புதன், டிசம்பர் 07, 2011

நெஞ்சு பொறுக்குதிலையே!



தகவல் சுரங்க இணையச் சக்கரம்
அங்கே
யாவரும் சிக்கிடுஞ் சுழலாய் வக்கிரம்

கேட்டதைக் கேட்டபடி தருங்கற் பக‌மரம்
இங்கே
இருப்பது கூகுளெனும் இணைய தளம்

கேட்டேன் நேற்று அம்மாயெனும் வரம்
கண்டதும்
நெஞ்சம் சுக்கலாய்ப் போனது நிசம்

இலைமறை காய்மறை யென்று இருந்தது
இன்றோ
பிஞ்சிலே வெடித்த காயென்று ஆனது

தேடிச்சென்று கெட்டதெலாம் மலையேறிப் போய்க்
குப்பையைக்
கூட்டிநடு வீட்டில் கொட்டிடுங் கொடுமைகாண்

சுதந்திரம் விளைவித்த‌ வாழ்க்கைச் சீரழிவு
என்று
தீருமோ யாவர்க்கும் இவ்வ‌டிமை வாழ்வு

பிள்ளையைக் கண்டித்து வளர்க்கும் பெற்றோரே
மறைவில்
பித்துக் கொண்டே தவிப்புடன் காண்பரே

அன்பிலாத் தரங்கெட்ட இச்சையைத் தீர்க்க‌
எளிதாய்
வம்பெனும் நெருப்பில் விழுந்திடும் விட்டில்

வெட்காது காமத்துப் பாலே கரைபுரண் டோடின்
நற்காதல்
இன்பத்துப் பாலென்ற வள்ளுவர்க்கு இழிவன்றோ?

பயிருக்கு ஊடே களையங் கிருக்கலாம்
நச்சுக்
களையே பயிராத லெவ்வாறு தடுக்கலாம்?

2 கருத்துகள்:

  1. அருமையான எச்சரிக்கைப் பதிவு
    சாராயக் கடைகளை வீதிக்கு வீதி திறந்து வைத்து
    குடிப்பது பாவமெனப் போதனை செய்வது தவிர
    வேறு என்ன செய்ய முடிகிறது ?
    பூனைக்கு யார் மணி கட்டுவது ?

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் ரமணி. பதிலளிக்கக் கடினமான கேள்விகள்.

    பதிலளிநீக்கு