வெள்ளி, ஏப்ரல் 01, 2016

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும் - 3

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும் - 3
அடுத்ததாக நமது பகுதியிலுள்ள ஊரைப் பற்றிப் பாடிய அருணகிரிநாதர் எவ்வாறெல்லாம் தமது உத்தியைக் கையாண்டிருக்கின்றார் என்று காண்போம்.

நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித சாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இந்தத் திருப்புகழ் பாடல் பல வகைகளில் மிகச் சிறந்தது. பக்தி நிலை, சந்தத்தமிழ் பிரவாகம், சொற்சுவை, பொருட்சுவை, நயங்கள், எடுப்பு, தொடுப்பு இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

முதல் நான்கு வரிகளில் முருகன் புகழ் பாடும் அருணகிரிநாதர் தமது வழக்கமான ஹைபர்லிங்க் உத்தியை ஐந்தாவது வரியிலிருந்து எட்டாவது வரி வரை கையாண்டு பிரமிக்க வைக்கின்றார்.

ஒரு நாடு என்பது எவ்வாறிருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் வரிகளில் ஆரம்பிக்கின்றார். கேட்பவர்க்கெல்லாம் ஈதலும், பல கோலாகல பூஜையும், வேதங்களை ஓதலும், குண ஆசார நீதியும், மக்கள் மனதில் ஈரமும், குருவை மதித்து அவர் தம் சீர்பாத சேவையும் புரிவது தான் ஒரு நல்ல நாடு என்று இலக்கணம் சொல்லும் அருணகிரியார், அவ்வாறு ஏழ் தலமும் புகழ்கின்ற வகையில் இருப்பது காவிரியால் விளைகின்ற சோழ மண்டலம் என்று புவியியலும் தொட்டுத் தொடர்கின்றார்.

அப்படிப்பட்ட சோழ மண்டலத்தில் மனோகர ராஜ கம்பீரத்துடன் நாடாளும் வயலூரில் வீற்றிருக்கும் முருகனைக் காண்கின்றார். அங்கிருந்து திருவாரூர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கதைக்கு ஹைபர்லிங்க் தருகின்றார்! ஆதரம் பயில் ஆரூரர் தோழமை கொண்டு அவரோடு முன்னாளில் அழகான வெள்ளை நிறப் பரியின் (குதிரையின் ) மீதேறி கயிலை சென்று "ஆதிய‌ந்த உலா" எனும் ஆசு கவி பாடியவர் யார்? ஒரே வரியில் பல கதைகள் சொல்லும் வல்லமை அருணகிரியாருக்கு மட்டுமே இருக்க இயலும்!

சைவக் குரவர் நால்வரில் சுந்தர மூர்த்தி அடிகளாருடன் கயிலை சென்று "ஆதியந்த உலா" எனும் நூலியற்றிப் பாடியவர் சேரமான் பெருமான்

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு.

இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரரின் உற்ற நண்பர். சேர நாட்டை ஆண்டவர். சிவனை மறவாத சிந்தையுடையவர். இவர் தினமும் தம்முடைய சிவபூஜையின் முடிவில் நடராஜப் பெருமானாரின் சிலம்பொலி கேட்டு மகிழும் பாக்யம் பெற்றவர். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் சிலம்பொலி கேட்கவில்லை என்பதால் ’இனி உயிரை மாய்த்துக் கொள்வதே தக்கது’ என எண்ணி உடைவாளைத் தம் கழுத்திற்குக் கொண்டு சென்றார்.

அப்போது திடீரென சிலம்பொலி மிகுதியாகக் கேட்டார்.

”தில்லையில் சுந்தரன் நம்மைத் தீந்தமிழில் பாடி வழிபட்டான். அதிலேயே யாம் மூழ்கி விட்ட காரணத்தால் காலதாமதம் ஆயிற்று” என அசரீரியாய் அருளினார் சிவபெருமான்.

அதைக் கேட்ட சேரமான் உடனே தில்லை சென்று நடராஜர் மீது பொன் வண்ணத் தந்தாதி பாடி வணங்கினார். சுந்தரரைச் சந்தித்து அவருடன் நட்பு பூண்டார். திருவாரூர் மும்மணிக்கோவை என்பதும் சேரமான் இயற்றியதே!
சுந்தரரும் சேரமான் பெருமானும் வானுலகம் சென்றனர்.

இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளை யானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் செல்கிறார் சேரமான்

இப்போது எதற்காக சுந்தரரும் சேரமானும் என்று சிந்தித்தால், அங்கே தான் அருணகிரிநாதரின் உத்தி புலப்படும்! சேரமான் பெருமானின் நாடு கொங்கு (கேரளம் + தமிழ்நாட்டின் எல்லைப் பகுதி). அந்த கொங்கு நாட்டில் நமது கோவைக்கு அருகிலிருக்கும் பழனி மலையில் (ஆவினன் குடியில்) வீற்றிருக்கும் முருகனைப் பாடும் வகையில் தான் இத்தனை கதைகளையும் பாடி சோழ மண்டலத்தினின்று கொங்கு மண்டலத்திற்கு ஹைபர்லிங்க் தருகின்றார்!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக