ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 32

32. உலகின் முதல் டினோசர் படிமம் (First Dinosaur Fossil)

கண்டறிந்தவர்கள்: ஜிடியோன் மேன்டெல் மற்றும் வில்லியம் பக்லேண்ட் (Gideon Mantell and William Buckland)


கண்டறிந்த ஆண்டு: 1824

விஞ்ஞானிகள் உட்பட அனேகமானோர் இவ்வுலகில் இப்போதிருக்கும் உயிரினங்களும், மரம், செடி, கொடி வகைகளும் உலகம் தற்போது இருப்பது போலவே தான் எப்போதும் இருந்து வருகின்றது என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையை டினோசர்களின் படிமங்கள் உடைத்தெறியும் வண்ணம் இருந்தன. அது மட்டுமன்றி அவைகளின் படிமங்களின் மூலம் நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவிலும் வடிவத்திலும் பல மிருகங்களும் புவியில் வாழ்ந்து தற்போது உருத்தெரியாமல் அழிந்திருக்கின்றன என்று கண்டறிய முடிந்தது.

இது தொல்பொருள் மற்றும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய உயிரியல் ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என்றால் அது மிகையானதல்ல. சாதாரண மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருந்த டினோசர்கள் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் முற்காலத்தில் வாழ்ந்திருக்கின்றன என்று நிரூபணம் ஆனது.

எவ்வாறு கண்டறியப்பட்டது?

எலும்புகளின் படிமங்கள் முன்பே கண்டறியப்பட்டிருந்தாலும், அவைகள் வழக்க‌ழிந்து போன மிருகங்களினுடையவை என்று யாருமே கற்பனை செய்து பார்க்கவில்லை. 1677ல் ராபர்ட் ப்ளாட் எனும் ஆங்கில விஞ்ஞானி கண்டுபிடித்த படிம எலும்பு 220 ஆண்டுகள் கழித்து அது ஒரு மிகப்பெரிய மாமிசபட்சிணி டினோசரின் தொடை எலும்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது! அதைக் கண்டறிந்த போது அது ஒரு பெரிய மிருகத்தின் விரை என்று கூறி அதன் மூலம் புகழ் பெற்றிருந்தார் ப்ளாட். அறிவியலைப் பொருத்தவரை இரு ஆங்கில விஞ்ஞானிகள் தனித்தனியே 1824ல் கண்டறிந்து வெளியிடும் வரை இந்த விஷயத்தில் ஒரு இருண்ட பகுதியாகவே இருந்தது. எனவே அவ்விருவரும் டினோசரைக் கண்டுபிடித்ததைப் பகிர்ந்து கொண்டனர்.

1809ல் (டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு) ஆங்கில நாட்டுப்புற வைத்தியரான ஜிடியோன் மேன்டெல் இங்கிலாந்தில் லிவிஸ் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். ஒரு நோயாளியைக் காணச் சென்ற போது மேன்டெல்லின் மனைவி மேரி ஆன் அவரிடம் ஒரு பெரிய பையிலிருந்து சில பற்களை எடுத்து அவரிடம் காட்டினார். அந்தப் பற்கள் மிகப் பெரியதாக இருந்ததோடன்றி, அது ஒரு சைவபட்சிணியின் பற்கள் என்பதும் அவ்வளவு பெரிய பற்கள் கொண்ட மிருகம் தற்போது கிடையாது என்பதும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. மேன்டெல் புவியியலிலும் தன்னார்வம் மிகுந்தவர் என்பதால், முற்கால விலங்குகளின் படிமங்களைப் பல ஆண்டுகளாக சேகரித்து வந்தார். அவரால் அப்பற்களை எம்மிருகத்தினுடையது என்று அடையாளம் காண இயலவில்லை. ஆனால் அவரால் அந்தப் பற்கள் கிடைத்த இடத்திற்குச் சென்று அங்கிருந்த பாறைகளின் வயதைக் கொண்டு அவை மெசோசிக் காலத்தையது என்றும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. 

(நன்றி: விக்கிபீடியா)

அவ்விடத்தில் அவருக்குக் கிடைத்த முதல் பொருள் இந்தப் பல் அல்ல. ஆனால், இந்தப் பல் தான் மிக அதிசயிக்கத்தக்க அளவில் இருந்தது. அவர் அதை புகழ்மிக்க பிரெஞ்ச் இயற்பியலாளர் சார்லஸ் சூவியரிடம் சென்று காட்டினார். அவரோ அந்தப் பல் ஏதாவது காண்டாமிருகம் போன்ற மிருகத்தின் பல்லாக இருக்கும் என்று யூகித்தார். அதன் பின் மேன்டெல் அதைத் தனியே ஒரு புறமாய் வைத்துக் கொண்டார்.

1822ல் இக்வானா எனும் பல்லி இனத்தின் பற்களைக் கண்டபோது அவை தாம் 13 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட பற்களின் மிகச் சிறிய வடிவமாக இது இருக்கின்றதே! என்று அதிசயமாக ஒப்பிட்டுப் பார்த்தார் மேன்டெல். அந்தப் பல் கிடைத்த இடத்தில் கிடைக்கப்பெற்ற மற்ற எலும்புகளுடன் சேர்த்து வைத்துப் பார்த்து விட்டு மேன்டெல் தான் பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்து போன பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு மாபெரும் மிருகத்தைக் கண்டறிந்ததாக அறிவித்தார். அதற்கு இக்வானாடூன் (இக்வானா பல் கொண்ட) என்றும் பெயர் சூட்டினார். அவரது கண்டுபிடிப்பை 1824ல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

அதே காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பேராசிரியராக இருந்த வில்லியம் பக்லேண்ட் இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ்பீல்ட் பகுதியில் படிமங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். 1822ல் அவர் ஒரு பழங்கால மாபெரும் மிருகத்தின் தாடை மற்றும் பல தொடை எலும்புகளைக் கண்டறிந்தார். அதே மிருகம் தான் 150 ஆண்டுகளுக்கு முன்பே ராபர்ட் ப்ளாட் கண்டறிந்த மிருகம் என்றும் ஆனால் அவரால் சரியாக இனங்காண முடியாத மிருகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பக்லேண்ட் அம்மிருகம் இரண்டு கால்களை உடைய ஒரு மாமிச பட்சிணி என்று கண்டறிந்தார். அதன் எலும்பமைப்பைக் கொண்டு அது ஒரு ஊர்வன/பல்லி இனத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தார் பக்லேண்ட். அதை அவர் மெகாலோசரஸ் (மாபெரும் பல்லி) என்று பெயரிட்டு அழைத்து அதை 1824ல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இவ்விரு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் டினோசர்களின் காலம் வெளிச்சத்துக்கு வந்தது.

3 கருத்துகள்:

  1. ராபர்ட் ப்ளாட், ஜியோடின் மேண்டெல், வில்லியம் பக்லேண்ட் என பலரது கருத்துகளை முடிவாகக் கொண்டு டைனோசர் என்ற பல்லியினத்தினைச் சேர்ந்த உயிர் வாழ்ந்திருந்ததாக அறிய முடிகின்றது. அதன் படிமம் ஆசிய பகுதியில் கிடைக்கமலே போனதன் மர்மம் தான் என்னவோ

    பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த தொகுப்பு மிகவும் தேவையான பணி. அடிப்படை அறிவியலைத் தமிழில் படிக்கும்போது மனதில் நன்கு பதிகிறது. உங்கள் உழைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சிவஹரி, குலவுசனப்பிரியன்

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு