வெள்ளி, ஏப்ரல் 01, 2016

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்...

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்...

ஏதேனும் தகவல் தேவையென்றால் நூலகத்திற்குச் சென்று குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களைத் தேடிப் பிடித்துத் தெரிந்து கொள்ளும் பழக்கம் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கொழிந்து விடக்கூடும். பூகோளமே இன்று கூகுளுக்குள் தான் எனுமளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முந்திய தமிழ் விதி இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இன்றைய இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆணிவேராக இருப்பது இணையம் என்றால் அந்த இணையம் முழுதும் துளிர் விட்டுப் பரவி இருக்கும் இலைகளாக ஹைபர்லிங்க் எனப்படும் மீத்தொடுப்புகளைச் சொல்லலாம்.

ஒரு தகவலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அது தொடர்பான அல்லது தொடர்பேதும் இல்லாத மற்றொரு தகவலுக்கு நாம் செல்வதற்கு ஆதாரமாக இருப்பது இந்த ஹைபர்லிங்க். Linear எனும் ஆங்கிலச் சொல்லுக்கு எதிர்ச்சொல் hyper. நேரியல்பான அல்லது வரிசைக்கிரமமாக வாசிக்காமல் நம்மை அங்கும் இங்கும் தாவித் தாவிப் படிக்க வைப்பதால் தான் அது ஹைபர்லிங்க் எனப்படுகின்றது.

இந்த ஹைபர்லிங்க் சமாச்சாரம் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல!

அக்காலத்திலேயே நமது தமிழ் இலக்கியங்களில் இந்த ஹைபர்லிங்க் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக திருப்புகழில் ஹைபர்லிங்க் முறையை அருணகிரிநாதர் பல இடங்களில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். சொல்லப்போனால் இதுவே அவரது பாணி (ஸ்டைல்) என்று கூடக் கூறலாம்.

'முத்தைத்தரு பத்தித்திருநகை' என்று முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் பாடத்துவங்கிய முதல் பாடலிலேயே இந்த ஹைபர்லிங்க் வருவதைக் காணலாம்.

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

முதலிரண்டு வரிகளில் முருகன் ஓம் என்ற பிரணவத்தின் பொருளை சிவனுக்கு உபதேசித்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹைபர்லிங்க் ஆக அடுத்தடுத்த வரிகளில் விஷ்ணுவின் அவதாரங்களை அடுக்குகின்றார். 'பத்துத்தலை தத்தக் கணைதொடு' என்று இராமாயணத்தில் இருந்து ஹைபர்லிங்க் கொடுத்து 'ஒற்றைக்கிரி மத்தைப் பொருது' என்று மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து விட்டு 'பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல்' என்று பட்டப்பகலில் சூரியனைச் சக்கரத்தால் மறைத்த மகாபாரதக் காட்சியையும் தொட்டு அர்ச்சுனருக்குத் தேரோட்டிய பச்சைப்புயல் என்று வருணிக்கும் போது ஓ! இது வைஷ்ணவ இலக்கியமோ என்று நாம் நினைக்கின்ற போதிலேயே அப்பேர்ப்பட்ட விஷ்ணுவே மெச்சும்படியான பொருளே என்று முருகன் எனும் ஹோம்பேஜில் வந்து நிற்கின்றார்! அடுத்தடுத்த வரிகளில் கோரமான சூரபத்மனை வதைக்கும் போர்க்காட்சியையும் காட்டி ஒரே பாடலில் பல இணையப்பக்கங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தைத் தருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக