வெள்ளி, ஏப்ரல் 01, 2016

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும் - 3

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும் - 3
அடுத்ததாக நமது பகுதியிலுள்ள ஊரைப் பற்றிப் பாடிய அருணகிரிநாதர் எவ்வாறெல்லாம் தமது உத்தியைக் கையாண்டிருக்கின்றார் என்று காண்போம்.

நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித சாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இந்தத் திருப்புகழ் பாடல் பல வகைகளில் மிகச் சிறந்தது. பக்தி நிலை, சந்தத்தமிழ் பிரவாகம், சொற்சுவை, பொருட்சுவை, நயங்கள், எடுப்பு, தொடுப்பு இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

முதல் நான்கு வரிகளில் முருகன் புகழ் பாடும் அருணகிரிநாதர் தமது வழக்கமான ஹைபர்லிங்க் உத்தியை ஐந்தாவது வரியிலிருந்து எட்டாவது வரி வரை கையாண்டு பிரமிக்க வைக்கின்றார்.

ஒரு நாடு என்பது எவ்வாறிருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் வரிகளில் ஆரம்பிக்கின்றார். கேட்பவர்க்கெல்லாம் ஈதலும், பல கோலாகல பூஜையும், வேதங்களை ஓதலும், குண ஆசார நீதியும், மக்கள் மனதில் ஈரமும், குருவை மதித்து அவர் தம் சீர்பாத சேவையும் புரிவது தான் ஒரு நல்ல நாடு என்று இலக்கணம் சொல்லும் அருணகிரியார், அவ்வாறு ஏழ் தலமும் புகழ்கின்ற வகையில் இருப்பது காவிரியால் விளைகின்ற சோழ மண்டலம் என்று புவியியலும் தொட்டுத் தொடர்கின்றார்.

அப்படிப்பட்ட சோழ மண்டலத்தில் மனோகர ராஜ கம்பீரத்துடன் நாடாளும் வயலூரில் வீற்றிருக்கும் முருகனைக் காண்கின்றார். அங்கிருந்து திருவாரூர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கதைக்கு ஹைபர்லிங்க் தருகின்றார்! ஆதரம் பயில் ஆரூரர் தோழமை கொண்டு அவரோடு முன்னாளில் அழகான வெள்ளை நிறப் பரியின் (குதிரையின் ) மீதேறி கயிலை சென்று "ஆதிய‌ந்த உலா" எனும் ஆசு கவி பாடியவர் யார்? ஒரே வரியில் பல கதைகள் சொல்லும் வல்லமை அருணகிரியாருக்கு மட்டுமே இருக்க இயலும்!

சைவக் குரவர் நால்வரில் சுந்தர மூர்த்தி அடிகளாருடன் கயிலை சென்று "ஆதியந்த உலா" எனும் நூலியற்றிப் பாடியவர் சேரமான் பெருமான்

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு.

இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரரின் உற்ற நண்பர். சேர நாட்டை ஆண்டவர். சிவனை மறவாத சிந்தையுடையவர். இவர் தினமும் தம்முடைய சிவபூஜையின் முடிவில் நடராஜப் பெருமானாரின் சிலம்பொலி கேட்டு மகிழும் பாக்யம் பெற்றவர். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் சிலம்பொலி கேட்கவில்லை என்பதால் ’இனி உயிரை மாய்த்துக் கொள்வதே தக்கது’ என எண்ணி உடைவாளைத் தம் கழுத்திற்குக் கொண்டு சென்றார்.

அப்போது திடீரென சிலம்பொலி மிகுதியாகக் கேட்டார்.

”தில்லையில் சுந்தரன் நம்மைத் தீந்தமிழில் பாடி வழிபட்டான். அதிலேயே யாம் மூழ்கி விட்ட காரணத்தால் காலதாமதம் ஆயிற்று” என அசரீரியாய் அருளினார் சிவபெருமான்.

அதைக் கேட்ட சேரமான் உடனே தில்லை சென்று நடராஜர் மீது பொன் வண்ணத் தந்தாதி பாடி வணங்கினார். சுந்தரரைச் சந்தித்து அவருடன் நட்பு பூண்டார். திருவாரூர் மும்மணிக்கோவை என்பதும் சேரமான் இயற்றியதே!
சுந்தரரும் சேரமான் பெருமானும் வானுலகம் சென்றனர்.

இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளை யானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் செல்கிறார் சேரமான்

இப்போது எதற்காக சுந்தரரும் சேரமானும் என்று சிந்தித்தால், அங்கே தான் அருணகிரிநாதரின் உத்தி புலப்படும்! சேரமான் பெருமானின் நாடு கொங்கு (கேரளம் + தமிழ்நாட்டின் எல்லைப் பகுதி). அந்த கொங்கு நாட்டில் நமது கோவைக்கு அருகிலிருக்கும் பழனி மலையில் (ஆவினன் குடியில்) வீற்றிருக்கும் முருகனைப் பாடும் வகையில் தான் இத்தனை கதைகளையும் பாடி சோழ மண்டலத்தினின்று கொங்கு மண்டலத்திற்கு ஹைபர்லிங்க் தருகின்றார்!

(தொடரும்)

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்: 2

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்: 2

அருணகிரிநாதர் காலத்தில் அண்ணாமலையை ஆண்ட பிரபுடதேவ மஹாராஜன் சபை. அருணகிரிநாதரின் பெருமை நாடெங்கும் பரவுவது பொறாத சம்பந்தாண்டான் பொறாமையால் பிரபுடதேவ மஹாராஜனைத் தூண்டி விட்டு அருணகிரி நாதருக்குக் கிட்டிய தெய்வ அருளை நிரூபிக்கச் சொல்கின்றான். அருணகிரிநாதரும் முருகனை அழைத்தார். எவ்வாறு அழைத்தும் முருகன் வரவில்லை. கண்மூடி அகக்கண்ணில் கண்ட போது முருகனை தாய் காளி மடியில் உட்கார வைத்து இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது! சம்பந்தாண்டான் ஹோமம் செய்து காளியிடம் முருகனை வரவிடாது செய்யுமாறு வேண்டிக் கொண்டதும் தெரிந்தது.

அப்போது பாடியது தான் இந்தத் திருப்புகழ் பாடல்.

அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே

இப்பாடலில் சொல், பொருள், நயம் அனைத்தும் இனிமை. நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற, ஒவ்வொரு இடமாகத் தொட்டுச் செல்லும் 'ஹைபர்லிங்க்', பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதுமாக‌ இருக்கின்றது!

அதல பாதாளத்தில் இருக்கும் ஆதிசேடன் ஆட, மேலே இருக்கும் மேருவும் ஆட, சிவனின் ஆடல் முத்திரைக்கு ஏற்ற வண்ணம் ஆடிய‌ காளியும் ஆட (காளி ஆட ஆரம்பித்தால் முருகனைப் பிடித்து வைத்திருக்க முடியுமா?!), சிவனும் ஆட, அங்கிருக்கும் பூதக் கணங்களும் ஆட, சரஸ்வதி ஆட, பிரம்மா ஆட, தேவர்கள் யாவரும் ஆட, சந்திரன் ஆட, லட்சுமி ஆட, விஷ்ணு ஆட, மயிலும் ஆட நீயும் ஆடி வர வேண்டும் என்கின்றார் அருணகிரியார். இதில் எத்தனை இணைப்பு இருக்கின்றது என்று பாருங்கள்.

அத்தோடு விட்டாரா? கதாயுதத்தை விடாமல் வைத்திருந்த பீமன் விடும் பாணங்களால் துரியோதனின் சேனைகள் பொடியாக உதவியவரும், கதறும் பசுக்கூட்டத்தை மீட்க உதவியவரும், விஜயனின் தேரோட்டி பாஞ்சசன்யம் எனும் தனது சங்கத்தை ஊதியவரும், அலைமோதுகின்ற பாற்கடலில் (உததி) சாய்பவரும், உலகத்தை மூன்றடிகளால் மூடிய பாதங்களைக் கொண்டவரும், கருடனை (உவணம்) ஊர்தியாகக் கொண்டவருமான மகாமாய விஷ்ணுவின் மருமகனே என்று மீண்டும் விஷ்ணு அவதாரங்களின் மகிமையைத் தொட்டுக் காட்டுகின்றார்.

இறுதியாக, தான் இருப்பது பிரபுடதேவ மஹாராஜன் சபையல்லவா? அதற்கும் தொடர்பு வேண்டுமென்று அன்றலர் மலர் சூடும் பிரபுடதேவ மஹாராஜன் உளமும் ஆட வாழ்கின்ற முருகனே என்று முடிக்கின்றார். இப்பாடலைப் பாடி முடித்ததும் முருகன் பிரத்யட்சமாக பிரபுடதேவ ராஜன் சபையில் காட்சியளித்தான். சம்பந்தாண்டான் வெட்கித் தலைகுனிந்தான்.

எந்த ஒரு தகவல் தொகுப்பையும் மனனம் செய்வதற்கு எளிய வழிமுறையாக ஒன்றைக் கூறுவார்கள். தகவல்களை ஏதேனும் ஒரு வழியில் ஒன்றுக் கொன்று தொடர்பு படுத்தி முதல் தகவலை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் அதன் தொடர்ச்சியாக தகவல் தொகுப்பு முழுவதும் நமக்கு நினைவுக்கு வரும். இப்பாடலில் ஏற்கனவே அருணகிரியார் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதால் இப்பாடலை மனனம் செய்வது மிகவும் எளிதாகும்.

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்...

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்...

ஏதேனும் தகவல் தேவையென்றால் நூலகத்திற்குச் சென்று குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களைத் தேடிப் பிடித்துத் தெரிந்து கொள்ளும் பழக்கம் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கொழிந்து விடக்கூடும். பூகோளமே இன்று கூகுளுக்குள் தான் எனுமளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முந்திய தமிழ் விதி இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இன்றைய இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆணிவேராக இருப்பது இணையம் என்றால் அந்த இணையம் முழுதும் துளிர் விட்டுப் பரவி இருக்கும் இலைகளாக ஹைபர்லிங்க் எனப்படும் மீத்தொடுப்புகளைச் சொல்லலாம்.

ஒரு தகவலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அது தொடர்பான அல்லது தொடர்பேதும் இல்லாத மற்றொரு தகவலுக்கு நாம் செல்வதற்கு ஆதாரமாக இருப்பது இந்த ஹைபர்லிங்க். Linear எனும் ஆங்கிலச் சொல்லுக்கு எதிர்ச்சொல் hyper. நேரியல்பான அல்லது வரிசைக்கிரமமாக வாசிக்காமல் நம்மை அங்கும் இங்கும் தாவித் தாவிப் படிக்க வைப்பதால் தான் அது ஹைபர்லிங்க் எனப்படுகின்றது.

இந்த ஹைபர்லிங்க் சமாச்சாரம் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல!

அக்காலத்திலேயே நமது தமிழ் இலக்கியங்களில் இந்த ஹைபர்லிங்க் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக திருப்புகழில் ஹைபர்லிங்க் முறையை அருணகிரிநாதர் பல இடங்களில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். சொல்லப்போனால் இதுவே அவரது பாணி (ஸ்டைல்) என்று கூடக் கூறலாம்.

'முத்தைத்தரு பத்தித்திருநகை' என்று முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் பாடத்துவங்கிய முதல் பாடலிலேயே இந்த ஹைபர்லிங்க் வருவதைக் காணலாம்.

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

முதலிரண்டு வரிகளில் முருகன் ஓம் என்ற பிரணவத்தின் பொருளை சிவனுக்கு உபதேசித்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹைபர்லிங்க் ஆக அடுத்தடுத்த வரிகளில் விஷ்ணுவின் அவதாரங்களை அடுக்குகின்றார். 'பத்துத்தலை தத்தக் கணைதொடு' என்று இராமாயணத்தில் இருந்து ஹைபர்லிங்க் கொடுத்து 'ஒற்றைக்கிரி மத்தைப் பொருது' என்று மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து விட்டு 'பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல்' என்று பட்டப்பகலில் சூரியனைச் சக்கரத்தால் மறைத்த மகாபாரதக் காட்சியையும் தொட்டு அர்ச்சுனருக்குத் தேரோட்டிய பச்சைப்புயல் என்று வருணிக்கும் போது ஓ! இது வைஷ்ணவ இலக்கியமோ என்று நாம் நினைக்கின்ற போதிலேயே அப்பேர்ப்பட்ட விஷ்ணுவே மெச்சும்படியான பொருளே என்று முருகன் எனும் ஹோம்பேஜில் வந்து நிற்கின்றார்! அடுத்தடுத்த வரிகளில் கோரமான சூரபத்மனை வதைக்கும் போர்க்காட்சியையும் காட்டி ஒரே பாடலில் பல இணையப்பக்கங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தைத் தருகின்றார்.