சனி, டிசம்பர் 24, 2011

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 2

2. சூரியனை மையமாகக் கொண்டு புவி சுற்றி வருகின்றது.
கண்டறிந்தவர்: நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
காலம்: கி.பி. 1520


கோப்பர்நிக்கஸ் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியாளர். தான் சேகரித்த பல தகவல்களையும், தனக்கு முன்னர் பலர் சேகரித்திருந்த தகவல்களையும் வைத்து 2000 ஆண்டுகளாக மக்கள் நம்பிக் கொண்டிருந்த புவிமையக் கொள்கையை மாற்றி சூரிய மையக் கொள்கையை எடுத்து வைத்தார். மேலும், அறிவியலில் சேகரித்திருக்கும் தகவல்களை வைத்து முடிவுக்கு வரலாம் என்ற வழிமுறையையும் கொண்டு வந்தார். அதற்கு முன்பு வரை யாராவது ஒருவரின் எண்ணத்தில் தோன்றுவதாகத் தான் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. இவரோ பல தகவல்களை வைத்து இப்படித் தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார். இப்போது பல கண்டுபிடிப்புகள் இந்த வழிமுறையின் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. எனவே அந்த வகையிலும் இவர் முன் நிற்கின்றார்.


கோப்பர்நிக்கஸ் இதைக் கண்டறிந்தது எவ்வாறு?



1499ல் இத்தாலியில் தனது பல்கலைப் படிப்பை முடித்த நிக்கஸ் போலந்தில் இருக்கும் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அவருக்கு தேவாலயக் கோபுரத்தின் மேல் பகுதியில் அறை இருந்தது. அங்கிருந்து தனது வானியல் ஆராய்ச்சியை ஆரம்பித்தார் நிக்கஸ்.



அவரது காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க விஞ்ஞானி ஃப்டோளெமி உருவாக்கிய புவிமையக் கொள்கை நடைமுறையில் இருந்தது. அதாவது புவி நிலையாக நிற்பதாகவும், சூரியனிலிருந்து மற்ற கோள்கள் யாவும் புவியை ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. நட்சத்திரங்கள் யாவும் ஒரு மிகப் பெரிய கோள இடத்தின் வெளிப்புறத்தில் நிலையாக நிற்பனவையாகவும் கருதப்பட்டன. 



ஆனால், நாளாக நாளாக ஃப்டோளெமியின் வட்டப்பாதை விளக்கங்கள் சரியாக இல்லை. காரணம் அவர் குறித்த பாதையில் கோள்கள் தென்படாமல் விலகித் தெரிந்தன. அடுத்து வந்தவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றியே வட்டப்பாதையை நீள் வட்டப் பாதையாக மாற்றிப் பார்த்தனர். அப்போதும் தவறு ஏற்பட ஆரம்பித்தது. நீள் வட்டங்களுக்குள் நீள் வட்டங்கள் என்று முயற்சி செய்தனர். அப்போதும் சிறிய அளவில் தவறுகள் ஏற்பட்டன. 



20 ஆண்டுகளாகத் தினமும் கோள்கள் இருக்கும் இடத்தினைக் குறித்து வைத்து அதனுடன் ஃப்டோளெமி மற்றும் மற்றவர்களின் கணிப்பையும் வைத்துச் சரிபார்த்த நிக்கஸ் இரண்டும் கொஞ்சமும் ஒத்துப் போகாததைப் பார்த்து அயர்ச்சியுற்றார். 



சரி, ஒவ்வொரு நகரும் கோளிலிருந்து இன்னொரு நகரும் கோள் எவ்வாறு பார்வைக்குத் தெரியும் என்று கணித்துப் பார்த்தார். அவை சரியாக நீள் வட்டங்களில் நகர்வது கண்டு ஆச்சரியமுற்றார். அப்படியானால் புவியும் ஒரு நகரும் கோளாக இருந்தால் என்னாகும்? என்று யோசனை தோன்றியது. இவ்வாறு அவர் முடிவுக்கு வரக் காரணம், ஒவ்வொரு கோளும் ஆண்டு முழுதும் வெவ்வேறு இடத்திலேயே தோன்றின. அது அவருக்குக் குழப்பமளித்தது. புவி மையமானதாக நகராததாக இருந்து கோள்கள் வட்டப்பாதையில் சுற்றி வந்தால் கோள்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே வரவேண்டுமே! அவ்வாறு வரவே இல்லையே! எனவே தான் புவியும் நகர்கின்றதோ என்று அவருக்குத் தோன்றியது.



அவரது 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் சூரியன் மட்டுமே தனது அளவு மாறாமல் தெரிகின்றது என்றும் மற்ற கோள்கள் சிறியதாகவும் பின்னர் பெரியதாகவும் தோன்றுகின்றன என்றும் அறிந்தார். ஆக, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் மாறுவதில்லை என்று உணர்ந்தார். 



ஆக, பூமி நகர்கின்றது என்பது ஒரு முடிவு. சூரியனுக்கும் பூமிக்கும் தூரம் மாறவில்லை என்பது ஒரு முடிவு. இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தார். சூரியனை நடுவே கொண்டு பூமி சுற்றினால் மட்டுமே இது சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார். அவரது கண்டுபிடிப்பை மையமாகக் கொண்டு அளந்து பார்த்தார். 



என்ன ஒரு அதிசயம்! சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் யாவும் ஒரே வட்டப்பாதையில் சுழன்று வந்தன. நாளை இந்தக் கோள் இங்கே தான் தெரிய வேண்டும் என்று அவரால் எளிதாக யூகிக்க முடிந்தது. என்ன ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு?



ஆனால், சோகம் என்னவென்றால், ஏற்கனவே இருப்பதை மறுத்துச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரது ஆராய்ச்சிக்குறிப்புகளைப் பதுக்கியே வைத்திருந்தார். 1543ல் அவரது கண்டுபிடிப்புகள் அவரது வாழ்நாளுக்குப் பிறகே வெளிவந்தன. அதன் பின்னரும் 60 ஆண்டுகளாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. 



கெப்ளரும், கலிலியோவும் பல சோதனைகள் மூலம் சூரியமையக் கொள்கையினை நிரூபித்து கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்பு சரியானதென்று உறுதி செய்த பின்னரே அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 1

 மிகவும் புகழ்பெற்ற 100 Greatest Science Discoveries Of All Time என்னும் அழகான அறிவியல் புத்தகத்தின் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் பகிர்ந்து கொள்கின்றேன். இதை அரும்பாடுபட்டுத் தொகுத்தவர் Kendall Haven ஆவார். மூலப் புத்தகத்தின் அருகில் கூடக் கொண்டு செல்ல முடியாவிடினும், என்னால் இயன்ற வரை தர முயற்சி செய்கின்றேன். 

1. நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்
கண்டறிந்தவர்: ஆர்க்கிமிடிஸ்
காலம்: கி.மு.260

இவ்விரண்டு தத்துவங்களை இவர் கண்ட விதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. 

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு இடுப்புயரக் கல்லின் மேல் ஒரு நீளமான பலகையைப் போட்டு ஒருபக்கம் மூன்று மாணவர்களும், இன்னொரு புறம் ஒரே ஒரு மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இருந்தாலும் யாரும் கீழே விழவில்லை. எப்படி ஒரு மாணவனால் அந்தப் பக்கம் இருக்கும் மூன்று மாணவர்களும் கீழே விழாமல் நிற்க வைக்க முடிகின்றது என்று யோசித்தார். இதற்கு முன்பே அனுபவத்தில் பலர் கண்டு பயன்படுத்தி வந்தாலும் ஆர்க்கிமிடிஸ் நெம்புகோல் தத்துவத்தைப் பற்றி உணர்ந்து அதன் தன்மைகளை அளந்து வைத்தார். பல சமன்பாடுகளின் மூலம் விளக்க முனைந்தார். அவரது கண்டுபிடிப்பு இன்றும் இயற்பியலிலும், பொறியியலிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இன்னொன்று மிகவும் புகழ்பெற்றது தான். அரசர் Hieron சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது தான் அது. ஒரு சுத்தமான தங்கக்கட்டியைக் கொடுத்து கிரீடம் செய்து தரச் சொன்னார் அரசர். பொற்கொல்லர் செய்து கொண்டு வந்த கிரீடத்தில் தங்கம் தான் இருக்கின்றதா அல்லது வேறு ஏதேனும் உலோகம் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதே அரசரின் ஐயம். தராசில் எடை மிகச் சரியாகவே இருந்தது. 

இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்த போது இந்த வாய்ப்பை ஆர்க்கிமிடிஸிடம் தந்தார் அரசர். 

ஆர்க்கிமிடிஸ் குளியலறைத் தொட்டியில் குளிக்கும் போது தண்ணீரின் மட்டம் உள்ளே அமிழ்வதால் மாறுவதைக் கண்டறிந்தார். ஒரே எடையுடைய ஒரு கல் மற்றும் ஒரு தக்கையைத் தண்ணீரின் மேல் போட்டார். கல் அமிழ்ந்து விட்டது. தக்கை மிதந்தது. இரண்டும் ஒரே எடையுடையது தான் என்றாலும் அது தண்ணீரின் மட்டத்தை மாற்றும் அளவு மாறுபடுகின்றது என்பதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அடர்த்தி இருக்கின்றது என்றும் அறிய முடிந்தது. 'யுரேகா' என்று கூவியபடி அரசவைக்கு ஓடினார். 

தங்கத்தின் அடர்த்தி வேறு. வேறு உலோகங்களின் அடர்த்தி வேறு. சுத்தமான தங்கம் தண்ணீர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும், கிரீடம் தண்ணீர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும் அளந்து கிரீடத்தில் வேறு உலோகம் கலந்திருக்கின்றது என்று நிரூபித்து பொற்கொல்லனைத் தண்டிக்க வைத்தார். 

ஆக, நெம்புகோல் தத்துவம் மற்றும் அடர்த்தி ஆகியவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்திய வகையில் உலகின் நூறு கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்களில் ஒருவராய் இன்றும் வலம் வருகின்றார்.

கனம்





கனம்

தன்கைப் பணத்தைத் தரையில் கொட்டித்
தங்கை மணத்தைத் தடபுடலாய் நடத்தி
முப்பதுகள் இழுக்க இருபதுகள் விரட்ட‌
கலியாணச் சந்தையில் கத்தரி ஒருத்தியைக்
கடமைக்காய்க் கரம்பிடித்துக் கூட்டி வந்தான்!

அம்மா மகளுடன் வாழ்வெலாம் நடந்ததில்
பெண்ணினப் பெருமை பொறுத்து அறிந்தவன்
வந்தவள் கரத்தில் அனைத்தையும் தந்து
அம்மா மகளுடன் வாழ்க்கை ஓட்டினான்!

தேடிச் சென்று முத்து கிடைப்பதுண்டு
தானே வந்து முத்து அடைவதுண்டோ?
தேடாமல் தான்வந்த முத்தாய் வந்தவள்
அன்புடன் காதலை அள்ளிப் பொழிந்தாள்!

உழைத்துப் பழுத்த துணைவியின் கரத்தில்
ஆறாண்டாய் அங்கங்கு அணைகட்டிச் சேமித்துத்
தங்கம் குறைவென‌ மீதிக்கு அன்பெனக்
குழைத்து மோதிர மொன்று சேர்த்தான்!

சம்பளச் சுவருக்குள் சக்கையாய்ச் சிக்கிடினுங்
காலச் சக்கரத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி
மாலவன் மார்பினில் துலங்குந் திருமகளாய்
மகளொன்று பெற்றனர் உயிரென்று வளர்த்தனர்!

ஏழைகள் இன்புற்றால் இறைவன் பொறுப்பானோ?
தங்கையை மணந்த தரங்கெட்டவன் விட்டோட‌
செங்கையில் மருமக்கள் இருவரையும் பிடித்தபடி
மங்கையவள் நொந்துபோய் வந்தாள் தாயகம்

இரட்டை மாட்டுச் சுமையொரு மாடுதாங்குமோ?
வந்த மகராசி பொறுத்துத்தான் பார்த்தாள்!
வந்த மகராசிக்கோ நிலைமை புரியவில்லை!
பீடமறியாது சாமியாடி இல்லறத்தைக் குலைத்தாள்!

தங்கையைத் தாங்குவதா? தங்கத்தைத் தாங்குவதா?
உடன்வயிறு வாய்த்தவளா? உடன்வந்து வாய்த்தவளா?
இருதலைக் கொள்ளியில் குமைந்து போனான்
குடுமிச் சண்டையில் அன்பே வம்பானது!

இதோயின்று நானும் சளைத்தவளா என்று
தானும் தாயகம் சென்றிட்டாள் இல்லவள்.
செல்கையில் கண்ணான‌ மோதிரத்தைக் கழற்றினாள்
அவனது உயிரையும் உறவையும் கழற்றினாள்!

ஒற்றையாய்ச் சமைந்து எங்கோ வெறித்தபடி
முழங்காலைக் கட்டிக் குறுக்கி அமர்ந்திட்டான்!
பையில் மோதிரம் இதயத்தில் அழுந்திற்று
வாழ்வின் எதிர்கால வெறுமையின் கனமாய்!

செவ்வாய், டிசம்பர் 13, 2011

மேகச் சித்திரங்காள்!



மேகச் சித்திரங்காள்! வானத் திரையில்
அழகுப் பதுமையா யெண்ணிலா வடிவெடுத்து
வளர்ந்து அழிந்து வளர்ந்து அழிந்து
மாயாது கலைவதன் காரணம் யாதோடி?

நாளொரு புதுமையாய் பொழுதொரு வடிவமாய்
நடைபயின் றாலுமெமை வாழ்த்தி ரசிப்பரோ?
நாளொரு பிறையுடன் முகமுழு கறையுடன்
தேய்ந்திடும் நிலவையே அழகென்ப‌ர் ஏனோ?

அடிப்போடி!
அவரவர் இயல்பில்
அவரவர் நின்றால்
பிறையின் கறையதும்
மேகம் கரைவதும்
என்றென்றும் அழகே!

உனைக் கண்டு
ரசித்து மயங்க‌
எனைப் போல்
ஆயிரம் பேருண்டு
கலங்கா திரு!
அரிதாரம் பூசாமல்
அவதாரம் எடு!

புதன், டிசம்பர் 07, 2011

நெஞ்சு பொறுக்குதிலையே!



தகவல் சுரங்க இணையச் சக்கரம்
அங்கே
யாவரும் சிக்கிடுஞ் சுழலாய் வக்கிரம்

கேட்டதைக் கேட்டபடி தருங்கற் பக‌மரம்
இங்கே
இருப்பது கூகுளெனும் இணைய தளம்

கேட்டேன் நேற்று அம்மாயெனும் வரம்
கண்டதும்
நெஞ்சம் சுக்கலாய்ப் போனது நிசம்

இலைமறை காய்மறை யென்று இருந்தது
இன்றோ
பிஞ்சிலே வெடித்த காயென்று ஆனது

தேடிச்சென்று கெட்டதெலாம் மலையேறிப் போய்க்
குப்பையைக்
கூட்டிநடு வீட்டில் கொட்டிடுங் கொடுமைகாண்

சுதந்திரம் விளைவித்த‌ வாழ்க்கைச் சீரழிவு
என்று
தீருமோ யாவர்க்கும் இவ்வ‌டிமை வாழ்வு

பிள்ளையைக் கண்டித்து வளர்க்கும் பெற்றோரே
மறைவில்
பித்துக் கொண்டே தவிப்புடன் காண்பரே

அன்பிலாத் தரங்கெட்ட இச்சையைத் தீர்க்க‌
எளிதாய்
வம்பெனும் நெருப்பில் விழுந்திடும் விட்டில்

வெட்காது காமத்துப் பாலே கரைபுரண் டோடின்
நற்காதல்
இன்பத்துப் பாலென்ற வள்ளுவர்க்கு இழிவன்றோ?

பயிருக்கு ஊடே களையங் கிருக்கலாம்
நச்சுக்
களையே பயிராத லெவ்வாறு தடுக்கலாம்?

டிசம்பர் 6




ராமரும் பாபரும் எப்போதோ ஓரிடத்தில்
பக்தரும் சோதரரும் இப்போதும் போரிடத்தில்

வந்துவிட்டது மீண்டும் ஒரு டிசம்பர் 6
மறந்து விட்ட மாந்தருக்கும் வெறியேற்றும் விதமாகத்
தரைப்படையும், ஊர்ப்படையும், வான்படையும்
நாவாயும் ஆக நாற்படையும் அமளிபட்டது!

நீட்டிப் போட்டால் திருநீறு
நிமிர்த்திப் போட்டால் திருநாமம்
குறுக்கே போட்டால் நற்சிலுவை
வளைத்துப் போட்டால் பிறையன்றோ?

மொழிமத சாதியின நிறவர்க்கக் கோடுகள்
நம்மைப் பிரிக்க நாமென்ன நிலமா?
விட்டுக் கொடுப்பதில் ஏனில்லை
இந்தப் போட்டியும் பொறாமையும்?

இந்து இந்துவாயின் அகிம்சை விடுவாரோ?
பிறையோர் பிறையோராயின் ஆயுதம் தொடுவாரோ?
வெறிகொள் பிழையோரை யாரென்று கண்டறிவோம்
பாரதத் தாய்பெற்ற களங்கத்தைத் துடைத்தெறிவோம்!

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

காத்திருக்கின்றேன்


என்தரையெங்கும் சிதறி வழியும்
எழுத்துக்களைப் பொறுக்கிப் பொருத்தி
எதுகை மோனையில் சிக்கிடாத‌
புதுக்கவி புனையும் ஆசையில்
பொருளேது மற்றதாய்ச் சிலவரிகள் ...
கவிதையென‌ எழுதிவிட நினைக்கிறேன்

எதையெதை எழுதினும் ஏதேதோ
கவிதையின் கருவாய் உருவெடுத்து
முன்வந்து நின்று தொலைத்தது!

என்னிலையைச் சொல்ல‌ நினைத்தால்
உலகெங்கும் உவமைக்கா பஞ்சம்?
இங்கெங்கும் இல்லாத உவமையைத்
தேடித் திரிகின்றேன் கொஞ்சம்!

ஒன்றுமற்றதா யொன்றைத் தேடுகையில்
மௌனமும் கூடப் பொருள்கொண்டு
அப்படியொன்று மில்லையெனக் காட்டியது!
விடவில்லை நானும்!

ஒன்றைத் தெரிந்து கொண்டேன்!
அறியாமை யிலிருந்து அறிவுக்கு
இருப்பது ஒருவழிப் பாதையென!
இருப்பதும் ஒரேவழி தானென்று
அப்புறம் தெளிந்தேன்!

வந்த காரியம் மறந்துபோய்
அறிவுப் பாதையின் முடிவு
எதுவென்று காண முயன்றேன்...

முடிவிலா அப்பாதையில்
அறிவின் தொடர்ச்சி அறியாமை
அறியாமையின் தொடர்ச்சி அறிவென‌
மாறிமாறி வந்து கொண்டேயிருக்க...
அடுத்த அறியாமை வரட்டும் என்றே
காத்திருக்கின்றேன்....