புதன், மார்ச் 05, 2014

ஓட்டைப் பாத்திரங்கள்...

ஓட்டைப் பாத்திரங்கள்...



அழுக்குக் கடலில் கிழிசல் பாலங்கள்
வெற்று வெளியில் நிணநீர்ப் பாளங்கள்
மட்டை மயிர்கள் நகக்கண் துருக்கள்
பட்டைச் சருமம் பழுப்பு விழிகள்
ஈமொய்க்கும் புண்மேல் இருக்கும் கவனம்
செக்கு மாடாய் அசைபோடும் மந்திரம்
வட்டியால் தட்டி வாழ்வு வழுக்கியோர்
கள்ளக் காதல் துணையைப் பொறாதோர்
எற்றிய பிள்ளைப் பேய்கள் வெட்டியோர்
இல்லாள் மறைவால் இல்லம் மறந்தோர்
திருடனாய் இருந்து திருந்த நினைத்தோர்
மணநோய் முற்றி மனநோய் கொண்டோர்
வைத்தியம் இல்லாப் பைத்தியம் பிடித்தோர்
கால்கை இருந்தும் முடமாய் இருந்தோர்
பலகலை கற்றும் அசடாய்த் திரிந்தோர்
சித்தம் விளக்கிச் சித்தராய் விளங்குவோர்
கோடியில் புரண்டு கோடியில் புரள்வோர்
காசெலாங் கரைத்து நோயில் விழுந்தோர்
சுகதேசி ஆனதாலே பரதேசி யானோர்
முகவரி தொலைத்தே முகவரி கண்டோர்
ஏதிலியாய்ப் புகுநாட்டில் புகலிடம் பயந்தோர்
அகாரணப் பிறழ்வால் கரணம் பிழைத்தோர்
எதிர்பாரா விபத்தில் வாழக்கை இழந்தோர்
வெறும்பை சுமக்காது வெறுப்பைச் சுமந்தோர்
தாய்ப்பால் வறண்டிடச் சுடுவெயில் அலைந்தோர்
இவர்வகை இன்னும் எத்தனை எத்தனையோ ?
ஏற்பது இகழ்வெனும் அவமானந் துறந்தோர்
எதிர்காலம் ஏதெனும் கேள்வி மறந்தோர்
ஏனிப்படி என்றே பார்வையால் கேட்டேன்!
ஒருவேளைச் சோறு போட்டால் போடு
இல்லையேல் எனக்குண்டு தெருவிலே வீடு
வாய்திறவா ஏளனச் சிரிப்பாய் எதிரொலி
அழுக்கறத் தெள்ளெனப் புரிந்த சூக்குமம்
நீயும் பிச்சை நானும் பிச்சை.

3 கருத்துகள்:

  1. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த பொருளுடன் கூடிய அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு