ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 33 - பனி யுகம்


33. பனி யுகம் (Ice Ages)

கண்டறிந்தவர்: லூயி அகாசிஸ் (Louis Agassiz)




கண்டறிந்த ஆண்டு: 1837

புவியின் தட்பவெப்ப நிலை அதிகமான மாறுதல் ஏதுமின்றியே எப்போதும் இருக்கின்றது என்பதே அனைவரின் யூகமாக இருந்தது. லூயி அகாசிஸோ ஐரோப்பா முழுதும் ஒரு காலத்தில் பனிப்பாறைகளாய் இருந்தது என்று அத்தாட்சியுடன் கண்டுபிடித்துச் சொன்னதும் தான் உலகத்தின் மொத்த தட்பவெப்பநிலையும் எப்போதும் மாறுதலுக்கு உட்படுகின்றது என்று உணரமுடிந்தது.

அவரது இந்தக் கண்டுபிடிப்பினாலும் அயராது அவர் சேர்த்த தகவல்களாலும் புவியின் ஆரம்ப வரலாறு பலவித ஆராய்ச்சிகளின் மூலம் அறிய வந்தது எனலாம். எப்படிக் கண்டறிந்தார் லூயி?

லூயி அகாசிஸ் தன்னை ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்பதைக் காட்டிலும் புவியியல் வல்லுநராகவே கருதிவந்தார். அவரது சொந்த நாடான ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைகளில் பல வாரங்கள் மலையேறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 1820ன் இறுதியில் ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்குகளின் முகப்புகளில் இருந்த பனிப்பாறைகளில் பல ஆர்வமூட்டும் வடிவங்கள் இருப்பதைக் கண்டார். முதலில் பனிப்பாறைகளின் அடிப்பாகம் ஆங்கில எழுத்தான 'U' வடிவிலும், அதன் பள்ளத்தாக்கின் கீழ்ப்பாகம் தட்டையாகவும் இருப்பதைக் கண்டார். அதே சமயத்தில் நதியினால் உருவான பள்ளத்தாக்குகள் ஆங்கில எழுத்தான 'V' வடிவில் இருப்பதையும் கண்டார். முதலில் இப்பனிப்பாறைகள் இயற்கையாகவே இப்பள்ளத்தாக்குகளில் உருவாகி இருக்கும் என்று ஊகித்தார் லூயி. பின்னர், இந்தப் பனிப்பாறைகளே இப்பள்ளத்தாக்குகளை 'U' வடிவத்துக்குச் செதுக்கியிருக்கின்றன என்று உணர்ந்தார்.

அடுத்ததாக பனிப்பாறைப் பள்ளத்தாக்குகளின் பக்கவாட்டுப் பாறைகளில் குறுக்காகப் படுக்கை வசத்தில் பல கோடுகளும் கீறல்களும் உருவாகி இருப்பதையும் கண்டார். இக்கோடுகள் பனிப்பாறைகளின் தற்போதைய இருப்பிடத்துக்கு ஒரு மைலோ அல்லது அதற்கு மேலாகவோ தள்ளி இருக்கக் கண்டார். மேலும், இவ்வாறு உருவான பல பள்ளத்தாக்குகளிலும் அதிசயிக்கத் தக்கவகையில் உருண்டையான பெரிய பாறைகளும், கற்குவியல்களும் அவையாவும் எப்படி வந்தன அல்லது உருவாகின என்று கண்டறிய முடியாத வண்ணம் இருப்பதைக் கண்டார்.

விரைவிலேயே, இந்தப் பனிப்பாறைகள் யாவும் அளவில் மிகப் பெரியதாகவும் மிக நீளமானதாகவும் வெகு காலத்துக்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்றும், இப்பள்ளத்தாக்குகள் உருவாகவும், அவ்வாறு உருவாகும் போது பாறைகளை உருட்டி வந்து வழியில் கீறல்களையும், பள்ளத்தாக்கின் அடியில் விநோதமான கற்குவியல்களும் உருவாக இவையே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ஊகித்தார் லூயி.

பின்னர் 1830ன் ஆரம்பத்தில் அவர் இங்கிலாந்திற்கும் மற்றும் வடக்கு ஐரோப்பாவின் பள்ளத்தாக்குகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கும் இவர் 'U' வடிவப் பள்ளத்தாக்குகளையும், குறுக்குவாட்டுக் கோடுகளையும் விநோதமான கற்குவியல்களையும் கண்டு அதிசயத்தில் ஆழ்ந்தார்.

ஸ்விட்சர்லாந்தில் இவர் கண்ட அதே காட்சி இங்கேயும் இருக்கக் கண்டார். ஆனால் அப்பகுதியைச் சுற்றிலும் பல நூறு மைல்களுக்கு எவ்விதப் பனிப்பாறைகள் மட்டும் காண இயலவில்லை! 1835ல் தான் அவரால் மற்றும் யாராலும் ஊகிக்கமுடியாத உண்மை அவருக்குள் நங்கூரம் பாய்ச்சியது! பல ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா முழுதுமே பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்க வேண்டும். இப்போது போலவே முற்காலமும் இருந்திருக்க வேண்டியதில்லை. புவியின் வெப்பநிலை மாறிக் கொண்டே இருக்கும் என்று ஊகித்தார்.

அவரது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அத்தாட்சி தேவை அல்லவா? இதற்காக அவரும் அவரது உதவியாளர்களும் இரண்டு ஆண்டுகள் ஆல்ப்ஸ் மலைப்பகுதி முழுவதிலும் காணும் பாறைகளின் வடிவங்கள், அவற்றிலுக்கும் இயற்கைக் குறியீடுகள் போன்றவற்றைக் கவனத்துடன் சேகரித்தனர்.

1837ல் தனது கண்டுபிடிப்பை அவர் வெளியிட்ட போது புவியலாளர்கள் அனைவரும் வியப்பில் வாய் பிளந்தனர்! அது வரை எந்த ஒரு விஞ்ஞானியும் இவரைப் போல் தளத் தகவல்களைச் சேகரித்துத் தனது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியதில்லை என்று பாராட்டப்பட்டார் லூயி. அவரது கண்டுபிடிப்பு அதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புவியின் வரலாறுகளைத் தகர்த்தெறிவதாக இருந்தாலும், அவர் சேகரித்த தகவல்களின் தரத்தைக் கண்டு உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டது புவியியல்.



அகாசிஸ் பனியுகம் எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்று அழகான படங்களின் மூலம் விளக்க முனைந்தார். ஆனாலும், 1920 வாக்கில் யூகோஸ்லேவியாவின் Milutin Milankovich தான் இதன் காரணத்தைக் கண்டறிந்தார். அதாவது சூரியனைப் புவி சுற்றும் பாதை மிகச் சரியான வட்டமாகவோ, அல்லது ஒரே வடிவத்தினை உடையதாகவோ எப்போதுமே இருந்ததில்லை. அவரது ஆராய்ச்சியின் படி, புவியின் சுற்றுப் பாதை வட்ட வடிவத்திலிருந்து நீள வட்ட வடிவத்திற்கு 40000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊசலாடிச் சென்று வருகின்றது என்பது நிரூபணமானது. புவி நீள்வட்டப்பாதையின் போது சூரியனை விட்டுத் தொலைவில் செல்லும் சமயத்தில் பனியுகங்கள் உருவாகின்றன. புவியின் பல பகுதிகள் பனியால் மூடப்படுகின்றன. தட்பவெப்பநிலை மாற்றங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் நிகழ்கின்றன. 2003 முதல் 2005 வரை நாசாவின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ந்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

4 கருத்துகள்:

  1. மஞ்சுபாஷிணி அக்கா அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட லிப்ஸ்டர் விருதினை தங்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்..

    விருது குறித்து மேலும் பார்க்க: http://sivahari.blogspot.com/2012/09/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சிவஹரி. வருகைக்கும் விருதுக்கும். :)

      நீக்கு
  2. அறியாத பல தகவல்கள்... நல்ல பகிர்வு...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_15.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு