கனம்
தன்கைப் பணத்தைத் தரையில் கொட்டித்
தங்கை மணத்தைத் தடபுடலாய் நடத்தி
முப்பதுகள் இழுக்க இருபதுகள் விரட்ட
கலியாணச் சந்தையில் கத்தரி ஒருத்தியைக்
கடமைக்காய்க் கரம்பிடித்துக் கூட்டி வந்தான்!
அம்மா மகளுடன் வாழ்வெலாம் நடந்ததில்
பெண்ணினப் பெருமை பொறுத்து அறிந்தவன்
வந்தவள் கரத்தில் அனைத்தையும் தந்து
அம்மா மகளுடன் வாழ்க்கை ஓட்டினான்!
தேடிச் சென்று முத்து கிடைப்பதுண்டு
தானே வந்து முத்து அடைவதுண்டோ?
தேடாமல் தான்வந்த முத்தாய் வந்தவள்
அன்புடன் காதலை அள்ளிப் பொழிந்தாள்!
உழைத்துப் பழுத்த துணைவியின் கரத்தில்
ஆறாண்டாய் அங்கங்கு அணைகட்டிச் சேமித்துத்
தங்கம் குறைவென மீதிக்கு அன்பெனக்
குழைத்து மோதிர மொன்று சேர்த்தான்!
சம்பளச் சுவருக்குள் சக்கையாய்ச் சிக்கிடினுங்
காலச் சக்கரத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி
மாலவன் மார்பினில் துலங்குந் திருமகளாய்
மகளொன்று பெற்றனர் உயிரென்று வளர்த்தனர்!
ஏழைகள் இன்புற்றால் இறைவன் பொறுப்பானோ?
தங்கையை மணந்த தரங்கெட்டவன் விட்டோட
செங்கையில் மருமக்கள் இருவரையும் பிடித்தபடி
மங்கையவள் நொந்துபோய் வந்தாள் தாயகம்
இரட்டை மாட்டுச் சுமையொரு மாடுதாங்குமோ?
வந்த மகராசி பொறுத்துத்தான் பார்த்தாள்!
வந்த மகராசிக்கோ நிலைமை புரியவில்லை!
பீடமறியாது சாமியாடி இல்லறத்தைக் குலைத்தாள்!
தங்கையைத் தாங்குவதா? தங்கத்தைத் தாங்குவதா?
உடன்வயிறு வாய்த்தவளா? உடன்வந்து வாய்த்தவளா?
இருதலைக் கொள்ளியில் குமைந்து போனான்
குடுமிச் சண்டையில் அன்பே வம்பானது!
இதோயின்று நானும் சளைத்தவளா என்று
தானும் தாயகம் சென்றிட்டாள் இல்லவள்.
செல்கையில் கண்ணான மோதிரத்தைக் கழற்றினாள்
அவனது உயிரையும் உறவையும் கழற்றினாள்!
ஒற்றையாய்ச் சமைந்து எங்கோ வெறித்தபடி
முழங்காலைக் கட்டிக் குறுக்கி அமர்ந்திட்டான்!
பையில் மோதிரம் இதயத்தில் அழுந்திற்று
வாழ்வின் எதிர்கால வெறுமையின் கனமாய்!
இன்றுதான் தங்கள் பதிவினுள் நுழைந்தேன்
பதிலளிநீக்குமிக இயல்பான வார்த்தைகளைக் கொண்டு
ஒரு கனமான படைப்பைக் கொடுத்துள்ளீர்கள்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி.
பதிலளிநீக்கு////சம்பளச் சுவருக்குள் சக்கையாய்ச் சிக்கிடினுங்
பதிலளிநீக்குகாலச் சக்கரத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி////
சொற்கள் கோர்க்கப்பட்ட விதம்
மிக அருமை சகோதரி...
மிக்க நன்றி.
பதிலளிநீக்கு