ஞாயிறு, ஜனவரி 05, 2014

மாயப்பன் விளையாடல்

அந்தவனம் ஒரு நந்தவனம்.
ஆமாம்! வந்து பார்த்தால்
அதுதான் நந்தன் வனம்.
நந்தகோபன் சொந்த வனம்.
பால்மணம் கமழும் ஆயர்பாடியில்
பால்மணம் மாறா பச்சிளவனாய்
பால்மனம் மய‌க்கும் சியாமளன்
நூற்கடற் போற்றும் நேசனவன்
பாற்கடற் பள்ளி வாசனவன்
முக்காலுந் தான‌றிந்த ராசனவன்
முக்காலில் உலகளந்த வேசனவன்
முக்காலியில் கட்டுப் பட்டபடி
நின்றால் தட்டுத் தள்ளாடி
தவழ்ந்தால் பிடிகை படாதபடி
மூவரில் இடையனே இடையனாய்க்
கோபாலன் வலமாய் வந்தபின்னே
மத்து பிடித்த கைக்காரி
ஆயர் நாட்டரசி யசோதை
அவனைக் கொண்ட நாள்முதலாய்
ஒருவேளை பார்க்க முடிந்ததா?
ஒருவேலை பார்க்க முடிந்ததா?
இல்லையே!?
எந்நாளும் அவனால் தொல்லையே!
அச்சச்சோ!
தாயே! அம்மா! யசோதா!
அங்கே பார்! உன்மகனை!
மண்ணள்ளி வாயில் அப்பி
கபளீகரம் செய்கின்றானே!
முன்பே அவன் கருப்பன்
எங்கண் திருட்டி படுமென்றே
இதோ முகமெலாம் மண்ணாக்கி
க‌ருகருப்பன் ஆகி விட்டானே!
என்னவென்று கேட்க‌ மாட்டாயோ?
ஓடிவந்து மூச்சிரைக்கப் பதறினர்
என்றுங் கோபியாக் கோபியர்!
விடுவாளா அன்னை யசோதை?
உன்மகனை என்றவர் சொல்லிய‌
வாய் மூடு முன்னே நந்த‌
வனமேகி மாதவன் முன்நின்றாள்!

பால்வேண்டு மென்றாலோ உனக்கெனப்
பாலாறு தந்திடேனோ?
மோர்வேண்டு மென்றாலோ மொண்டெடுத்து
ஜோராகத் தந்திடேனோ?
கெட்டித்தயிர் வேணுமாயின் கத்தியால்
வெட்டித்தான் தந்திடேனோ?
வெண்ணெய் பிடிக்குமென்றால் உறியிறக்கி
எண்ணம்போல் தந்திடேனோ?
மண்ணைப் போய்த் தின்பாயோ?
பொன்னுடல் தான் தாங்கிடுமோ?
பிள்ளை வளர்த்தறியாப் பேதைக்குப்
பிள்ளை எதற்கென‌ உலகம் ஏசாதோ?
ஒருநொடியில் கண்ணீர்ப் பெருக்கெடுத்து
அருவியெனக் கொட்டிப் பதைக்க‌
ஆவென‌ வாயைத் திறந்து
மண்ணெங்கே காட்டு!
மண்ணெங்கே காட்டு!
மண்ணெங்கே காட்டு!
என்றாள் வானோர் தவத்தினும்
மேலாய்த் தவஞ்செய் மாதரசி
கேசவனோ கொஞ்சமாய்ச் சிரித்தான்!
திருட்டுத் தனமாய் மாட்டேனென்றே
இடம்வலமாய்த் தலையசைத்தான்!
சிரித்தாள்; அதட்டினாள்; கெஞ்சினாள்;
கொஞ்சினாள்; அழுதாள்; தழுவினாள்
மேவாய் தொடும் புண்ணியத்தால்
பாவமெலாம் போக்கி என்புருக‌
வாய்திறக்க மாட்டாயோ என்றாள்!
இனியிவள் தன்னை விடமாட்டாள்
என்றுதான் நினைத்தானோ அன்றி
நாடு அகம் காட்டும் மனங்கொண்டு
நாடகந்தான் துவக்க நினைத்தானோ?!
ஒருகணம் அவள்கண்ணோடு கண்சேர்த்தான்!
ஊனக்கண் போக்கி ஞானக் கண்சேர்த்தான்!
பின் மெல்லமாய் வெல்ல வாய்திறந்தான்!

படம்

என்ன கண்டாள்? எதைக் கண்டாள்?
எல்லாம் கண்டாள்!
காணாதது எல்லாந் தான் கண்டாள்!
மண்கண்டாள்; மலைகண்டாள்;
மடுகண்டாள்;
ஞாயிறொடு திங்களும் செவ்வாய்
புதனொடு வியாழனும் வெள்ளியொடு
சனியும் தான் கண்டாள்!
இதுபோல் ஆயிரமாயிரங் கோடி
கண்டு களித்தாள்!
கண்டு களைத்தாள்!
உள்ளின்று அசையும் லோகத்திலெலாம்
ஒரு கண்ணன் வாய்திறக்க‌
அதை யசோதை ஒருத்தி
கண்டு வியக்கப்
புதிது புதிதாய்
நிறை வாய் விரிந்து
நிறைவாய் நிறைந்து
ம‌ண்டி இருக்கக் கண்டாள்!
அவனவன் வாய்க்குள்ளும் கோடானுகோடி
லோகங்கள் தெரிந்திருக்கக்
கல்லெனச் சமைந்து விட்டாள்.

கண்ணா! ஈதென்ன காட்சி?
என்னதவம் செய்தேன் யான்?
ஆண்டாண்டு பசித்தவன்
விருந்தைப் புசித்து போல்
நூலேதுங் கல்லா மூடனவன்
அறிவுக்கரை கண்டது போல்
பாலைவனத் தாகங் கொண்டவன்
சோலைவனத் தடாகங் கண்டதுபோல்
கண்ணிலாக் குருடன்
விண்ணிலா கண்டது போல்
புழுவினுங் கீழாகுந்
தகுதியிலா அடியேளுக்கு
முடிவிலாப் பரம்பொருளாய்க்
காட்சி தந்தால் என்செய்வேன்?!
என்றபடி யசோதை ஆனாள்சிலை!

அம்மா வயிறு பார்த்திடா அநாதியன்
அம் மாவயிறு பார்த்திடா ஆதியன்
யசோதை தோள்பற்றி அன்புடன்
அம்மா வென்றான்!

அன்றொரு நாள் நான்
மனிதனாய்ப் பிறப்பெடுத்தேன்!
உறுபசி கொண்டு கானகத்தில்
தம்பியொடும் மண்மகளோடும்
அலைந்து களைத்திருந்தேன்!
பொறுக்கிய கனிதனில்
இனிக்கின்ற கனிகாண‌
எச்சில்படுத்தி எச்சில்படுத்தி
எமக்குநீ தந்தனை!
அன்பெச்சில் கலந்ததையே
கனியினிக்குங் காரணமாய்க்
கண்டேன் யான்!

அன்று என்வாயில் நானுண்ட‌
கனிமாட்சி
இன்று என்வாயில் நீகண்ட‌
திருக்காட்சி
பெரிதினும் பெரிதாய்க் காட்டிடும்
எந்தன் விசுவரூபமும்
தாயன்பின் முன்னால்
சிறிதினும் சிறிதாய்க் கூட்டிடும்
மெய்வழி காட்டினேன்
என்றான் மாயப்பன்!
அறிய அரிதாய்
உணர எளிதாய்
இருக்கும் ஓரப்பன்!

1 கருத்து: