அடிமையும் சுதந்திரமும்...
கருப்புக் கும்மிருட்டில்
பெருக்கல் குறியிட்டு
அடிமையாய்க் குறுகிப்
பனிக்குடத்தில் தலைகீழாய்த்
தசமாதத் தவமிருந்தேன்.
வலிகொடுத்து வழிபெற்று
வெளிவந்த கோலத்திலே
கண்ணள்ளிய ஒளிவெள்ளக்
காட்சியதைக் கவனிக்காது
கவலையின்றி மறந்திட்டேன்!
காலம்போன காலத்திலே
கண்சொருகித் திரைவிழுந்து
விழிவிரித்துப் பார்த்தாலும்
ஒளிசுருங்கிப் போகையிலே
காண்கின்ற காட்சியது
மனத்திரையில் புகைப்படமாய்
நிலைக்குமா? என்னுங்
கவலையிலே திளைத்துக்
காட்சியையே மறந்திட்டேன்
வாழ்க்கை நாடகத்தின்
திரைவிழுந் தருணத்தில்
காட்சிகளே சாட்சிகளாய்
அனைவரும் நினைக்கையில்
திரைகாட்டும் வெறுமையில்
பெருக்கல் குறியிட்டுக்
கருப்புக் கும்மிருட்டில்
சுதந்திரமாய்க் கலந்துவிட்டேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக