வியாழன், ஏப்ரல் 12, 2012

பரிசாக் கிடைச்சதெலாம்...

திங்கஆகாத் தங்கத்துக்கு மதிப்பைப் பாரய்யா!
பொங்கும் அன்னபூரணியை மதிப்ப தாரய்யா?

வெளஞ்ச நெல்லைக் கூட்டிஅள்ளி வித்துப்பாத்தாலும்
வெலையில்லாக் கொடுமையை நான்என்னான்னு சொல்லுவேன்?

கடலுக்குள்ள முழுகுனாலும் மிதந்து வந்துடலாம்
கடனுக்குள்ளே முழுகுனதை நான்என்னான்னு சொல்லுவேன்?

கோமணந்தான் மிஞ்சிருக்கு இருப்பு வகையிலே
மத்ததெல்லாம் காத்திருக்கு அடகுக் கடையிலே


பரிசாக் கிடைச்சதெலாம் நட்டந் தானய்யா!
தரிசாப் போட்டாக்கூட லாபந் தானய்யா!

உரத்தால‌ தாய்ப்பாலுஞ் சாக்கடை யாச்சு
வெதவெதமா விதைபோட்டு மலடு மாச்சு

பேஞ்சுபேஞ்சு கெடுப்பதுவும் மழை தானய்யா
பேயாமாலே கெடுப்பதுவும் மழை தானய்யா!

இளைச்சு இளைச்சு ஒடம்பெலாம் ஓடாத்தேயுது
வளைச்சு வளைச்சு நிலமெல்லாம் வீடாமாறுது!

நேத்து வந்துகருங்காலி விலையைப் பேசுறான்
பெத்ததாயை வித்துப் போட்டா கேவலமய்யா!

1 கருத்து: