புதன், ஜனவரி 01, 2014

வேலப்பன் விளையாடல்!

படம்

பழம்பெருங் கதைதனிலே யாவரும் மகிழும்
பழம்பெறுங் கதையொன்று இங்கு தானுண்டு
பழம்பெறும் நாயகன் பழம்மட்டும் பெற்றான்
பழம்பெரும் நாயகன் குன்றெலாம் பெற்றான்
மற்றவையும் மற்றும் யாவையும் ஆட்டுவிக்கப்
பெற்றவர்; பெற்றவர் பெருமை காட்டுவித்து
அண்டமும் பிண்டமும் சரிசரி சமமென்று
கண்டமின்றிக் காட்டிட நடந்ததாம் ஆட்டம்
அப்பனுக்கு அப்பழுக்கிலாப் பாடஞ் சொன்ன‌
சுப்பனுக்கு அப்பழக்கதை தெரியாதா என்ன?
குப்பனுக்கும் தெரியவே கிளம்பினான் மயிலேறி!
விடையேறியும் அரியேறியும் அகமகிழ எலியேறி
குடுகுடுவென எளிதாய் வலம்வரு நொடிய‌ளவில்
இதுகாறும் பிறந்த சராசர முதலாய்
இன்னமும் பிறவா சராசர முடிவாய்
வேலப்பன் வலம்வ‌ந்தான்! கணேசன் வாய்க்குள்
பதவிசாய்ச் சென்ற பழமெங்கே என்றான்!
உழைப்புக் கென்றும் மதிப்பேது? என்றான்!
சினந்தான்! முனிந்தான்!
எதுவும் வேண்டாம் எனக்கே என்றான்
பக்கத்தில் யாரும் வந்தால் விரட்டவே
கக்கத்தில் தண்டொன்றும் தயாராய்க் கொண்டான்!
ஞானம் சினந்தால் ஞாலம் தாங்குமா?
தமிழ்தான் பார்த்துச் சும்மா தூங்குமா?
ஔவை வந்தனள் சமரசம் பாட‌
எதுஎவிடம் சேருமோ அதுஅவிடம் சேரும்!
அறியா தோர்க்குச் சொல்லி விளக்கலாம்
அறிவா னோர்க்குச் சொல்லவும் வேண்டுமோ?
மெய்கீர்த்தி அவ்வற்பப் பழத்திலா உண்டு?
பழமே நீயான உனக்கேன் ஞானப்பழம்?
சுப்பனுக்கே பாடஞ் சொன்னாள் ஔவை!
ஞாலப்பன் காலப்பன் கோலப்பன் வேலப்பன்
அருட்பார்வை கொண்டான் ஔவை மகிழ்ந்தாள்!
என்னை நீயும் அறியவிலையே பாட்டி
சுட்டபழம் வேணுமோ சுடாதபழம் வேணுமோ
என்றோர் நாளுனைக் கேட்டேன் அல்லவா?
அவ்வினைக்கே இவ்வினை செய்தேன் பாரென்றான்!
அன்றோ உன்னைப் பழத்தால் ஏமாற்றினேன்!
இன்றோ நானும் பழத்தால் ஏமாற்றினேன்!
பழக்கணக்கும் பழங்கணக்கும் தீர்ந்தது காணென்றான்!
ஔவைக்கும் புரிந்தது குமரப்பன் விளையாடல்!

4 கருத்துகள்:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு