 AM

    வணக்கம்
    நல்ல கருத்தாடல் மிக்க வரிகள்.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு